நடுத்தர வயதினர் கொலஸ்ட்ரோலை குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்...!

கொலஸ்ட்ரால் என்பது தினசரி நம் உடலின் இயக்கத்திற்கு தேவையான ஒரு சிறந்த திரவமாகும். இது ஹார்மோன் உற்பத்திக்கும், உறுப்புகளின் இயக்கத்திற்கும் அவசியமான ஒன்றாகும்.


கொலஸ்ட்ரால் அளவு நமது உடலில் தேவையான அளவு மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தற்காலத்தில், முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவே உள்ளது. அதிக அளவிலான கொலஸ்ட்ரால், உடலுக்கு பலவிதமான ஊறுகளை விளைவிக்கிறது.

இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பலவிதமான இதய நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது அவசியமாகிறது. பொதுவாக முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, உடல் உழைப்பு குறைந்து, மன அழுத்தம் அதிகரித்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.

கட்டுபாடற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை, பரம்பரை, செரிக்கப்படாத கொழுப்பு, புகைப்பழக்கம் மற்றும் அதிக அளவிலான எடை போன்றவை கொலஸ்ட்ரால் அதிகரிப்பிற்கான இதர காரணங்கள்.

முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஒருவேளை கொலஸ்ட்ராலின் அளவு கூடுதலாக இருக்குமானால், சில வழிமுறைகளை பின்பற்றி, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பது அவசியமாகும்.

முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க சில எளிய வழிமுறைகள்:

இயற்கையான பழச்சாறு

குருதி நெல்லி மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகள் போன்றவற்றில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசியான்கள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த சத்துகள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தவை. ஒரு டம்ளர் ஆரஞ்ச்சு ஜூஸ் தினமும் அருந்தி வந்தால், தோராயமாக 5-7% வீதம் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய வாய்ப்பு உள்ளது. இது முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு ஒரு எளிய வழி.

குறைந்த அளவிலான உணவு

குறைந்த அளவிலான உணவை சரியான இடைவேளையில் எடுத்து கொள்ளுதல், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை நமது உடலில் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். குறைந்த அளவிலான கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். மேலும் அதிக அளவிலான நிறைவுற்ற கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

கைக்குத்தல் அரிசி

முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு அதிக அளவில் தானியங்களை உண்ண வேண்டும். கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிலும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு கார்போஹைட்ரேட் உணவுகளை குறைந்த அளவில் எடுத்து கொள்ள வேண்டும். கைக்குத்தல் அரிசி, ப்ரௌன் பிரட் மற்றும் முழு தானிய வகைகள் போன்றவை கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு, உடலுக்கும் ஆரோக்கியத்தை வழங்குகிறது.

ஆரோக்கியமான எண்ணெய்கள்

தவிட்டு எண்ணெய், சோயா எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவை கொலஸ்ட்ரால் குறைவான எண்ணெய்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தல் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு எளிய வழிமுறை. மேலும் எண்ணெய் வாங்கும் போது, எண்ணெய்களின் கொலஸ்ட்ரால் அளவை ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும்.

சத்தான ஓட்ஸ்

ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் 10-12% கொலஸ்ட்ரால் குறைகிறது என ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. காலை நேரத்தில் ஓட்ஸ் உட்கொள்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். அது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கிறது. முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு மிக சிறந்த வழி, காலை உணவாக ஓட்ஸ் உண்பது.

ப்ளாக் டீ

கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு மற்றும் கட்டுபடுத்துவதற்கான மற்றொரு வழி, பால் இல்லாத ப்ளாக் டீயை அடிக்கடி அருந்துவது. இந்த டீயில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் கொலஸ்ட்ராலை குறைக்கும் வல்லமை வாய்ந்தது. இது போலவே, தினமும் இரவில் ஒரு டம்ளர் ஒயின் அருந்துவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்தலாம்.

ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்

கட்டுப்பாடான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு முறை மற்றும் குறைந்த கொலஸ்ட்ரால் உணவை உண்ணுதல், செரிக்கப்படாத கொழுப்பு உள்ள உணவை தவிர்த்தல், முறையான உடற்பயிற்சி போன்றவை கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள். இவையே முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான எளிய வழிகள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv