சென்னை சில்க்ஸ் கட்டிடம் காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை எவ்வளவு? - உரிமையாளர் தகவல்


சென்னை தியாகராயநகர் பகுதியில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் எவ்வளவு ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அதன் உரிமையாளர் மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்ட பின்னர், அங்கு தீபாவளிக்குள் புதிய கட்டிடம் கட்டப்படும்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை ரூ.200 கோடிக்கு காப்பீடு செய்து வைத்திருந்தோம்.

இந்தக் கடையில் சுமார் ஆயிரம் ஊழியர்கள் வரை பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அனைவரும் வேறு கிளைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்று சென்னை சில்க்ஸ் உரிமையாளர் கே.மாணிக்கம் தெரிவித்தார்.

சென்னை சில்க்ஸ் கட்டட வளாகத்தில் இருந்த, பிரம்மாண்ட தரைகீழ் தண்ணீர் தொட்டியினால், அக்கட்டிடத்தை இடிக்கும் பணி பல மணிநேர தாமதத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

சுமார் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தரைகீழ் தண்ணீர் தொட்டியின் மீது கிரேன், பொக்லைன்களை ஏற்றி கட்டடத்தை இடித்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இதையடுத்து, தரைகீழ் தண்ணீர் தொட்டியின் மேற்பகுதியை உடைத்து, அந்த தொட்டியின் பள்ளமான பகுதியை நிரப்பும் பணி காரணமாக, கட்டிடத்தை இடிக்கும் பணி திட்டமிட்ட நேரத்தைவிட சுமார் 19 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது.

கட்டிடம் இடிக்கும் பணிக்காக ஜாக் கட்டர் உள்பட 4 கிரேன்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் கட்டிடத்தை இடிக்கும் பகுதியில் போதிய இடவசதி இல்லாததால், ஒரு நேரத்தில் ஒரு இயந்திரம் மட்டுமே பணி செய்ய முடிந்தது.

இதில் ஜாக் கட்டர் இயந்திரம் மட்டும் சுமார் 85 அடி உயரம் வரை பணி செய்யும் திறன் கொண்டது. இந்த இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 20 ஆயிரம் கட்டணமாக வழங்கப்படுகிறது.

கட்டட இடிப்பு பணிக்காக தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் 75 பேர், சென்னை சில்க்ஸ் வளாகத்தில் முகாமிட்டிருந்தனர். பாதுகாப்புக்காக, 300 போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட சென்னை சில்க்ஸ் ஊழியர்களும் கட்டிட இடிப்பு பணிகளில் உதவி வருகின்றனர்.

சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் சுமார் 250 கிலோ தங்கநகை, ரூ.30 கோடி மதிப்புள்ள வைர நகைகள், செவ்வாய்க்கிழமை வசூலான பணம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

தீ விபத்து, கட்டிட விபத்து என எத்தகைய சூழ்நிலையையும் தாக்கும் வகையில் இந்த பெட்டகம் வடிவமைக்கப்பட்டதாகும். இதனால் தற்போது ஏற்பட்டுள்ள விபத்தின் காரணமாக இப்பெட்டகம் பாதிக்கப்பட்டிருக்காது என கருதப்படுகிறது.

மேலும், கட்டிடத்தை முழுமையாக இடித்த பின்பே பாதுகாப்பு பெட்டகத்தை அங்கிருந்து மீட்பது என காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியதையடுத்து, அங்கிருந்து அதிகப்படியான கட்டிட தூசு வெளியேறியது. இந்த தூசு அந்தப் பகுதி முழுவதும் பரவியதால், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்சினையும், கண் எரிச்சலும் ஏற்பட்டது.

இதனால் சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்பு பணி நடைபெறும் பிஞ்சால சுப்ரமணியம் தெருவிலும், வடக்கு உஸ்மான் சாலையிலும், மருத்துவ உதவிக்காக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என 15 பேர் அடங்கிய இக்குழுவினர், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த மருத்துவக் குழுக்களிடம் இடிபாடுகளில் இருந்து கிளம்பும் தூசியிலிருந்து காத்துக்கொள்ள முகமூடிகள், காயத்துக்கான தடுப்பூசிகள், கண் எரிச்சல், தோல் அரிப்பு ஏற்படாமல் இருக்க மருந்துகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv