அ.தி.மு.க தேர்தல் அறிக்கையின் இலவசங்கள் இதுதான்...! -ஆர்.கே.நகர் 'அமாவாசை சென்டிமெண்ட்'


ஆர்.கே.நகர் பிரசாரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறார் ஜெயலலிதா. 'மாணவர்களையும் பெண்களையும் குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கைதான் எங்களின் கதாநாயகன்' என்கின்றனர் அ.தி.மு.கவினர்

தி.மு.க, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க, பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. அ.தி.மு.கவைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் இலவசங்களுக்கு குட்பை சொல்லிவிட்டன. தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில், விவசாயக் கடன் ரத்து, அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச பேருந்து பயணம், பசுமை வீடுகளுக்கு மூன்று லட்ச ரூபாய் மானியம், நெசவாளிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகளும் இலவசங்கள்தான் என்றாலும், தொலைக்காட்சி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் அளவுக்கு இலவச வகைகளுக்குள் அவை சேரவில்லை.  இது மக்களுக்கு அவசியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தி.மு.க அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் உறுதிமொழிகளுக்கும் மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கைக்கும் பெரிய வித்தியாசமில்லை.

மதுவிலக்கு ஒன்றே பிரதானமாகப் பார்க்கப்படுவதால், தி.மு.க இலவசங்களைக் குறைத்துவிட்டது. மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளுக்குக் கிடைத்து வரும் வரவேற்பைப் பொறுத்தே, தேர்தல் அறிக்கை வெளியிடுவது என்பதில் உறதியாக இருந்தார் ஜெயலலிதா. இது மற்ற கட்சிகளின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வந்தது. 'யாரும் எதிர்பார்க்காத இலவசங்களை அம்மா அறிவிப்பார்' என்றே அ.தி.மு.கவினர் கூறிவந்தனர். 

' நாளை ஆர்.கே.நகரில் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை அம்மா வெளியிடுவார். நிறைந்த அமாவாசை தினத்தில் வெளியிட்டால் ஆட்சிக்கு சாதகமாகவே முடியும் என உறுதியாக நம்புகிறார்' என வெளிப்படையாகப் பேசினார் கார்டன் நிர்வாகி ஒருவர். அவர் நம்மிடம் பேசும்போது, " இலவசங்களால் அரசுக்கு பெருத்த கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், மது இல்லாவிட்டால் எந்தப் பொருளையும் மக்களுக்கு இலவசமாக வழங்க முடியாது. மது வருமானம் ஒன்றுதான் மக்கள் நலத் திட்டங்களை போதுமான அளவுக்கு நிறைவேற்றியிருக்கிறது. இந்தமுறை பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிறைய செய்ய வேண்டும் என அம்மா திட்டமிட்டிருக்கிறார். மதுவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பெண்களும் மாணவர்களும்தான். அவர்களுக்கு வேண்டிய அளவுக்குச் செய்தாலே, ஆட்சியின் மீதான பார்வை மாறும் என நம்புகிறார் அம்மா. அப்படி செயல்படுத்த தேவையான நிதியை மதுவில் இருந்துதான் பெற முடியும் என்பதால், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனப் பேசினார். மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு முன்பாக, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டு செயல்படுத்த வேண்டும் என அம்மா திட்டம் வைத்திருக்கிறார். 

இந்தமுறை, கட்சியில் பொருளாதார அறிவு நிரம்பிய சீனியர்களுக்கு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பை வழங்கினார் அம்மா. முன்னாள் நிதி அமைச்சர் பொன்னையன் உள்ளிட்ட சிலர் இரவு பகலாக அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், சில மாற்றங்களையும் அவ்வப்போது செய்தார் அம்மா. தற்போது தேர்தல் அறிக்கை இறுதி வடிவத்திற்கு வந்துவிட்டது. ஆரம்பத்தில், 'எல்.ஈ.டி டி.வி, மினி பிரிட்ஜ் என குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை இலவசமாக வழங்கலாம்' என ஆலோசகர்கள் தெரிவித்தனர். ஆனால், ' பிரிட்ஜ் என்பது ஆடம்பரமாகிவிடும். குடும்பப் பெண்களுக்கு துணி துவைப்பதில் இருந்து விடுதலை அளிக்க வேண்டும்' என்ற நல்ல நோக்கத்தில், 'வாஷிங்மெஷினை இலவசமாக வழங்கலாம்' என ஒருவர் சொன்னதும், அம்மா உடனே ஓ.கே சொல்லிவிட்டார். இதையடுத்து, கல்விக் கடன் ரத்து என்ற பேச்சு வந்தபோது, 'கல்விக் கடன் முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதற்குக் கூடுதலாக நிதி தேவைப்படும். இதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அதற்குப் பதிலாக, விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிடலாம்' எனவும் அம்மா சொன்னார். 

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கியதைப் போல, இந்த முறை கையடக்க கணினியை(டேப்லெட்) பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும் முடிவில் இருக்கிறார். இதன்மூலம் மென்பொருள் பயிற்சியை கற்றுக் கொள்வது எளிதாகும் என நம்புகிறார். அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் டேப்லெட் வழங்கப்படலாம். 'மெட்ரிகுலேசன் பள்ளிகளில் கூடுதல் கட்டணத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள். மெட்ரிகுலேசன் பள்ளிகளின் மீது அளவுகடந்த கோபத்தில் மக்கள் உள்ளனர். இதற்குத் தீர்வாக பொறியியல் கல்லூரிகளுக்கு நடப்பது போல, ஒற்றை சாளர முறையில் அட்மிஷன் நடத்தினால் மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள்' எனவும் சிலர் சொன்னார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv