ஐ.நாவில் எழுந்த கேள்வி......


யுத்தம் என்ற பெயரால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரச அடக்குமுறையானது பல்வேறு வடிவங்களில் இந்த நாட்டில் இடம்பெற்றிருந்தது.

சட்டத்திற்கு புறம்பான வகையில் எழுந்தமானமான கைதுகளும், கடத்தல்களும், கொலைகளும், தாராளமாகவே இடம்பெற்றிருந்தன.

இத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு தண்டனைகளில் இருந்து விலகளிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே நடந்தேறின.

தமிழ் இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து கைது செய்து அல்லது கடத்தப்பட்டு இரகசிய முகாம்களில் தடுத்து வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதன்விளைவாக பாலியல் விகிதாசாரத்தில் பாரிய வித்தியாசமும் வீழ்ச்சியும் ஏற்பட்டிருந்தது. இன்றும் அது தொடர்கிறது.

கடந்த ஆட்சியின் போது இரகசிய முகாம்கள் இருந்தது தெரிந்த போதிலும், அதன் இறுதிக் காலம் வரை அவை எங்கு இருந்தது என்பது தெரியாமலே இருந்தது.

2015 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஸவின் தோல்விக்கு பின்னர் இத்தகைய இரகசிய முகாம்கள் குறித்த இரகசியங்கள் வெளியில் வந்தன. அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இரகசிய முகாம்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் அறிந்த வரையில் அப்படி எந்த முகாமும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதேவேளை, கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட 5 பாடசாலை மாணவர்கள் தொடர்பான விசாரணைகள் முடக்கி விடப்பட்டிருந்தன.

இதன்போது கொழும்பிலும், திருகோணமலையிலும் இரகசிய முகாம்கள் கடற்படையினரால் நிர்வாகிக்கப்பட்டிருந்தமை அம்பலத்திற்கு வந்தது.

இதனையடுத்து இலங்கைக்கு வந்திருந்த ஐ.நா குழுவினரும் அத்தகைய முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டு இந்த குறுகிய இடத்தில் ஏராளமான மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவர்கள் பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்து இருக்க வேண்டும் என்றும் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தனர்.

அதன்பின்னர் அரசாங்கத்தால் அது குறித்த விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

அன்றைய ஆட்சியில் இருந்தவர்களில் பலர் இன்றும் அமைச்சர்களாக இருக்கின்ற போதிலும், அன்று நடைபெற்ற தவறுகளை மூடி மறைக்க முயற்சித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சட்ட ஆட்சி நடப்பதாக சொல்லிக் கொண்ட பின்னரும் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் பாதுகாப்பு மற்றும் பொலிசாரின் மனோநிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை.

தென்னிலங்கைப் பகுதிகளில் பொலிசார் மீது துவக்கு சூட்டை மேற்கொண்டு விட்டு ஒரு கும்பல் தப்பியோடுகிறது. மறுபுறத்தில் வடபகுதியில் இரவு நேரத்தில் பயணம் செய்த பல்கலைக்கழக மாணவர்களின் மீது பொலிசாரால் துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. இது மேற்சொன்ன விடயத்தை புலப்படுத்துவதாக அமைகிறது.

அண்மையில் குருநாகல் பகுதியில் உணவு விடுதி ஒன்றின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து பொலிசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தி ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகர் கொல்லப்பட்டிருக்கிறார்.

அவர்களை இப்பத்தி எழுத்தும் வரை தேடும் நடவடிக்கைளும் தொடர்கின்றது. வடக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆவா குழு என்னும் ஒரு குழுவை பொலிசார் கைது செய்திருந்தனர்.

அவர்களிடம் இருந்து இரு கைக்குண்டுகள் உட்பட சில பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன. அந்த குழுவிற்கு யாருடன் அல்லது எந்தக் குழுவுடன் தொடர்பு இருக்கின்றது என்பதை பொலிசார் அன்று வெளியிடவில்லை.

ஆனால் இன்று சுமார் மூன்று வருடங்கள் நெருங்குகின்ற நிலையில் ஆவா குழு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை அரசாங்கமும், பொலிசாரும் கூறிவருகின்றனர்.

இதிலும் தமிழ் இளைஞர்களே குறிவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு தரப்பில் உள்ள ஒருவர் இதில் இருக்கின்றார் என முதலில் தெரிவித்த போதும் பின்னர் அவரும் ஒரு தமிழராகவும், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவராகவும் இப்பொழுது அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் புலிகள் இயக்கத்தை மீளமைக்க முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆவா குழுவின் மீள் உருவாக்கம் அல்லது ஆவா குழு தொடர்பான செய்திகள் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நீதி கோரிய வேளையிலேயே இடம்பெற்றிருந்தது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

பொலிசார் தாம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டை மறைத்து அந்த மாணவர்களின் மரணத்தை விபத்து என்று திசை திருப்ப முயன்று பின்னர் அது பயனளிக்காத நிலையிலேயே இந்தக் குழு மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது.

மாணவர்களின் படுகொலைக்கு முன்னரும் வாள்வெட்டுச் சம்பவங்கள், திருட்டுச் சம்பவங்களும் ஆங்காங்கே யாழ் குடாநாட்டில் இடம்பெற்றிருந்த போதும் அதன் சூத்திரதாரிகள் யார் என்பது அடையாளம் காணப்படாமல் இருந்தது.

அந்தக் குழுவில் முக்கியமான எட்டு பேர் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலேயே இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இந்த குழுவில் 62 பேர் இருப்பதாக தெரிவித்து 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்குக்கான அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

ஆவா குழுவுக்கு பின்னால் ஒரு இராணுவ அதிகாரி இருப்பதாகவும், இராணுவத்தின் தேவைக்காக அதை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு தொடர்பு இருப்பதாகவும் அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் தெரிவித்ததையடுத்து ஆவா குழுவின் பெயரில் கைதுகள் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த ஆவாகுழுவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ள நேரத்தில் சித்திரவதை தொடர்பாக ஆராயும் ஐ.நாவின் சித்திரவதைக்கு எதிரான குழு இலங்கையிடம் இரகசிய முகாம்கள் இருந்தனவா..? கடத்தல்களும் தொடர்கின்றனவா..? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை வந்திருந்த சித்திரவதைக்கு எதிரான குழுவினர் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோரிடம் வடமாகாண முதலமைச்சர் முன்னர் இரகசிய முகாம்கள் இருந்தன என்பதையும், கைதுகள் சித்திரவதைகள் இன்றும் தொடர்கின்றன என்பதையும் தெரிவித்திருந்தார்.

அவர்களிடம் விரிவாக பேச முடியாத சந்தர்ப்பத்தில் அதனை அறிக்கையாகவும் கையளித்திருந்தார். முதலமைச்சரின் இத்தகைய கருத்துக்கள் ஐ.நாவால் கூர்ந்து கவனிக்கப்பட்டிருக்கின்றது என்பது புலனாகின்றது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஆட்சி மாற்றத்தின் பின் இவ்வாறான அழுத்தங்களை பெரியளவில் அரசாங்கத்திற்கு கொடுப்பதற்கு விரும்பியிருக்கவில்லை.

வடபகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து கைதுகளுக்கும் இந்த நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் சாதகமாக இருக்கிறது.

அமைச்சரின் உடைய கருத்துக்கு பின்னால் தமிழ் இளைஞர்களை குறித்து வைத்து மேற்கொள்ளப்படும் கைதுகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் இதுவரை எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு இனத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களாக தம்மை அடையாளப்படுத்தி கொள்ளும் தமிழ் அரசியல் தலைமைகள் குறைந்தபட்சம் இந்த விடயத்திலாவது ஐக்கியப்பட்டு கைது செய்யப்பட்டு இருப்பவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv