தமிழ்நாட்டில் பிறந்து...இந்திய அணிக்கு வெற்றிகளைத் தேடித் தரும் தமிழன்....


இலங்கை அணியில் முரளிதரன், அவுஸ்திரேலியாவில் ஷேன்வார்னே, பாகிஸ்தானில் சக்லைன்முஸ்தாக் என பல சுழற்பந்து வீச்சாளர்கள் உலக கிரிக்கெட் அரங்கில் தங்களுக்கென ஒரு முத்திரை பதித்துள்ளனர்.

அதே போன்று தான் தற்போது இந்திய அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளரும் மற்றும் பன்முக ஆட்டக்காரருமான ரவிச்சந்திர அஸ்வின் தன்னுடைய பந்து வீச்சால் மாயாஜாலம் காட்டி வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட் உலகில் கால்பதித்து குறைந்த காலக்கட்டங்களிலே பல சாதனைகள் படைத்து சாதனையின் உச்சிக்கு சென்றுள்ளார். இவர் எப்படி கிரிக்கெட் உலகிற்கு வந்தார் என்பதை பற்றி பார்ப்போமா..

ரவிச்சந்திரன் அஸ்வின் 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி தமிழ்நாட்டில் பிறந்தவர். தற்போது இவர் சென்னையில் உள்ள மேற்கு மாம்பலத்தில் வசித்து வருகிறார்.

அஸ்வின் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு பன்முக ஆட்டக்காரராக விளையாடி வந்தார். அதன் பின் 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

அத்தொடரில் அஸ்வினின் பந்து வீச்சு சற்று வித்தியாசமாக இருந்தது. இதனால் அவர் அத்தொடரில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.


2010 ஆம் ஆண்டு பிரிமியர் லீக்கில் அசத்திய அஸ்வின் அதே ஆண்டு ஜுன் மாதம் தன்னுடைய முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியை இலங்கை அணிக்கு எதிராக துவக்கினார்.

இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடிய முதல் போட்டியிலே இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதில் அஸ்வின் 32 பந்தில் 38 ஓட்டங்களும் 50 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார்.

advertisement
அதன் பின் ஜிம்பாம்வே அணிக்கெதிரான டி20 தொடருக்கும் அஸ்வின் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதில் அஸ்வின் 22 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினர். அப்போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து பல்வேறு தொடர்களில் விளையாடி வந்த அஸ்வினை பலரையும் உற்று நோக்க வைத்த தொடர் எது என்றால் 2010 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடர் தான். இத்தொடரில் அஸ்வின் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்கு பெரிது உதவினார்.இத்தொடரை இந்திய அணி 5-0 என்ற நியூசிலாந்தை வெயிட்வாஷ் செய்தது. இதைத்தொடர்ந்து அஸ்வின் தன்னுடைய சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணியில் இருந்து நீக்க முடியாத வீரராக மாறிவிட்டார்.
அஸ்வின் வந்த பின்னர் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சற்று ஓரங்கட்டப்பட்டார்.

மேலும் அஸ்வின் 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது 103 ஓட்டங்கள் குவித்து தனது கன்னிச் சதத்தைப் பதிவு செய்தார்.


அஸ்வின் வீசும் கேரம் பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு எதிரணி வீரர்கள் பெரிது சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதுவும் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் விளையாடப் போகிறது என்றால் அத்தொடரில் அஸ்வினின் பங்கு மிகவும் அதிகமாக இருக்கும்.

அஸ்வின் இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளைத் தேடி தந்துள்ளார். இந்திய அணிக்கு இக்கட்டான நிலையில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை கொடுத்துள்ளார். குறிப்பாக கூறவேண்டுமென்றால் இந்த ஒரு ஆட்டத்தை சொன்னால் போதும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி இந்தியாவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி முதல் இன்னிங்ஸில் 590 ஓட்டங்களை குவித்தது.அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான அணியாக இருந்தது. காம்பீர், சேவாக், டிராவிட், டெண்டுல்கர், லட்சுமணன் மற்றும் கோஹ்லி என ஒரு துடுப்பாட்டத்திற்கு சிறந்த அணியாக இருந்தது.

ஆனால் குறித்த போட்டியில் முக்கிய வீரர்கள் அனைவரும் சற்று சொதப்ப கோஹ்லியுடன் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார் அஸ்வின்.

இப்போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமின்றி தன்னுடைய கன்னிச்சதத்தை(103) பதிவு செய்தார். சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டு அப்போட்டி டிரா அடைவதற்கு மிகவும் உதவினார் அஸ்வின்.

மேலும் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் மற்றும் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இப்படி பல சாதனைகளை படைத்து வரும் அஸ்வினுக்கு பல விருதுகளும் அவர் வீட்டைத்தேடி வருகின்றன.

அஸ்வின் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டோனிக்கு செல்லப்பிள்ளை என்று கூறுவார்கள். டோனிக்கு மட்டுமல்ல கோஹ்லியும் இவரை கெட்டியாக பிடித்து தான் வைத்துள்ளார் என்றால் அது மிகையாகது.
சர்வதேச அளவில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் மற்றும் சிறப்பான பண்முக ஆட்டக்காரர் என பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் அஸ்வின் மேலும் மேலும் பல சாதனைகளை படைத்து சாதனையின் உச்சிக்கு செல்லட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv