பாழாகும் மாமல்லபுரம் பாரம்பர்யம்... வேடிக்கை பார்க்கும் தொல்லியல்துறை!


மாமல்லபுரம் பல்லவ சிற்பங்களை உருவாக்கிய சிற்பிகளின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுகளில், மண்ணை போட்டு மூடிவருகின்றது நெடுஞ்சாலைத்துறை. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது பூஞ்சேரி. இந்த கிராமத்தில் உள்ள பாறைகளில் பல்லவர்கள் காலத்தில் வாழ்ந்த சிற்பிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இருவழிப்பாதையாக இருந்த கிழக்கு கடற்கரை சாலை,  தற்போது நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாமல்லபுரத்தை உருவாக்கிய சிற்பிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பாறைகள்,  மண்ணால் மூடப்படும் அவலம் நிகழ்ந்து வருகிறது.மேலும் இங்குள்ள புராதன சின்னமாக விளங்கும் பாறைகள் சேதம் அடைகின்றன. 

பழங்கால வரலாற்று சின்னங்கள் நிரம்பிய இந்த பாறைகளுக்கு அருகே,  கருமையும் சிவப்பும் உள்ள பானை ஓடுகள் நிறைய கிடைத்திருக்கின்றன. இவை ஏறக்குறைய இரும்பு காலத்தை சேர்ந்தவை. பண்டைய காலத்தில் பயன்படுத்திய செங்கல் துண்டுகள் இன்னும் அங்கே கேட்பாரற்று இருக்கின்றன.

இந்த பாறைகளுக்கு பக்கத்திலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதுமக்களின் தாழி கிடைத்துள்ளது. இப்படி அரிய வரலாற்றுச் சின்னங்கள் கிடைத்தும்,  கிடைத்துக்கொண்டிருக்கும் பகுதி உதாசீனம் செய்யப்பட்டுவருகின்றது என கவலை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்.

சுனாமிக்கு பிறகு மருத்துவமனை மற்றும் பள்ளி கட்டுவதற்கு இந்த முதுமக்கள் தாழி அமைந்துள்ள இடம் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தில் கட்டடங்களை கட்டிவிட்டார்கள். மேலும் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த பாறைகள் சமூக விரோதிகளின் கூடாரமாக பயன்படுகின்றன. அந்த பாறைகளின் ஓரங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் சட்டவிரோதமாக மண் திருடப்பட்டு வருகின்றது. ஆனால் அத்தனை அவலங்களையும்,  இவற்றை காத்து பராமரிக்கவேண்டிய தொல்லியல் துறை கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்கின்றது என மாமல்லபுரம் நலம் விரும்பிகள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய, மாமல்லபுரம் சுற்றுச்சூழல் கேடு தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்துவருபவரும் மதிமுக துணைப் பொதுச் செயலாளருமான மல்லை சத்யா, “மாமல்லபுரத்திற்கு புகும் சேரியாக இருந்த ஊர்தான், பிற்காலத்தில் மருவி பூஞ்சேரி  என்றானது. அந்த காலத்தில் ஊர் புகும் கிராமம், ஊர் புகும் நகரம், சேனாமுகம், பட்டினம், கருவடம், ராஜதானி, சிபிகா என ஏழுவகையான நகரங்கள் இருந்திருக்கின்றன. 

அரசனுடைய படைகள் பரிவாரங்கள் புகும் சேரியாக விளங்கியதுதான் இந்த பூஞ்சேரி கிராமம். பூஞ்சேரி வழியாகதான் மாமல்லபுரத்திற்கு செல்லமுடியும். கிழக்கு கடற்கரைச் சாலை ஓரத்தில் உள்ள சிறிய பாறைகளில்,  தொட்டி போன்று ஒரு பாறை இருக்கின்றது. இதை நொண்டிவீரப்பன் தொட்டி என்று அழைக்கின்றார்கள். அந்த தொட்டியை சுற்றி ஏழு கல்வெட்டுகள் உள்ளன. 

அந்த ஏழு கல்வெட்டுகளில் மாமல்லபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை உருவாக்கிய சிற்பிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருகின்றன. பல்லவர்காலத்தை பொறுத்தவரை கோவில்களை உருவாக்கிய சிற்பிகளின் பெயர் வேறு எங்கேயும் சொல்லப்படவில்லை என்பதுதான் இங்கு குறிப்பிடவேண்டியது. அந்தவகையில் இதுதான் பல்லவ சிற்பிகளின் அதிகாரப்பூர்வ ஆவணம் எனலாம்.

உத்திரமேரூரில் பரமேஸ்வர பெருந்தச்சனின் பெயரும், தஞ்சாவூரில் குஞ்சல பெருமல்லன் ராஜராஜன் எனவும் கோயில்களை உருவாக்கிய சிற்பிகளின் பெயர்கள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. மாமல்லபுரத்தில் கேவாத பெருந்தச்சன், லலிதாங்குரன், ரவி பெருந்தச்சன், பையமிழைப்பான் என இது போன்று ஏழு பெயர்கள் உள்ளன. இந்த ஏழு பெயர்களும் வேறு எந்த கல்வெட்டிலும் குறிக்கப்படவில்லை. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாறைகள் சமூக விரோதிகளாலும்,  சாலைமேம்பாடு என்ற பெயரில் அரசாலும் சிதைக்கப்படுவது வேதனையளிக்கிறது.

தொல்லியல் துறையிடம் பொதுமக்கள் சார்பில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

அவர்கள் நடவடிக்கை எடுத்து இந்த இடங்களை பாதுகாத்திருக்கலாம். இந்த கல்வெட்டை இங்கிருந்தே பாதுகாக்க முடியவில்லையென்றால், குறைந்த பட்சம் தொல்லியல் துறையின் மியூசியத்திலாவது இந்த பாறையை வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். இடது பக்கம் சாலையை அகலப்படுத்துவதற்கு பதிலாக, வலது பக்கத்தில் அகலப்படுத்தலாம். வலது பக்கத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன. கட்டடங்கள், வீடுகள் இல்லாததால் பொதுமக்களின் எதிர்ப்பும் இருக்காது.

மாமல்லபுரம் பல்லவர்கள்கால கலைச்சின்னமாக இருந்தபோதிலும், மாமல்லபுரத்தில் தலைநகரை விட துறைமுகப்பட்டினமாகவே இருந்திருக்கின்றது. வெளிநாட்டு போக்குவரத்திற்கு நிலவழியைவிட நீர்வழிபோக்குவரத்தைதான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். பல்லவர்கள் காலத்தில் கடல்கடந்து வந்தவர்கள் தமிழகத்தில் அதிகமாக நுழைவதற்கு காரணமாக இருந்த இடம் மாமல்லபுரம். பல்லவர்களின் கோட்டை, கொத்தளங்கள், மாடமாளிகை போன்ற கட்டுமானங்கள் இருந்ததற்கான ஆதாரமாக  இங்கிருக்கும் செங்கற்களின் மூலம் அறியலாம். தொல்லியல் துறை இந்த இடத்தை பாதுகாத்து, ஆய்வுகளை மேற்கொள்ளும் போது, மாமல்லபுரம் பற்றிய சுவாரஸ்யமான இன்னும் பல உண்மைகள் வெளிவரும்” என்றார் வேதனையான குரலில்.

மாமல்லபுரம் கிரியேட்டிவ் கல்ப்சர்ஸ் (படைப்பு சிற்பி) சிற்பக்கூடத்தின் உரிமையார் பாஸ்கரனிடம் பேசினோம். 

“வெளிநாடுகளில் தன்சிற்பத்தை உருவாக்கிய சிற்பிகளின் பெயர்களை முன்னிலைப்படுத்துவது அரசர்களின் மரபு. மாமல்லபுரம் சிற்பங்களை பல்லவர்கள் உருவாக்கினார்கள் என்று சொன்னாலும், அந்த சிற்பங்களை உருவாக்கிய சிற்பிகளின் பங்கு மிக முக்கியமானது.

பண்டைய காலத்தில் அரசனும் சிற்பியாகவே இருந்திருக்கிறார் என்பதற்கான சான்றுகள் இவை. அரசன் நினைத்ததை சிற்பமாக கொடுத்தவன் சிற்பி. பல்லவ சிற்பங்களை உருவாக்கிய சிற்பியின் பெயர்களை பாதுகாப்பதன் மூலம், மாமல்லபுரத்தின் தொன்மையான வரலாறு பாதுகாக்கப்படும். சிற்பிகளின் கௌரவமும் நிலைநாட்டப்படும். புராதன சின்னங்களை அழிக்கும் வேலையை அரசே செய்யக்கூடாது” என்றார். 

இந்திய தொல்லியல் துறை தென்மண்டல அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “எங்களுக்கும் இதுகுறித்து சில புகார்கள் வந்திருக்கின்றன. நாங்களும் அந்த இடத்தை நேரடியாக பார்த்துவிட்டு வரச்சொல்லி இருக்கிறோம். டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கும் இதுகுறித்து  தகவல் தெரியப்படுத்தி இருக்கின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தொல்லியல் துறை இவற்றை பாதுகாக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.” என்றார் 


பா.ஜெயவேல்



0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv