நிர்வாண தண்டனையை எதிர்த்து வென்ற பெண்!


இவருக்கு நேர்ந்த கொடுமை மற்ற பெண்களுக்கு நேர்ந்திருந்தால் அந்த நொடியிலேயே தன்னை மாய்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் இந்தப் பெண், தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டு, சட்டப்போராட்டம் மேற்கொண்டு, மற்ற பெண்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார். அவர்... பாகிஸ்தானைச் சேர்ந்த முக்தர் மாய்.

14 வருடங்களுக்கு முன்பு சில நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டவர் முக்தர் மாய். மற்ற பெண்களைப்போல கூனிக்குறுகி வீட்டில் முடங்காமல், தனக்கு அநீதி இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்ற உறுதியுடன், துணிச்சலாக சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

அதுமட்டுமின்றி, தன்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, தன்னுடைய முயற்சி முன்உதாரணமாக இருக்கவேண்டும் என்பதற்காக, நவம்பர் 2-ம் தேதி கராச்சியில் நடந்த ஒரு ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்டு, மேடையில் கம்பீரமாக முக்தர் மாய் நடந்துவந்தபோது, அவரின் தாய்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள பாதிக்கப்பட்ட பெண்களின் மனதில் நம்பிக்கை விதைத்தார்.

முக்தர் மாய்க்கு ஏன், எப்படி நடந்தது அந்த அநியாயம்?

2002-ஆம் ஆண்டு, தன் சகோதரன் மற்றும் தன் சமூகத்தை தரக்குறைவாகப் பேசியதாக முக்தார் மாய் பற்றி சம்பந்தப்பட்டவர் பஞ்சாயத்தில் முறையிட, உள்ளூர் பெரியவர்கள், முக்தரை பலத்காரம் செய்யச் சொல்லியும், பொதுமக்கள் முன் நிர்வாணமாக நிற்கவைத்தும் தண்டனை விதித்தனர்.

இது நடந்த பிறகு முக்தர் மனம் தளராமல் தன்னை பலத்காரம் செய்த 14 பேர் மற்றும் தண்டனை வழங்கிய ஊர் பெரியவர்கள் மீது, சட்டப் போராட்டம் நடத்தினார். அதில் 6 பேருக்கு மரணதண்டனை பெற்றுத் தந்தார். ஆனால் அவர்கள் அனைவரும் மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டனர்.

தீர்ப்பு வந்த சில நாட்களில், முக்தார் மாய், பெண்களின் உரிமைகளுக்கான போராட்டக் களத்துக்கு வந்தார். மேலும், தன் சொந்த ஊரான மீர்வாலாவில் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, கஷ்டத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆதரவு தந்து உதவிவருவதோடு, குழந்தைகளுக்குக் படிப்பும் சொல்லித்தருகிறார்.

இவருடைய போராட்ட குணம், சேவை மனப்பான்மையை கவனித்த பாகிஸ்தான் ஃபேஷன் டிசைனர் ரோஜினா முனிப், தன் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முக்தாருக்கு அழைப்புவிடுத்தார்.

தற்போது 44 வயதாகும் முக்தார் மாய், ஃபேஷன் ஷோ மேடையில் கம்பீரமாக நடந்துவந்து நின்று, ''என்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்கள், மன உறுதியோடு இருக்கவேண்டும். பெண்கள் கோழைகள் அல்ல என்பதை வாழ்ந்துகாட்டும் உதாரண மனுஷியாக நான் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஃபேஷன் நிகழ்ச்சியியில் கலந்துகொண்டேன்'' என்றபோது, அந்த அரங்கம் இன்னும் அழகானது.

''பெண்கள் தங்களுக்கு நடக்கும் அநீதியை எதிர்த்துப் போராடினால்தான் நீதி கிடைக்கும். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மற்ற பெண்களுக்கு நான் கூறவிரும்புவது இதுதான். என் மூலம் அப்படி ஒரு பெண்ணாவது துணிச்சல் பெற்றால், நான் சந்தோஷப்படுவேன்!'' என்ற முக்தார் மாய்க்கு, பலமான கைகுலுக்கல்கள்!



0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv