' தேம்பி அழுது வெம்பி வேதனையுடன் சாவோம்...!' -சினிமாவின் எதிர்காலம் குறித்து சேரன் வேதனை


பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி,   வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப் போன்ற சிறந்த படங்களை இயக்கி மக்களிடையே சிறந்த இயக்குனர் என்ற பெயரெடுத்தவர் சேரன். சமீபகாலமாக படத் தயாரிப்பிலிருந்தும் இயக்குதலிலிருந்தும் ஒதுங்கியிருக்கும் சேரன், சினிமாவில் வர்த்தகமும் அதைத் தொடர்ந்து லாபமும்  நிச்சயமில்லாத நிலையில்,  தானே 'சிடுஎச்' (cinema to home)  என்ற திட்டத்தை தமிழ் சினிமாவில் முன்வைத்தார். படத்தயாரிப்பில் பெரிய அளவு லாபம் இல்லையென்றாலும் நட்டம் இன்றி ஒரு படத்தை வெளியிடுவது இந்த முயற்சியின் நோக்கம்

தமிழ்த்திரைப்படங்கள் வெளியாகி, வெற்றிகரமான லாபத்தை தயாரி்ப்பாளருக்கு தரும் முன்னரே திருட்டு வீடியோ, படத்தை திரையிட திரையரங்குகள் கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகளால் நட்டம் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக இந்த திட்டத்தை அவர் முன்வைத்தார். 

திரைப்படங்களை நேரடியாக திரையரங்குகளுக்கு வெளியிடுவதற்கு மாற்றாக நேரடியாக ஏஜென்சிகள் மூலம் சிடி வடிவில் வீடுகளுக்கு விற்பனை செய்யப்படும் என  அவர் அறிவித்தார். 

இதற்காக தமிழகம் முழுவதிலும் ஆதரவாளர்களை திரட்டிய சேரன்,  அதற்கான முயற்சிகளிலும் வணிக ரீதியாக ஈடுபட்டார். ஆனால்  இந்த முயற்சி அவருக்கு கைகொடுக்கவில்லை. எதிர்பாராத வகையில் அது தோல்வியில் முடிந்தது. சேரனின் இந்த முயற்சிக்கு சினிமா வட்டாரத்தில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்காததும் தோல்விக்கு முக்கிய காரணம். 

இந்நிலையில் தனது 'சிடுஎச்'  திட்டம் தோல்வியடைந்த வேதனையில்,   தன் முகநுால் பக்கத்தில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரையும் கண்ணீர் விடவைக்கும் அந்த பதிவு இதோ...

“நண்பர்களும் உறவினர்களும் ஏன் முகநூல் நண்பர்களும்கூட "பாஸ்.. சீக்கிரம் படம் பண்ணுங்க பாஸ்".. "சார் ஆட்டோகிராப் போல மறுபடியும் ஒரு படம் பண்ணுங்க சார்" என கேட்கும்போது நானும் உடனே கேமராவ தூக்கிட்டு போய் ஒரு சிறந்த படத்தை எடுத்துக்கொண்டாந்து கொடுத்துடனும்னு ஆசையாத்தான் இருக்கு..
ஆனால்.. சினிமாவில் அதற்கான சூழல் இருக்கா... இங்கு எடுக்கும் அல்லது வெளியாகும் படங்கள் எல்லாம் லாபமோ அல்லது முதலீட்டு தொகையோ எடுக்குதான்னா நான் 90 சதவீதம் படங்கள் எடுப்பதில்லைன்னுதான் சொல்வேன். சினிமா வெளியில் இருந்து பார்ப்பதற்கும் வேறுமாதிரி தெரியும்... உள்ளே நடப்பதும் இருப்பதும் வேறு.. இங்கே தயாரிப்பாளர்கள் நிறைய இருக்கிறார்கள்.. விலைக்கு வாங்குபவர்கள்தான் இல்லவே இல்லை..

எந்த ஒரு பொருளும் உற்பத்தி ஆகும்போது அதற்கான வியாபாரம் என்ன,  வியாபாரி யார் என தெரியும்.  ஆனால் இன்றைய சினிமா நிலை சில குறிப்பிட்ட ஹீரோக்கள் படம் தவிர யார் படத்துக்கும் வியாபாரி என்பவர்களே இல்லை. நேரடியாக நாமே திரையரங்கத்தில் வெளியிட்டால்தான். திரையரங்கிலும் ஹீரோக்கள் படம் தவிர எந்த படங்களுக்கும் முன்பணம்,  அதாவது டெபாசிட் தொகைகூட தர முன்வருவதில்லை. அப்போது தயாரிப்பாளர் வேறுவழியின்றி படத்தை அவரே சொந்த செலவில் வெளியிடவேண்டியுள்ளது. 

மறுபடியும் 75 லட்சம் விளம்பரம் செய்து, வெளியானபின் ஒருவாரம் அல்லது இரண்டு வாரங்கள் மட்டுமே ஓடும் நிலை. மக்களோ ஹீரோக்கள் அல்லாத திரைப்படங்களுக்கு உடனே வருவதில்லை.  கேள்விப்பட்டுத்தான் வரமுடியும். அதற்குள் அடுத்த படம் Q வில் நிற்பதால் தூக்கிவிடுகிறார்கள். முதலீடு செய்த மொத்த பணமும் போய்விட,  தயாரிப்பாளர் தெருவில் நிறுத்தப்படுகிறார். சரி நம்ம படம் அப்படி இல்லை. நமக்குன்னு ஆடியன்ஸ் இருக்காங்க,  அவுங்க நம்ம படத்தை கைவிட மாட்டாங்கன்னு சொந்தமா எடுக்கிறோம், எடுத்தோம்..

ஒரு திரைப்படம் எடுக்கும்போது பணத்திற்கு பைனன்சியர்களிடம் வட்டிக்கு வாங்கி,  படம் வெளியீட்டிற்கு முன் வியாபாரம் செய்து,  அவர்களுக்கு கொடுத்துவிட்டு படத்தை வெளியிடுவோம். ஏனெனில் ஒரு முழுப்படத்தை எடுக்க தேவையான 5 கோடி 6 கோடி ரூபாய், என்னைப்போல் தரமான படம் எடுக்க அதாவது ஹீரோக்கள் இல்லாமல் எடுக்க நினைக்கும் இயக்குனர்களிடம் இருப்பதில்லை. அந்த அளவு நாங்கள் சம்பாதிக்கவில்லை. இதுவரை கடன் வாங்கி அதை சரியாக திரும்ப கட்டித்தான், படத்தை வெளியிட்டு எங்களை பாதுகாத்துக்கொண்டோம். ஆனால் இப்போதைய நிலையில் வியாபாரி இல்லாதபோது பைனான்சியர் எப்படி பணம் கொடுப்பார்கள்? 

சரி குறைந்த செலவில் படம் பண்ணலாம் என்றால், அதற்கான கதை அமைந்தாலும் படப்பிடிப்பு செலவு அதே நிலைதான். இவ்வளவு கேள்விகளையும் வைத்துக்கொண்டு, சரி நமக்கென ஒரு பிளாட்பார்ம், நம்மைப்போல இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் படங்கள் வியாபாரம் இல்லாவிட்டாலும்,  வெளியிட்டு போட்ட முதலீட்டை எடுக்கும் வகையில் C2H என்ற திட்டம் தீட்டி போராடி,  ஒரு அமைப்பை உருவாக்கினால்,  அதை தடுக்க ஒரு கூட்டம்... அதை ஆதரிக்க ஒரு தயக்கம்... என்ன செய்வது...? 

தேம்பி அழுது
வெம்பி வேதனையுடன்
சாவோம்...
அன்றி நாங்கள்
தோள்தட்டி நின்று
தொடமுடியா வானம்
இல்லையென
தொட்டுவிட முயல
இங்கே யாருமில்லை...

சரி,  உலகெங்கும் நல்ல சினிமா ரசிகர்கள் தவமாய் தவமிருந்து  பார்த்தும் ஆட்டோகிராப்  பார்த்தும் ரசித்த எத்தனையோ பெரிய பணம் படைத்த நல்ல இதயங்கள் கைகொடுப்பார்கள் என முயன்றால்,  அவர்களும் பெரிய ஹீரோக்களை வைத்துதான் படம் பண்ண செல்கிறார்கள்.... அன்றி புதிய முயற்சிக்கு கைகொடுக்கவோ அல்லது நேர்மையின் பக்கம் துணை நிற்கவோ தயங்குகிறார்கள். இந்நேரம் ஒரு பெரிய பணக்காரர் என்பக்கம் துணையாக நின்றிருந்தால் C2H என்ற நிறுவனம் நிறைய தயாரிப்பாளர்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்திருக்கும். நிறைய இயக்குநர்களின் வாழ்வை உறுதிப்படுத்தியிருக்கும். என் முயற்சியின் பிழையா அல்லது என் நம்பிக்கையின் பிழையா என தெரியவில்லை...தடைபட்டு நின்றிருக்கிறேன்...
ஒரு விடியலை தேடும்
ஒரு திருட்டை தடுக்க நினைக்கும்
மாற்று சினிமாவை வளர்க்க நினைக்கும்
தரமான சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச்செல்ல என்னோடு கைகோர்க்க நினைக்கும் அந்த நல்ல மனிதர்களுக்காக காத்திருக்கிறேன். அவர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை... ஓராயிரம் பேராகவும் இருக்கலாம்...

அப்போது எனது படங்களும் என்னைப்போல் நல்ல சினிமா கனவோடு திரியும் இளைஞர்களின் சினிமாவும் உங்கள் பார்வைக்கு வரும்....?" என்று தனது வேதனைக்குரலை வெளிப்படுத்தியிருக்கிறார் சேரன்.

கலை என்ற ஒன்றை மீறி,  சினிமா வணிக ரீதியான அபரித வளர்ச்சி பெற்றுவிட்ட சூழலில், சினிமாவை நிஜமாய் நேசிக்கும் சேரன் போன்றவர்களின் வேதனைக்குரல்,  தமிழ்சினிமாவிற்கு ஆரோக்கியமானதல்ல.

- எஸ்.கிருபாகரன்


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv