மிஷேல் ஒபாமா தன் கணவரிடம் என்ன கேட்டார் தெரியுமா..?


உலகின் உச்ச அதிகாரம் கொண்ட அந்த ஆணின் குரல், தன் முக்கியமான உரையில், தன் மனைவி பற்றிக் குறிப்பிடும்போது அன்பாலும் நன்றியாலும் நெகிழ்கிறது.

''25 ஆண்டுகளாக எனக்கு மனைவியாக, என் குழந்தைகளுக்குத் தாயாக மட்டுமல்ல, என் மனதுக்கு நெருக்கமான தோழியாக உடன் பயணித்திருக்கிறாய்.

உனதில்லை என்றாலும், பல பொறுப்புகளை நீ விரும்பி எடுத்துக்கொண்டாய். அவற்றை உன் நல் இயல்பாலும், தைரியத்தாலும் செய்து முடித்தாய். இந்த வெள்ளை மாளிகையை, அனைவருக்குமான இடமாக நீ மாற்றினாய்.

வரும் தலைமுறையினரின் இலக்கு மேன்மையானதாக இருக்கும். ஏனெனில், அவர்கள் உன்னை ரோல்மாடலாகக் கொண்டிருக்கிறார்கள். நீ என்னைப் பெருமைப்பட வைத்தாய். நீ நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்தாய்!"

சிகாகோவில், அமெரிக்க அதிபராக தன், இறுதி உரையை பராக் ஒபாமா நிகழ்த்தியபோது, முன் வரிசையில் அமர்ந்திருந்த தன் மனைவியின் கண்களைப் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொன்னவர்,

ஒரு சந்தர்ப்பத்தில் தன் கைக்குட்டையை கண்களில் ஒற்றிக்கொள்ள, அந்த அரங்கில் இருந்த 18,000 பேரும் நெகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

இதே சிகாகோவில்தான் பராக் ஒபாமாவும், மிஷேலும் சந்தித்துக்கொண்டனர். இதே சிகாகோவில்தான் இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்களும் பிறந்தனர்.

''எனக்கும் மிஷேலுக்கும், வாழ்வின் அனைத்து அத்தியாயங்களும் இந்த சிகாகோவில்தான் ஆரம்பித்தன'' என தன் ஃபேஸ்புக் போஸ்டில் குறிப்பிட்டுள்ளார் ஒபாமா.

ஆம்... ஒபாவின் அனைத்து அறிக்கைகளிலும், மிஷேலின் பெயர் நீங்காமல் இடம் பிடித்திருக்கும். அந்தளவுக்கு அவர் இல்வாழ்க்கை, பொதுவாழ்க்கை இரண்டிலும் இரண்டறக் கலந்தவர் மிஷேல்.

எண்பதுகளின் இறுதியில், சிகாகோவில் உள்ள சிட்லே ஆஸ்டின் சட்ட நிறுவனத்தில் மிஷேல் பணிபுரிந்தபோது, அங்கு புதிதாகப் பணிக்குச் சேர்ந்தார் ஒபாமா.

அவருக்கு மிஷேல்தான் பாஸ். சில மாதங்களில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. 1992-ம் ஆண்டு, அது திருமணத்தில் முடிந்தது. அப்போது, ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவார் என்றோ, மிஷேல் அமெரிக்காவின் முதல் குடிமகள் ஆவார் என்றோ அந்தத் தம்பதிக்குத் தெரியாது.

என்றாலும், அவர்களின் வாழ்க்கை நோக்கமும் செயல் ஆக்கமும் கொண்ட பாதையிலேயே சென்றுகொண்டிருந்தது. சோஷியாலஜி பட்டம் பெற்று, சட்டம் படித்த மிஷேலுக்கு மக்கள் சேவையில் விருப்பம் அதிகம்.

எனவே, வழக்குரைஞராகத்தான் வகித்த வேலையை உதறி, சிகாகோ மாநகர திட்ட மற்றும் வளர்ச்சித் துறையில் உதவி ஆணையராகும் அளவுக்கு பொதுவாழ்வில் முன்னேறினார்.

இன்னொரு பக்கம், தன் மகள்கள் மலியா, சாஷாவுக்கு ஓர் அம்மாவாக அவர் எந்தளவுக்குத் தேவைப்படுவாரோ, அதை நிறைவாகக் கொடுக்கவும் அவர் தவறவில்லை.

2007. ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கணவரின் வெற்றிக்கு உழைக்க, தன் பணிகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் மிஷேல்.

ஆனால், அதற்கு பதில் பரிசாக தன் கணவர் சிகரெட் பழக்கத்தை விடவேண்டும் என்று அவரிடம் உறுதிபெற்றுக் கொண்டார். தொடர் பயணங்கள், பிரசாரங்கள் எனச் செல்ல வேண்டிய சூழல்.

மிஷேல் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டார். வாரத்தில் ஓர் இரவு மட்டுமே வெளியே தங்குவது, இரண்டு நாட்கள் தொடர் பிரசாரத்தின் இறுதி இரவை தன் மகள்களுக்கு மட்டுமானதாக ஆக்குவது.

'உங்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்திக் கொள்வீர்கள்?' என்று அமெரிக்காவின் குடிமகளான மிஷேலிடம் கேட்கப்பட்டபோது, 'முதலில், மலியா, சாஷாவின் அம்மாவாக' என்ற தன் பதிலுக்கு எப்போதும் உண்மையாக இருப்பவர் மிஷேல்.

2008 அமெரிக்கத் தேர்தலில் ஒபாமா வென்றதில், மிஷேலின் உழைப்புக்கு மிகப் பெரிய பங்குண்டு. அதை ஒபாமாவே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

பிரசாரத்தின்போது சில பத்திரிகைகள் 'ஆங்ரி பிளாக் உமன்' என்ற அடைமொழியுடனே எப்போதும் தன்னைக் குறிப்பிட்டதில் தொடங்கி, அனைத்து விமர்சனங்களையும் கடந்து, தன் கணவர், மகள்களுடன் மிஷேலின் கறுப்பினக் குடும்பம் வெள்ளை மாளிகையில் குடியேறியபோது, உலகமே ஆச்சர்யமாகத்தான் பார்த்தது.

அதன் பின் மிஷேல் அமெரிக்காவின் முதல் குடிமகளாக மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம், உலகுக்கு செய்திதான். வெள்ளை மாளிகையில் முதல் முறையாக ஆர்கானிக் தோட்டம் நிறுவினார் மிஷேல்.

இந்தத் தலைமுறை குழந்தைகளின் ஒபிஸிட்டி பிரச்னைக்குத் தீர்வு காண 'லெட்ஸ் மூவ்' என்ற இயக்கத்தை அவர் ஆரம்பிக்க, அதற்கான தேசிய அளவிலான அரசின் செயல் திட்டங்களை வகுத்தார் ஒபாமா.

'ரீச் ஹையர்' என்ற இயக்கத்தை நிறுவி, ஒவ்வொரு அமெரிக்க மாணவரும் நிச்சயமாக மேற்படிப்பு பெறுவதற்கான சூழலை மேம்படுத்தினார்.

'லெட் கேர்ள்ஸ் லேர்ன்' என்ற இயக்கத்தை ஆரம்பித்து, மாறுபட்ட சூழல்களில் வசிக்கும் பதின் பருவப் பெண்கள் கல்வி பெறும் வாய்ப்புகளை அதிகரித்தார்.

இதுபோன்ற செயல்பாடுகளால்தான், தன் இறுதி உரையில் தன்னையும், நாட்டையும் பெருமைப்படுத்தியதாக தன் மனைவியைக் குறிப்பிட்டுள்ளார் ஒபாமா.

மிஷேல், தன் ஆடைகளாலும் அதிகம் கவனிக்கவைத்தவர். ஆரம்பகால தேர்தல் பிரச்சாரத்தின்போது, 'அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் துணைகளிலேயே, சுவாரஸ்யம் குறைந்த, பிரபலத்தன்மை இல்லாதவர் இவர்தான்' எனக் குறிப்பிடப்பட்டவர் மிஷேல்.

ஆனால், 2006ல் 'எசன்ஸ்' இதழ் வெளியிட்ட 'உலகின் ஆளுமைமிக்க 25 பெண்கள்' பட்டியலிலும், 'உலகின் மிகச் சிறந்த ஆடை ரசனைகொண்ட 10 நபர்கள்' பட்டியலிலும் அந்த கறுப்பழகி இடம் பிடித்தது, காலத்தின் பதில்.

மிஷேல், மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர். 2012-ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஒபாமா அதிபரானபோது மிஷேல் நிகழ்த்திய உரை உட்பட, வரலாற்றில் இடம்பிடித்த அவரின் உரைகள் பல. அவற்றின் கருப்பொருளாக, பெரும்பாலும் தன் கணவரையே கொண்டிருக்கிறார் மிஷேல்.

முன்னே நடந்து செல்லும் தன் மனைவிக்கு குடைப்பிடித்தபடி, அமெரிக்க அதிபர் அவர் பின்னால் நடந்துவரும் புகைப்படம், ஜோடியாக பால் ரூம் நடனம், கட்டியணைத்தபடி, முத்தம் கொடுத்தபடி, மகள்களுடன் ரிலாக்ஸ் தருணங்கள் என... இந்த வெள்ளை மாளிகை தம்பதியின் ஒவ்வொரு புகைப்படமும், க்யூட் ரசனையைத் தரும்.

இதோ... அமெரிக்க அதிபராக இறுதி உரை நிகழ்வின் முடிவிலும், தன் மனைவியின் கரம் பற்றியே நிற்கிறார் ஒபாமா.

- Vikatan-

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv