சித்ரா பௌர்ணமி காலங்காலமாக கொண்டாடப்படுவது ஏன்?


சித்ரா பௌர்ணமிக்கு பல்வேறு விஷயங்கள் சிறப்பாக அமைகிறது. பொதுவாக பண்டைய காலத்தில் பல்வேறு நம்பிக்கைகள் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தொடங்குகிறது. சித்திரை மாதத்தில் பௌர்ணமி வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கின்றனர். சூரியன் மகர ராசியில் நுழைவது புண்ணியமாகும். இந்த நாள் சூரியனோடு தொடர்புடைய நாள். அதிகமாக கடல் அலை அடிக்கும் என்பது நம்பிக்கை, இது வெப்ப மாத பருவம். 

இந்த மாதத்தில் முதல் நாள் ராமன், ராவணனை வென்று அயோத்திக்கு கால் வைத்த முதல் நாள். சித்திரை 1ம் தேதி முதல் தான் பஞ்சாங்கம் தொடங்குகிறது. கிராமப் புறங்களில் ஜோசியரை வரவழைத்து வீட்டு திண்ணையில் பெரிய ஜமுக்காளம் விரித்து திண்ணையில் குத்துவிளக்கேற்றி, வெற்றிலை பாக்கு வைத்து ஜோசியரை பஞ்சாங்கம் படிக்க சொல்வார்கள். இந்த வருஷம் மழை உண்டா, வெயில் எப்படி அடிக்கும், விளைச்சல் அமோகமாக இருக்குமா என மக்கள் தெரிந்துக் கொள்வார்கள்.

தமிழ் புத்தாண்டான இந்த வருடம் துர்மிகி ஆண்டு. சுழற்சி வருட கணக்கில் 30வது வருடம்.

"மிக்கான துர்மிகியில் வேளாண்மை யேறுமே,
தொக்க மழைபின்னே சொயியுமே,
குச்சரதேசத்திற் குறைதீரவே விளையும்,
அச்சமில்லை வெள்ளையரிதாம்"- என இந்த ஆண்டுக்கு ஸ்துதி உள்ளது.இந்த வருடம் விவசாயம் நன்றாக இருக்கும். மழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். மேற்கு மாவட்டங்கள் நல்ல செழிப்புடன் இருக்கும் என்கிறது ஸ்துதி. ஏன்கெனவே வானிலை ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்று சொன்னதை இதோடு ஒப்பிடலாம். சித்ரா பௌர்ணமியில் வேப்பம் பூவை, இனிப்பு சேர்த்து வறுத்து சாப்பிட்டால் ஜீரண கோளாறுகள் நீங்குமாம். அகத்தி கீரையையும் கூட்டு வைத்து சாப்பிடுவார்கள். மாலையில் வயதான பெரியவர்கள் கூடி பழைய விஷயங்களை பேசும் வழக்கம் தற்போதும் உள்ளது. சித்ரா பௌர்ணமியில் நிலவின் வெளிச்சம் அதிகமாக இருக்கும். அம்மன், சிவன் கோயில்களில் வழிபாடு நடக்கும்.

"திருச்சி நெடுங்குளம் நெடுங்கலாத சுவாமி கோயில் கல்வெட்டியில் சித்ரா பௌர்ணமிக்கு பின் நடந்த பத்து நாள் விழா பற்றிய குறிப்பும், யோகிகளுக்கு உணவளித்த குறிப்பும் உண்டு.திருச்சி மலைக்கோட்டை கோயிலில் ராசராச சோழனின் பத்தாம் ஆண்டு கல்வெட்டு சித்ரா பௌர்ணமிக்கு நிவந்தம் கொடுத்த கல்வெட்டு குறிப்பு உள்ளது. சித்ரா பௌர்ணமியையொட்டி மதுரையில் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி அமோகமாக நடக்கும். பெண்கள் அதிமாக மல்லிகைப்பூவை தலையில் சூடுவார்கள். அனைத்து சமூக மக்களும் கொண்டாடும் விழாவாக சித்ரா பௌர்ணமி உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள வைஷ்ணவா கோயில்களில் நாபாவி என்கிற சித்திரை பௌர்ணமி நடக்கும். சித்ரா பௌர்ணமியில் சித்திரை புத்திர நைனார் நோன்பு தொடங்குகிறது. இது சித்திர குப்தனுக்காக மக்கள் கடைப்பிடிக்கிற நோன்பு. தென் மாவட்டங்களில் சைவ சமய மக்கள் பெரும்பாலும் இதை கடைப்பிடிப்பார்கள். வீட்டு திண்ணையில் இருந்து சித்திர புத்திர பனை ஓலைச்சுவடிகளை படிப்பார்கள். இவ்வாறு காலங்காலமாக சித்ரா பௌர்ணமி மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் சூரியன் மறையும் போது சந்திரன் முழு நிலவாக உதிக்கும் சித்ரா பௌர்ணமியை காண கன்னியாகுமரி கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.


த.ராம்


~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv