உலகையே திரும்பி பார்க்க வைத்த “சார்லஸ் டார்வின்”

குரங்கிலிருந்து பிறந்தவன் தான் மனிதன் என்ற புரட்சிகரமான கருத்தை வெளியிட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் சார்லஸ் டார்வின்.
"பரிணாமவியலாரின் தந்தை" என்று போற்றப்படும் சார்லஸ் டார்வின் அவரின் வாழ்க்கை வரலாற்றுப்பதிவு உங்களுக்காக சமர்ப்பனம்.

டார்வினின் இளமைக்காலம்

டார்வின் 1809 ம் ஆண்டு பிப்ரவரி 12ம் திகதி இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி(Shrewsbury) என்னுமிடத்தில் பிறந்தார்.

அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர், அவரது தாத்தாவும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார்.

சுரூஸ்பெரியில் தொடக்கக்கல்வியைக் கற்றார். சிறு வயது முதற் கொண்டே விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

தன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று அவரது தந்தையார் விரும்பி எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மகனைச் சேர்த்தார், ஆனால் இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை.

சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார்.

மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார்.

அவர் தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை இறையியல் பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின்.

படிப்பில் சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆய்விலேயே மிகுந்திருந்தது.





கடற்பயணம்

தமது 22வது வயதில் இறையியலில்(Theology) பட்டம் பெற்ற டார்வின் கிறிஸ்துவ திருச்சபையில் உறுப்பினராகச் சேரவும் மறுத்துவிட்டார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோ(John Stevens Henslow) என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார்.

1831ம் ஆண்டு சாதாரண பட்ட இறுதிப் பரீட்சையில் அவர் சிறப்பாகச் செய்து, 178 பரீட்சார்த்திகளில் பத்தாவதாக வந்தார். அவர் மூலமாக கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிட்டியது.

தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது.

அதனை ஏற்றுக்கொண்டு 1831ம் ஆண்டு டிசம்பர் 27ம் திகதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர், இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர்.

ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22.

ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது. இடரும், இன்னலும் மிகுந்த கடற்பயணத்தைச் சார்லஸ் டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார்.

பயணத் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல், தற்போது காணக்கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார்.

இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியது.

“உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது.




ஆய்வுப்பணிகள்

ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும், ஆய்வுகளையும் வைத்து அவர் The voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

புதிய உயிரினங்கள் உருவாகும் முறை, பின்னர் அவை தங்களின் மூலத்திலிருந்து முழுமையாக மாறி விடுவதன் காரணங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து 1859ம் ஆண்டு உலகை வியப்பில் ஆழ்த்திய தனது புத்தகத்தை வெளியிட்டார் டார்வின்.

"The Origin of Species by Natural Selection" அதாவது 'இயற்கையில் உயிரினங்களின் தோற்றம்' என்ற அந்த புத்தகம் கூறிய சித்தாந்தம்தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம். அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும் என்று கூறினார் டார்வின்.

அதை 'Natural Selection' என்றும் "survival of the fittest" என்றும் அவர் விளக்கினார். ஆனால் அந்த சித்தாந்தத்தின் விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே அது பொருந்தும் என்றுதான் நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.

பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை.



ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே தேவாலயங்களின் கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் சித்தாந்தம்.

அவர் வாழ்ந்த போதே அவரது "The Origin of Species" என்ற நூல் உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 
மூன்று அம்சங்களை கொண்ட டார்வினின் பரிணாம கோட்பாடு

டார்வின் பரிணாம கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது.

1. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)
2. மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குஎடுத்துச் செல்லும் ஆற்றல்)
3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச்சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப் பெருக்க முறைகளை தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)


இறப்பு

சார்லஸ் டார்வின் 1882ம் ஆண்டு ஏப்பிரல் 19ம் திகதி இவ்வுலக வாழ்வை நீத்தார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv