தீபாவளி அன்று எமதர்மனை வழிபடுவது ஏன் தெரியுமா?


நம் நாட்டில் தீபாவளி பண்டிகையன்று எமதர்மனையும் பெரும்பாலானோர் வழிபடுகிறார்கள். இதன் பின்னணியில் சுவாரசியமான தகவல் இருப்பதை புராணங்கள் கூறுகின்றன.

இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பண்டிகையாக தீபாவளி விளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஸ்ரீகிருஷ்ணர் (நரகாசுரனை வதம் செய்த தினம்) மகாலட்சுமி (லட்சுமி பிறந்தநாள்), ஸ்ரீராமர் (இலங்கையில் இருந்து வெற்றியுடன் திரும்பிய தினம்) போன்ற கடவுளர்களை பின்னணியாகக் கொண்டே இந்த கதைகள் அமைந்திருக்கும்.

இதற்கு மாறாக, இந்தியாவில் சில பகுதிகளில் எமதர்மனை தீபாவளியன்று வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான புராணக் கதை கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில், வடஇந்திய பகுதியை ஹிமா என்ற பேரரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவனது 16 வயது மகன், திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறந்துவிடுவான் என்று ஜோதிடர்கள் கணித்திருந்தார்கள். இதனால், மன்னன் பயந்துபோனான். இருப்பினும், மனதை தேற்றிக் கொண்டு மகனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தான்.

திருமணமும் வைபோகமாக நடந்தது. மன்னனின் மகனை சாவித்திரி என்ற பெண் திருமணம் செய்து கொண்டாள். இளம் வயது பெண்ணாக இருந்தாலும், புத்திசாதுரியமும், தைரியமும் கொண்டவள் அவள். தன் கணவனை எப்பாடுபட்டாவது, எமதர்மனின் பாசக்கயிற்றினில் சிக்காமல் தப்ப வைக்க உறுதி பூண்டாள்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. அன்று, தன் கணவனை தூங்கவே அவள் அனுமதிக்கவில்லை. கணவனுடன் தான் இருந்த அறையின் வாயிலில், தகதகக்கும் தங்க, வெள்ளி ஆபரணங்களை கொட்டி வைத்தாள். அரண்மனை என்பதால் தங்கத்துக்கு குறைவா என்ன? அதுமட்டுமின்றி, இரவை பகலாக்கும் வகையில் விளக்குகளையும் எரியவிட்டாள்.

குறிப்பாக, படுக்கையை சுற்றி அதிக பிரகாசம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்தாள். அதன்பிறகு, தனது இனிய குரலில் பாடத் தொடங்கி, கணவன் தூங்காதிருக்க கதை சொல்லவும் தொடங்கினாள்.

ஜோதிடர்கள் சொன்னது போல், அவளது கணவனின் உயிரைப் பறிக்க அந்த அறைக்கு பாம்பும் வந்தது. ஆனால், ஜொலி, ஜொலிக்கும் ஆபரணங்களின் வெளிச்சமும், விளக்குகளின் பிரகாசமும் அதன் கண்களை கூசச் செய்தன. இதனால், தங்க ஆபரணங்களின் மீது தள்ளாடி, தள்ளாடி பாம்பு ஊர்ந்து சென்றது. இதனால், சாவித்திரியின் கணவன் இருக்கும் இடத்தை அதனால் கண்டு பிடிக்க முடியாமல் போனது.

இதற்கிடையே, சாவித்திரியின் இனிமையான குரலில் பாட்டை கேட்ட பாம்பு, தங்க ஆபரணக் குவியல் மீது படுத்தபடியே பாட்டை மெய்மறந்து கேட்கத் தொடங்கியதாம். இரவு முழுக்க, சாவித்திரி தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தாள். இப்படியே இரவு கழிந்து பொழுதும் விடிந்தது.

இரவு கடந்து போனதை பார்த்த பாம்பு, எதுவும் செய்யாமல், வந்த வழியாகவே திரும்பிச் சென்றுவிட்டது. இளவரசனும் சாவில் இருந்து தப்பினான். இவ்வாறாக எமதர்மனின் பிடியில் இருந்து கணவனை, அப்பெண் காப்பாற்றினாள்.

இதன்காரணமாகவே, இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை எமதீப தினம் என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அப்பகுதிகளில், இரவு முழுவதும் விளக்குகளும் தொடர்ச்சியாக எரியவிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள், எமதர்மனை நினைத்து வழிபடும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இத்தகைய சுவாரசியமான பின்னணிகளே, பண்டிகைகளை மேலும் உற்சாகத்துடன் கொண்டாட ஊக்குவிப்பதை மறுக்க முடியாது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv