காதலர் தினம்- Feb 14


காதலர் தினம் உலகம் முழுவதும் பெப்ரவரி 14 விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இக்கொண்டாட்டத்தின் பின்னணியில் வலன்டைன் எனும் பாதிரியாரின் சோகக்கதை ஒளிந்திருப்பினும் உண்மையில் காப்பரேட்டுக்களின் உரத்தில் இன்னும் இத்தினம் உயிர்ப்பில் இருக்கின்றது என்பதே சரியாக இருக்கும். அதற்கு சான்றாக அகிலமெங்கும் விற்பனையில் சூடு பிடிக்கும் காதலர் தின வாழ்த்து அட்டைகள் தொடங்கி இரத்த அணுக்களின் பென்டன்கள் வரை நீளும் பரிசுப்பட்டியல்கள் என்பவற்றை காட்டமுடியும். அத்தோடு புனித வலன்டைனின் நினைவு தினமாக முதலில் அனுஷ்டிக்கப்பட்ட இத்தினம் தொடர் மாற்றத்தின் மத்தியில அன்பின் வெளிப்பாடாக இருந்து தற்பொழுது காதலின் வெளிப்பாட்டு தினமாக மாற்றம் கண்ட கதையையும் நாம் மறக்க கூடியதில்லை. 
ஆனால் காதல் எனும் உணர்வு மனித வாழ்வின் உன்னத தன்மையை அவனுக்காக உணர்த்துகின்றது என்பது மட்டும் உண்மை. எதற்காகவும் கலங்காத பலர் காதல் எனும் ஒன்றைச் சொல்லுக்காக கலங்கி நின்ற காட்சிகளை நம்மில் பலர் கண்டிருப்போம். “காதலுக்காக சாகவும் கூடாது காதலிக்காமல் சாகவும் கூடாது” எனும் வாக்கியத்தின் உட்பொருள் எதுகை மோனை பேசும் வெறும் வாக்கிய ஞாலங்களல்ல. அவை ஆண், பெண் எனும் பரப்பின் மைய அலகான வாழ்விற்கு அர்த்தம் சேர்ப்பது.
காதலையும் காமத்தையும் இன்றைய உலகு சரியாக புரிந்து கொள்ளவில்லை என சிலதரப்பினர் வாதிடுகின்றனர். உண்மையில் காமம் இல்லையேல் காதல் இல்லை என்பதே யதார்த்தம். பாலுணர்ச்சி எனும் அடிப்படை ஈர்ப்பிற்கு அடிப்படை என்பதை உலகம் தெரிந்து கொண்ட பிறகு ஈர்ப்பின் சாரமாய் காதலை அங்கீகரித்த பிறகு உலகம் காதலை காமத்தின் பெயரில் எள்ளி நகையாடுவதில் எவ்வித அடிப்படைகளும் இல்லை. ஆனால் காமம் என்பது உடல்களின் சங்கமத்தில் இருந்து மட்டும் பிறப்பது என கருதின் அது எனது வாதத்தின் தளவெல்லையை தாண்டிச்செல்வதற்கு ஒப்பானதாகும். இதையே திருவள்ளுவர் பின்வருமாறு எடுத்தியம்பினார் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல்தாமரைக் கண்ணான் உலகு” இதன் பொருளான்மை பாலீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதை மறுக்க இயலாது. 
காதல் ஒருவனின் வாழ்க்கையை உயர்த்த வேண்டும், அவனது அதிகபட்ச வாழ்வின் தகவெல்லையை சாதிக்க அது உதவ வேண்டும். அது சாதி,மதம்,இனம் மற்றும் பொருளாதாரம் தாண்டி வர வேண்டும். அதை விடுத்து ஒருவனது தன்மானத்தை மண்டியிட வைத்து வாழ்வின் பிடியை அவனிடமிருந்து தளர்த்தி என்றுமே தங்கி வாழ்வோன் எனும் நிலைக்கு ஆளாக்கி விடக் கூடாது.
காதலின் வெற்றி திருமணம் என்ற பலரது பொதுவான கணிப்பு தவறானது. காதலைப்பற்றி எனக்கு மிகப்பிடித்த ஆங்கில வாக்கியம் பின்வருமாறு கூறுகின்றது. “It takes a second to say I love you, but a life time to show it” அதாவது ஒரு கண நேரத்தில் மலரும் காதலின் உறுதியை காட்ட நாம் எமது வாழ்நாளை அர்ப்பணிக்க வேண்டும். எமது வாழ்வின் பெரும் பகுதி திருமணபந்தம் எனும் வளையத்தினுள் கழிகின்றது. திருமண வாழ்வின் வெற்றி என்பது பொருளாதார அல்லது கல்வி வெற்றிகளை மட்டுமே குறிக்காது. மாறாக அது தம்பதியினர் ஒருவர் மீது மற்றவர் கொண்ட திருப்தியின் வெளிப்பாடாகவே அமையும். அந்த திருப்தியை மற்றவரிடம் இருந்து எதிர்பார்ப்பது போலவே அவர்கள் மற்றவர்க்கு வழங்கவும் என்போதும் தயாராக இருக்க வேண்டும்.
 காதல் எனும் மாயை ஓர் ஈர்ப்பின் காரணமாக உருவாகியுள்ளதால் அதில் முயற்சி எனும் விடயம் முன்னுரிமைப்படுத்தப்படவில்லை. அந்த மாயை முயற்சி எனும் திடம் இன்றி விரைவில் கரைந்து விடுவதே யதார்த்தம். எனவே அந்த யதார்த்தம் இருமனங்களுக்கிடையில் பிணக்குகளை மிகவிரைவாக கொணர்ந்து விடுகின்றது. ஆனாலும் அந்த யதார்த்தத்தின் பிரதிபலிப்பை தாண்டிபிரபல திருமண மற்றும் குடும்ப வாழ்வு உளவளவாளரான Dr.Gary Chamman இதற்கான காரணங்களையும் தீர்வுளையும் எளிதாக விளக்குகின்றார். அவர் தம்பதியினருக்கிடையில் ஏற்படுத்தப்படக்கூடிய அன்புப் பரிமாற்ற விடய தானங்களை ஐந்தாக விளக்குகின்றார். அந்த ஐந்தின் அடிப்படையில் வெற்றிகரமான திருமண வாழ்க்கையை உங்களால் அமைத்துக்கொள்ள முடியும்.
01.வார்ததைகளில் ஊக்கமளித்தல்
இதன் மூலம் வெளிப்படுத்தப்படுவது யாதெனில் ஒரு துணை மற்றைய தணையின் செயற்பாடுகளை மனம் திறந்து வாய் வார்த்தைகள் ஊடாக பாராட்ட வேண்டும். அது அவசியம் கருதி செய்யப்பட்ட ஓர் செயலாக இருக்கலாம் அல்லது நாளாந்த அடிப்படையின் வழமைக்கு உட்பட்ட ஒன்றாக காணமுடியும். ஒரு திடீர் பாராட்டு நிச்சயம் உங்கள் துணையை உற்சாகப்படுத்தும். அது நீங்களே உங்கள் துணைவர் மட்டில் மகிழ்வுக்குரிய விளைவுகளை ஏற்படுத்த காரணமாகும். அவ்வாறான கணங்கள் “இந்த மூணு நாள் தாடி சுப்பர்” என்பதில் ஆரம்பித்து “இந்த சல்வார் உம்மட கலருக்கு நல்லா சூட் பண்ணுது” என்பது வரை தொடரலாம்.
02.ஒன்றான செலவழிக்கும் நேரம்
ஒன்றாக தம்பதியினர் செலவழிக்கும் நேரம் என்பது இருவரும் ஒன்றாக எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் நேரங்களை குறிக்காது மாறாக ஒருவர் மீது மற்றவர் செலுத்தும் கவனத்தை குறிக்கும். அலுவலக வேலைகள் முடிந்து கையில் வடையுடனும் நீருடனும் அருகருகில் உட்காரும் தருணங்கள் உங்கள் உடற்களைப்பை போக்கி வயிற்றுப்பசியை நீக்க என நீங்கள் நினைத்தால் அது தவறு. அக்கணங்கள் அன்றைய நாளின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் அடுத்த நாளின் திட்டங்களை ஒப்புதலுடன் கொணரும் ஓர் பொழுது என நீங்கள் நினைத்தால் மாத்திரமே வாழ்வு சுவையுடன் நீடித்திருக்கும்.
03. பரிசுப் பொருட்கள்
பரிசுப்பொருட்கள் மனித நாகரீகத்தின் வளர்ச்சிப்பாதையில் அன்பின் வெளிப்பாடாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. காதல் எனும் உணர்வின் பௌதீக காண் தகைமையின் கருப்பொருளாக பரிசுப்பொருட்கள் விளங்குகின்றன. மேற்குறிப்பிட்ட செலவழிக்கும் நேரம் எனும் தகக்கூறு இவ்வகுதிக்குள்ளும் பெருந்தாக்கம் ஒன்றை செலுத்துகின்றது. அப்பொருள் குறிப்பாக உங்கள் நேரத்தேடலுடனான செலவழிப்புடன் கூட்டுச்சேரின் அதன் பெறுமதி உங்கள் துணையை பொறுத்த மட்டில் மிக உயர்ந்ததாகும். இதற்காக கைவினையியல் பொருட்கள் (Handmade Originals) சிறப்பானவையாகும். அதே போல எதிர்பாரா தருணங்களில் உங்கள் துணை இது தனக்கு பிடிக்கும் என வகைப்படுத்திய பொருட்களை ஞாபகமாக குறிப்பெடுத்து வைத்து பின்னர் வி்ஷேட தினங்களில் அவற்றையே பரிசுப்பொருட்களாக கொடுத்து அசத்துங்கள்.
04.செயல் ரீதியான தேவைப்பாடுகளை பூர்த்தியாக்கல்
தம்பதியினர் இருவரும் மற்றைய துணை தமது ஒருமித்த வாழ்வில் ஆற்ற வேண்டிய பணிகள் என பல எதிர்பார்ப்புக்கள் இருக்கும். இந்த எதிர்பார்ப்புக்கள் சமூகத்தின் அடிப்படை அலகாகிய குடும்பத்தினுள் திருமண பந்தம் மூலம் நுழைந்த பின்பு சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்பெறுகின்றன. இவை வீடு பெருக்கல், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லுதல், பொருளாதாரத்தை நிறைவு செய்தல் ஏன் சாதாரணமாக அதிகாலை உறக்கத்தின் பின்னர் படுக்கை விரிப்புக்களை சரி செய்தல் என அடுக்கிக் கொண்டே போகலாம். சில கடமைகள் ஆண்கட்கு, பெண்கட்கு என்று சமூக வழக்காற்றில் பிரிக்கப்பட்டு உள்ளது. ஆகாலும் இவற்றில் சில மாற்றங்கள் மற்றும் மாறுதல்கள் தம்பதியினருக்கிடையில் நெருக்கத்தை அதிகரிக்க உதவுவதோடு உங்கள் குழந்தைகள் ஓர் பாசமான சூழ்நிலையில் சமநிலைத்தன்மையோடு வளரவும் உதவியாக இருக்கும்.
05.பௌதீக ரீதியிலான தொடுகை
பௌதீக ரீதியிலான தொடுகை ஆனது திருமண வாழ்வின் ஓர் சிறப்பான தொடர்பாடல் முறைமை ஆகும். இதற்கு உதாரணம் குழந்தை வளர்ப்பில் நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளே ஆகும். தொடுகையின் ஆளுமை மனித மன ஏக்கத்தின் வலிக்கு அருநிவாரணியாக அமைகின்றது. அணைப்பு, தழுவல், மென்மையான முத்தம், வருடல் மற்றும் உடலுறவு கூட தம்பதியினருக்கிடையில் நெருக்கத்தை கூட்ட முடியும். ஏனெனில் உடலியல் இயக்கம் துாண்டப்படும் போது மூளையின் உணர்வுகள் செம்மைப்படுத்தப்பட்டு மனம் அமைதியடைகின்றது. அமைதியான மனமே ஆனந்தத்தின் திறவு கோல் ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு எனும் பொன்மொழிக்கேற்ப வீணாக நேரந்தெரியாத சீண்டலும் தீண்டலும் விழலுக்கு இறைத்த நீர் என்பதை தாண்டி துணையின் வெறுப்பிற்கும் உள்ளாக நேரிடும் என்பதை கவனித்து செயற்படுவது நன்று. உணவு உண்ணும் தருணம் மேசையில் இருந்து சாப்பிட்டால் உங்கள் தணையின் நுனிக்காலிலிருந்து கணுக்கால் வரை உங்கள் நுனிக்காலால் வருட தொடங்குங்களேன்.
மேற்குறிப்பிட்ட அனைத்து வழிமுறைகளும் அளவுகள் பயன்பாட்டில் ஒவ்வோர் தம்பதியினருக்கிடையிலும் வேறுபடலாம். அது எவ்வெவ் அளவில் கலக்கப்பட்டு விருந்தாக்கப்பட வேண்டும் என்ற அகிலத்துவ சமன்பாடு ஒன்றை முன்னிறுத்துவது சாத்தியப்பாடான ஓர் விடயமல்ல. அது மற்றைய துணையின் கணிப்பீட்டு சாமர்த்தியத்திலேயே தங்கியுள்ளது. இந்த முறைமைகளை சரியான முறைமையின் கீழ் கையாளின் மிக இன்பகரமான குடும்ப வாழ்க்கையை பெற்றவராக நீங்கள் விளங்குவீர்கள். இதன் இரகசியம் ஈர்ப்பின் பால் ஏற்படும் மாயை எனும் காதல், முயற்சி எனும் திடவுருவத்தால் வலுவூட்டப்பட்டு வாழ்க்கைக் காலம் முழுவதும் தொடர்கின்றது.
எது எவ்வாறிருப்பினும் இந்த 14ம் திகதி ஒவ்வோர் மனிதனுக்கும் இன்று தவிர்க்க முடியாததாகியுள்ள இயந்திர மயமான வாழ்வோட்டத்தில் அன்பு எனும் வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தையும் நினைவூட்டும் ஒரு நாளாக ஏற்கப்பட்டுள்ளது.
அ.அர்ஜின்

1 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv