வடக்கு - கிழக்கு மக்கள் ஒன்றிணைவது அவசியம் வடக்கு முதலமைச்சரின் அழைப்பிற்கு கிழக்கு முதலமைச்சர் நசீர் பதில்..


அதியுச்ச அதிகார பகிர்வுக்காக வடக்குக் கிழக்கு மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விடுத்த அழைப்பு எந்தளவிற்கு முக்கியமானதோ, அதேயளவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஙம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதும் அவசியம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நசீர் அஹமட் தெரி வித்துள்ளார்.

வடக்குக் கிழக்கு இணைப்பு தொடர்பில் பேச கிழக்கு மாகாண முதலமைச்சர் முன் வந்தால், அவருடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பேரவைக்கும், முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும் இடையில் கடந்த 10-ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.

இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்த அழைப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அதியுச்ச அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொள்வதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். ஆனால் இந்த இரு சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதை அரசாங்கம் ஒருபோதும் விரும்பாது. இதனை நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். சிறு பான்மை இன மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் அவசியமாகியுள்ளது.
அரசாங்கம் நேர்மையுடன் செயற்பட்டிருந்தால் குறைந்தபட்சம் அரசியலமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் வழங்கியிருக்கலாம்.

ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்யாது, மாகாண சபைகளின் அதிகாரங்களை மேலும் குறைக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.
சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவும் உள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வில் உரையாற்றிய விக்னேஸ்வரன், தமிழ், முஸ்லிம் ஒற்றுமை முயற்சிகளை முன்னெடுப்பதற்குத் தமிழ் மக்கள் பேரவை தன்னாலான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவது டன் சகல இனங்களின் பாதுகாப்பிற்காகவும் நாம் பாடுபடுவோம்.

எம்முடன் நீங்கள் அனைவரும் கட்சி பேதம் இன்றி, பிரதேசவாதம், வர்க்க பேதம் இன்றி, பால் பேதமின்றி, மத பேதமின்றி அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளைக் கண்டிக்க முன் வரவேண்டும்.
தமிழ் பேசும் மக்களுக்கு ஒரே அரசியல் தீர்வாக விளங்கக் கூடிய சமஷ்டி அரசியல் அமைப்பின் தேவையை வலியுறுத்த வேண்டும். முஸ்லிம் மக்களுக்கும் ஒரு சமஷ்டி அலகு வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

எமது ஒற்றுமையை கிறிஸ்தவ, இந்து தமிழ் மக்களும், தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் உலகறியச் செய்ய வேண்டும். இதற்காக எமது குரல்கள் யாவும் ஒருமித்து ஓங்கி ஒலிக்கட்டும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.           

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv