6 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமான கழுகு வேட்டை!


வேட்டையாடுதல் பழங்கால மக்களின் அத்தியாவசிய பழக்கங்களில் ஒன்று. பயனோடு வீரதீர பொழுதுபோக்காகவும் பிற்காலத்தில் பின்பற்றப்பட்டது.
விலங்குகளை ஆயுதங்களால் வேட்டையாடுவது வழக்கமானது. கழுகை கருவியாக்கி வேட்டையாடிய மங்கோலியர்கள் பாணிதான் விசித்திரமானது.
மத்திய ஆசிய பகுதியில் வாழ்ந்த மங்கோலியர்கள் கழுகை பயன்படுத்தி எளிதாக விலங்குகளை வேட்டையாடினார்கள். அதை ’பெர்குட்சி’ என்ற பெயரில் தொழிற்கலையாக தொன்றுதொட்டு தொடர்ந்து வந்தனர்.
6000 ஆண்டுகளாக பாரம்பரியமாக இருந்து வந்த அப்பழக்கம் இப்போது அடியோடு அற்றுப்போனது எப்படி?
மங்கோலிய இனம் கசாக்
மேற்கத்திய மங்கோலியர்களான அவர்கள் வாழும் பகுதி ’அல்தை’ என்ற பிராந்தியம் ஆகும். பூமியில் வெகுதொலைவில் அமைந்துள்ள பகுதிகளில் இதுவும் ஒன்று.
இந்த பகுதியின் எல்லைகளாக மங்கோலியா, கஜகஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்த இனத்தை சுற்றி நவீன உலகமும் இயங்குகிறது.
அரிதான ஒரு சில சாலைகள் மட்டுமே உள்ள ’அல்தை’ பகுதியை ஒட்டி பனிபடர்ந்த மலைச்சிகரங்கள் காணப்படுகின்றன.
சமீபத்தில் இதுபற்றி ஆராய சென்றவர்கள் பாயான ஆல்கீ மாகாணத்தில் 3000 மீட்டர் உயரமுள்ள மலைமீது வெறுமையுடன் நின்று ’கசாக்’ என்ற அந்த கழுகு வேட்டைக்காரர்கள் எங்கேனும் காணப்படுவார்களா என கண்கள் தேட காத்திருந்தனர்.
வேட்டையர் தோற்றம்
நரி தோலால் ஆன ரோமத்துடன் கூடிய தொப்பியும் நீண்ட செம்மறி ஆட்டுத்தோலால் ஆன வஸ்திரமும் அணிந்துகொண்டு, இடதுபக்க தோலில் கழுகு அமர்ந்திருக்க குதிரையில் வேகமாய் பயணிக்கும் வேட்டைக்காரர்களில் ஒருவரும் முதலில் அறிமுகமானவரும்தான் இந்த பிக்பாலோட்.
அங்கு இப்போது வாழும் 250 வேட்டைக்காரர்களில் ஒருவர். அவரைக் கொண்டு அவர்களுடைய வாழ்க்கைமுறை நிதர்சனங்கள் அறியப்பட்டன
இவர்களுடைய இந்த பாரம்பரியத்திற்கான ஆதாரம் மத்திய ஆசியாவின் புல்வெளிகளிலும் கிடக்கிறது. செங்கிஸ்கான் மற்றும் குப்லாய்கான் ஆயிரக்கணக்கான வேட்டைப் பறவைகள் வைத்திருந்தது மார்கோ போலோவின் பயணங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
கஜகஸ்தானின் பாரம்பரியமான பெரும்பாலான மக்கள் பாயான் ஆல்கீ பகுதியில் வசித்தனர். ரஷ்ய பேரரசருடைய துருப்புகளும் 1800 களின் நடுப்பகுதியில் இங்கு வந்தனர்.
கடுமையான குளிரில் பாதுகாத்துக்கொள்ள எடுத்துச்செல்லக் கூடிய தற்காலிக சுற்று கூடாரங்களை அமைத்து தங்குகின்றனர். அதில் கழுகுகளுக்கான பயிற்சிகள், குதிரைமேல் வேட்டைக்குச்செல்வது, தங்கள் குழுவிற்குள் வீரவிளையாட்டு, போட்டிகள், திருவிழாக்கள் என நாகரீக மக்களிடமிருந்து தனிமையான வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டனர்.
கழுகுவேட்டை முறை
இந்த வேட்டைமுறையில் கழுகுக்கும் வேட்டைக்காரருக்கும் உள்ள தொடர்பில் பலமான புரிதல் இருக்கும்
கழுகுகள் தன்னிச்சையான முறையில் விலங்குகளை வேட்டையாடும் வல்லமை கொண்டவை.
ஆண்கழுகுகளை விட பெண்கழுகுகள் வேட்டையாடுவதில் சிறந்தவை. காரணம், பெண்கழுகின் வேட்டை தீவிரம் மட்டுமல்ல, ஆண்கழுகை விட அவை மூன்று மடங்கு எடையுடையவை.
கழுகுகள் மனிதர்களைவிட 8 மடங்கு தூரத்தை பர்க்கும் நுட்பமான விழிகளைக் கொண்டவை.
தலைவனின் தொளில், தன்னுடையை எடையை குறைத்து அமர்ந்திருக்கும் கழுகு, தூரத்தில் விலங்கின் இருப்பை நுகர்ந்துவிட்டால், தோளில் ஒரு அழுத்தத்தைக் கொடுத்து தலைவனுக்கு தெரியப்படுத்துகிறது. வேட்டைக்காரரும் உஷாராகிறார்.
பெரிய ஆயுதங்கள் ஏதும் இல்லாமலே கழுகின் கூரிய உறுதியான அலகால், வலிமையான பறக்கும் திறனால் ஓடிக்கொண்டிருக்கும் விலங்கை கிழித்து சதையை அள்ளிவிடும்.
அப்படி வேட்டையாடப்பட்டு விழும் விலங்குகள் தோலுக்காகவும் ரோமங்களுக்காகவும் மாமிசத்திற்காகவும் வேட்டைக்காரர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
முயல், அணில், ஆந்தை, நரி, ஓநாய், பனிச்சிறுத்தை உட்பட்ட பல விலங்குகளை இப்படி வேட்டையாடிவிடுகின்றன.
சமயங்களில் ரஷ்யாவின் பழைய துப்பாக்கியையும் முயலை பிடிக்க இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
கழுகு பயிற்சி
கழுகுகளுக்கு இந்த வேலை கரும்பு திங்க கூலி கொடுப்பதுபோல என்றாலும். அதை பல வருடங்களாக பயிற்சி கொடுக்க வேண்டும் என்கிறார் பிக்பாலோட்
பழகிவிட்டால் வேட்டையை எவ்வளவு எளிமையாக்குகிறதோ, அவ்வளவு கடினம் அதற்கு பயிற்சி கொடுப்பதில் உண்டு. கழுகை குஞ்சாக இருக்கும்போதே பழகி சற்று வளர்ந்த பிறகு பயிற்சி கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் சிறுவர்களுக்கும் செம்மறி ஆடுகளுக்கும் ஆபத்தில்லாமல் இருக்கும் பெரிய கழுகுகளின் கூரான அலகு கொல்லும் கருவியாகும்.
தந்தைதான் இந்த வித்தையை மகனுக்கு கற்றுக்கொடுப்பார். ஒருவர் 12 தலைமுறைக்கு முந்திய மூதாதையர் வரை நினைவுகூரும் வகையில் பொருள்கள் வைத்துள்ளனர். முன்னோர்களை கவுரவிக்கின்றனர்.
வேட்டைநேரம் தவிர மற்ற நேரங்களில் கழுகின் கண்கள் மறைக்கப்பட்டிருக்கும் அதன் அமைதி மற்றும் எச்சரிக்கை உணர்வுக்காக. பெரும்பாலும் குளிர்காலங்களில் அல்லது இலையுதிர் காலங்களில் வேட்டைகள் அதிகம் நடத்துகின்றனர்.
திருவிழா
ஒவ்வொரு செப்டம்பர் மாதத்திலும் இவர்கள் குழுவிற்குள் தலைநகரான ஆல்கீ பகுதியில் திருவிழா நடக்கிறது.
அதில் வரைதல், கயிறு இழுத்தல், குதிரை சவாரி என பல போட்டிகள் நடக்கின்றன. கோக்பார் என்ற பாரம்பரிய போர்ப்பயிற்சியை வெளிப்படுத்தும் விளையாட்டும் நடக்கிறது.
ரொக்கப்பரிசுகளும் உண்டு, ஆண்கள் பெண்களை வென்றால் முத்தப் பரிசுகளும் உண்டு.
பழமொழி
’வேட்டைக்காரனுக்கு தோளிலுள்ள கழுகும் விரையும் குதிரையும் இரண்டு இறக்கைகள் போல’ என்ற பழமொழியும் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு போற்றப்படுகிறது.
வனவிலங்கு பாதுகாப்பு
இப்போது அந்த பகுதியில் வனவிலங்குகள் குறைந்து வருவதால் அங்கு சுற்றுலா வருபவர்கள் வேட்டை நடத்துக்கூடாது என அழுத்தம் கொடுக்கின்றனர்.
மேலும், இந்த நவீன காலத்தில் வேட்டைத்தொழில் வாழ்வதற்கான மூலாதார வழிகள் இல்லாதது எனவும் வேட்டைக்காரர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.
தங்களுடைய வாரிசுகளை நகரங்களில் விவசாய பண்ணைகளில் வேலைசெய்ய அனுப்புகின்றனர்.
6 ஆயிரம் ஆண்டுகளாக நடந்துவந்த திறமையான ஒரு பாரம்பரிய வேட்டைமுறை முற்றிலும் அற்றுப்போயிருப்பது வருந்தத்தக்கதுதான்.
வேட்டைக்காரர்களையே வேட்டையாடுவது வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள்தான்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv