உலகிலேயே கப்பல்களுக்கான முதலாவது சுரங்கப்பாதை நோர்வேயில்!


உலகிலேயே முதன்முதலாக கப்பல் போக்குவரத்துக்காக 315 மில்லியன் டொலர் (ஏறக்குறைய 47 ஆயிரம் கோடி ரூபா) செலவில் சுரங்கம் ஒன்றை அமைக்க நோர்வே திட்டமிட்டுள்ளது.

நோர்வேயின் மேற்குப் பகுதியில் உள்ளது ஸ்டாட் தீபகற்பம். இது, நோர்வேயின் மிக அபாயகரமான கடற்கரைப் பகுதியாகக் கருதப்படுகிறது.

இப்பகுதியின் பௌதிக அமைவின்படி, காற்று எத்திசையில் இருந்து வீசும் என்பதை எதிர்வுகூற முடியாது. மேலும், ஒரே நேரத்தில் பல திசைகளில் இருந்தும் கடும் காற்று வீசும். இதனால், ஸ்டாடவட் என்று சொல்லப்படும் இந்தக் கடற்பகுதியின் சகல திசைகளில் இருந்தும் பேரலைகள், கடற்சுழிகள் என்பன எழும்.

ஒரு நாள், இரண்டு நாட்கள் என்று அல்லாமல் ஏறக்குறைய வருடத்தின் அரைவாசி நாட்களில் இதேபோன்ற கடுமையான கால நிலையே நிலவும். இதனால், இப்பகுதியாகப் பயணிக்க வேண்டிய கப்பல்கள் கால நிலை சீராகும் வரை பல நாட்கள் கடலிலேயே காத்திருக்க வேண்டியிருக்கும்.

இந்தக் கால விரயத்தைத் தவிர்ப்பதன் மூலம் அப்பகுதி வழியான கடல் போக்குவரத்தைச் சுமுகமாக்குவதன் மூலம் தேசிய வருமானத்தை அதிகரிக்க நோர்வே எண்ணியுள்ளது. இதற்காக, குறித்த பகுதியின் சுமார் எட்டு மில்லியன் தொன்கள் எடையுள்ள பாறையைக் குடைந்து இந்தச் சுரங்கம் அமைக்கப்படவுள்ளது. ஒரு மணித்தியாலத்தில் ஐந்து கப்பல்கள் வரை இந்தச் சுரங்கம் வழியாகப் பயணிக்க முடியும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டம், 2023ஆம் ஆண்டளவில் பூர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv