50 வயதை கடந்தும் திருமணம் ஆகாத ஜப்பானிய ஆண்கள்: வெளியான ஆய்வறிக்கை...


ஜப்பான் ஆண்களில் நான்கில் ஒரு பகுதியினர் 50 வயதை கடந்தும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த ஆய்வினை மேற்கொண்ட அமைப்பானது இதற்கான மிக முக்கியமான காரணத்தையும் வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 50 வயது கடந்த ஜப்பானிய பெண்களில் 7 பேரில் ஒருவர் திருமண பந்தத்தில் ஈடுபடாமல் தனித்து வாழ்வதாக தெரிய வந்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது கடந்த 1920 ஆம் ஆண்டில் தேசிய கணக்கெடுப்பு மேற்கொண்ட காலத்தில் இருந்து மிக அதிகமென அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 2010 ஆம் ஆண்டு மேற்கொண்ட கருத்துக்கணிப்பினை விடவும் 3.2 விழுக்காடு ஆண்கள் தரப்பிலும் 3.4 விழுக்காடு பெண்கள் தரப்பிலும் அதிகரித்து காணப்படுகிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் உரிய வயதில் திருமண பந்தத்தில் இணையாமல் வாழ்வதற்கான முக்கிய காரணியாக கருதப்படுவது, அவர்களுக்கு திருமண பந்தம் குறித்த சமூக அழுத்தம் இல்லை என்பதும் சுயமாக உழைத்து சம்பாதிக்கும் நிலையில் இருப்பதால் நிதி நெருக்கடி என்பது இல்லை எனவும் காரணமாக தெரிவிக்கின்றனர்.

ஜப்பானில் திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபக்கம் இருந்தாலும் தற்கால ஜப்பானிய இளைஞர்களில் திருமண மோகம் என்பது அறவே இல்லை எனவும் குறித்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 30 வயதை கடந்த 4 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்கள் போதிய வருவாய் இன்றி பெற்றோரின் ஊதியத்தில் வாழ்ந்து வருவதாகவும் குறித்த ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இதே நிலை நீடித்தால் 2065 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஜப்பான் முழுவதும் மூத்த குடிமக்கள் மட்டுமே இருப்பார்கள் என்ற பகீர் தகவலையும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ஜப்பானில் பிறப்பு விகிதம் 10 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளது.

முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜப்பான் சனத்தொகை கணக்கெடுப்பின் போது திருமண பந்தத்தில் இணையாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் ஒட்டு மொத்த சனத்தொகை 127 மில்லியனில் இருந்து 88 மில்லியன் என சரிவை சந்திக்கும் என்று எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv