எழுத்தறிவை மாணவர்களுக்கு ஊட்டவேண்டியது ஆசிரியது கடமையாகுமா?

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்பார்கள். எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்றெல்லாம் கூறுவார்கள். 

ஆனால் இந்த எழுத்துக்கும் மொழிக்கும் இடையிலான தொடர்பு மிகமிக அதிகமாகும். மொழியின் அடிப்படைத்திறன்களான கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து என்பனவற்றுள் வரும் எழுத்துத்திறன் ஏனைய மூன்றிலிருந்தும் சற்று வேறுபட்ட நிலையில் காணப்படுகின்றது. மொழியை ஒரு பிள்ளைக் கற்கின்றபோது அதிலுள்ள எழுத்துக்களையும் சொற்களையும், வாக்கியங்களையும் முறையாக எழுதும் அளவிலேயே எழுதுதல் எனும் திறன் நிறைவடைகின்றது. ஆதலால்தான் மொழியின்வழி கருத்துக்களை வல்லமையாக வெளியிடுகின்ற திறன் இந்த எழுத்துத்திறனுக்குண்டு. ஆதலால்தான் இது மொழியின் உயர்நிலைத் திறனாகக் கொள்ளப்படுகின்றது.

இந்தத் திறனை பெறவேண்டுமெனில் எழுதுதல் திறனோடு சிந்தனைத் திறனும் இணைந்து கொள்ள வேண்டும். கடிதம், கட்டுரை, படைப்பு போன்றன எழுத்துத்திறன் சார்ந்தவையாகும். எழுதுதல் எனும் திறன் எழுத்துக்களை எழுதுவதற்குரிய முன்செயல்கள், எழுதும்முறை, எழுதும்நிலை ஆகியனவற்றோடு தொடர்புபடுகின்றது. செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல் ஆகிய திறன்களைப் பெறுவதற்கு பாடசாலைகள் தவிர்ந்த பிறச்சூழல்களும் உதவுகின்றன. ஆனால் எழுதுதல் எனும் திறனை வளர்ப்பதற்குரிய தளத்தை இன்று பாடசாலைகள் எனும் அமைப்பும், அதனுடன் சார்ந்துள்ள ஆசிரியர்களுமே பொறுப்பானவர்களாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக எதை எழுதுகின்றோம் என்பது எழுதும் திறன் அல்ல. எப்படி எழுதுகின்றார்கள் என்பதே எழுதுதல் எனும் திறனோடு தொடர்பு பட்டவையாகும். மொழியின் அடிப்படைத் திறன்களான மேற்கூறப்பட்ட நான்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவைகளாகும். இந்த நான்கு அம்சங்களையும் மாணவர்கள் மத்தியில் சிறப்பான முறையில் வளர்த்தெடுப்பதற்கு ஆசிரியர்கள் நன்கு உதவுதல்வேண்டும். குறிப்பாக ஆரம்பக்கல்வியில் இத்திறன்கள் சிறப்பாக வளர்க்கப்படாதபோது பின்னரான காலத்தில் அதன் தாக்கம் அந்தப் பிள்ளையில் காணப்படுவதையும் நாம் காண்கிறோம்.

கடந்தகாலங்களில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் எவ்வித சித்தியும் அடையாத மாணவர்கள் கனிசமான தொகையினர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மொழிப்பாடத்தில் இத்தகைய குறைபாடுகள் நிறையவே காணப்படுகின்றன. அதற்குரிய பெரும் பங்கு ஆசிரியர்களின் பக்கமும் காணப்படுகின்றது என்கிற குற்றச்சாட்டுக்களும் கூறப்படுகின்றன. உண்மையில் தரம் ஒன்றில் சேருகின்ற ஒரு குழந்தை 2500க்கும் மேற்பட்ட சொற்களுடன் வருகின்றது. அந்தச் சொற்களை விரிவாக்கி அதனை எழுதவும், வாசிக்கவும் மேற்கொண்டால் ஒரு ஆண்டில் எத்தனையோ ஆயிரம் சொற்களை அந்தப் பிள்ளை உருவாக்கும் நிலையை தோற்றுவிக்கும். இதனை உரியவாறு பாடசாலைகள் அங்குள்ள ஆசிரியர்களில் பலர் சரியான முறையில் வழங்குவதில்லை.

அண்மையில் ஒரு பாடசாலைக்குச் சென்றபோது நேரம் 7.30மணி. அப்போது அந்தப் பாடசாலையில் ஒரு ஆசிரியர் மாத்திரம் வருகை தந்திருந்தார். மாணவர்கள் வந்திருந்தபோதிலும் உரிய நேரத்திற்கு அதிபரோ, ஏனைய ஆசிரியர்களோ வருகை தராத நிலை காணப்பட்டது. இவ்வாறு பல பாடசாலைகள் உரிய நேரத்திற்கு ஆரம்பிக்கப்படாமல் மாணவர்களின் நேரத்தைக் களவடிக்கின்ற நிலைமை தொடருமாக இருந்தால் அந்தப் பிள்ளையின் மொழித்திறன்களோ, ஏனைய திறன்களோ உரியமுறையில் கட்டியெழுப்படுமா? என்பது கேள்விக்குறியாகும். பின்தங்கிய பிரதேசத்துப் பாடசாலைகளில் இந்த நிலைமை தொடர் செயற்பாடாகவே காணப்படுகின்றது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அங்குள்ள அதிபர், ஆசிரியர்களை நம்பியே அனுப்புகின்றனர். இறுதியாக பதினொரு ஆண்டுகளின் பின்னர் மொழிப்பாடத்தில்கூட எவ்வித புள்;ளிகளும் பெறாது வீனே காலம் தள்ளுகின்ற மாணவர்கள் இத்தகையப் பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று உலகில் எழுத வாசிக்கத் தெரிந்தோர் பட்டியலில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக நாம் இருக்கிறோம் என்று மார்தட்டுகின்றோம். உண்மைதான் வீதத்தின்படி உயர்வாகக் காணப்பட்டாலும் மீதமானவர்களையும் நாம் இணைக்கவேண்டுமே. அதுமட்டுமல்ல அடைவு மட்டங்களின்போது தாழ்ந்த மட்டங்களில் காணப்படும் மாணவர்களையும் நாம் கணக்கில் எடுத்தால் அதன் மட்டம் இன்னும் கீழே இறங்கிவிடும். தரம் ஒன்று, இரண்டு வகுப்புக்களில் ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதைப் பார்த்து அந்தப் பிள்ளை எழுதுவது எழுத்தல்ல. தன்னுடைய உணர்வுகளையும், தனது ஆதங்கத்தையும், தான் சொல்ல நினைப்பதையும் எழுத்தில் வடிப்பதே எழுத்தாகும். அந்த எழுத்துக்கள் நம்மில் எத்தனைபேரிடம் உண்டு. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கட்டுரைப் பயிற்சி ஆறு வாக்கியங்கள் தரப்பட்டன. ஆனால் அண்மைக் காலமாக அது மூன்று வாக்கியங்களாக குறைந்து விட்டது. இதனைப் பார்க்கின்றபோது மொழியில் சரியான பரீட்சயமிக்கதான முறையில் சரியான ஒழுங்கு முறையில் எழுத்தாக்கத்திற்கு அந்த மாணவர்கள் தயாரில்லை. அதில் அதிகமான மாணவர்கள் தவறவிடுகின்றனர். புள்ளிகள் குறைவாகப் பெறுவதற்கு இதுவொரு காரணமாக இருந்திருக்கலாம். ஆதலால்தான் என்னவோ இன்று மூன்று வாக்கியங்கள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மொழியில் பாண்டித்தியம் அடைந்துள்ளோம் என்று கூறுகின்ற பலர் எம்மத்தியில் காணப்படுகின்றனர். அவர்களிடம் ஒரு கடிதம் எழுதுமாறு கூறினாலே அவரது கைகள் ஆட்டம் காண்கின்றன. படித்தவர், ஆசிரியர் என்று நினைத்து சாதாரண ஒரு பொதுமகன் தனது விடயங்களைக் கூறி கடிதம் ஒன்றை எழுதுமாறு கோருகின்றபோது பின்னர் வாருங்கள், எனக்கு வேலை அதிகம் என்று சாக்குப்போக்குச் சொல்லி கடிதம் எழுதாமலே சமாளித்து விடுகின்ற பலரை நாம் பார்க்கிறோம். இதுதானா மொழித் தேர்ச்சி. தேர்ச்சிமையக் கலைத்திட்டம்; அமுலிலுள்ள இன்றைய யுகத்தில் பாடசாலைகளில் கற்கின்ற உயர்தர மாணவர்கள்கூட கணனிக் கடைகளில் விற்கின்ற மாதிரிகளை பணம் கொடுத்து வாங்கி ஒப்படைகளாக ஒப்படைக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இவற்றை தவிர்க்கும் முகமாக எழுத்துத் திறன் உயர்வடைவதற்கான ஏற்பாடுகளை சிறுவர் முதல் பெரியவர்வரை அனைவரும் வாசிப்பு மீதான அக்கரையைச் செலுத்த வேண்டும். வாசிப்பு இன்மையானது மொழியின் விரிசலை சுருகிக்கிவிடுகின்றது. இன்று இணையம் என்று ஓடோடி செல்கின்றோம். காண்கின்றோம்;. கைகளுக்கு எழுத்து வேலை இல்லை. பொறிமுறை எழுத்தினைப் சிறுபராயத்தில் பழக்குவதே இல்லை. அப்படியானால் எப்படி ஐயா எழுத்துவரும்.

எனவே, உலகம் முழுவதும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக (றுழசடன டுவைநசயஉல னுயல) கொண்டாடப்பட்டு வருகிற இன்றைய காலகட்டத்தில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவற்றவர்கள் இல்லாத உலகை ஏற்படுத்துவதுமே உலக எழுத்தறிவு தினத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளன. இதனை ஏற்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளை பாடசாலைகள் மட்டத்தில், வாசிப்பக மற்றும் நுhல்நிலையங்கள் ஊடாக ஊக்குவிக்கப் படுத்தப்படுதல் வேண்டும்.

இந்த விடயங்களையெல்லாம் கருத்திற்கொண்டு கடந்த 1965 ஆ ம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி தெஹ்ரான் நகரில் சர்வதேச கல்வி அமைச்சர்களின் மாநாட்டின்போது உலக அளவில் எழுத்தறிவு இன்மையால் ஏற்படக் கூடிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விதமாகக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானங்களில் ஒன்றாகும்.

இதன் அடிப்படையில் 1965 நவம்பர் 17ஆம் தேதி யுனெஸ்கோ நிறுவனம், செப்டம்பர் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. இந்தத் தினம் 1966 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுக்கிறது. தனி மனிதர்களுக்கும் பல்வேறு வகுப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதமையானது என்பதை எடுத்துரைப்பதே இத்தினத்தின் குறிக்கோளாகும்.

எந்த மொழியிலும் எளிய வார்த்தைகளை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவு இன்மை என ஐ.நா (ஐக்கிய நாடுகள்) சாசனம் எழுத்தறிவு இன்மையை வரையறுக்கிறது. பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். உலகில் சுமார் 80 கோடி வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள். அத்துடன், 11 கோடி சிறார்கள் பள்ளிக் கூட வசதி இல்லாமல் இருக்கிறார்கள். இன்று இந்தநிலையில் மாற்றங்கள் காணக் தொடக்கியுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலுமுள்ள அரசாங்கங்கள், அதற்கான மையநிலையங்கள் எழுத்தறிவு விகிதத்தை அதிகரிக்க முதியோர் கல்வி, வயது வந்தோர் கல்விபோன்ற பல்வேறு திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தப்படுத்தி வருகிறது. ஒரு நாட்டு மக்கள் எழுத்தறிவு பெறுவது மூலம் நாட்டின் தொழில் உற்பத்தி அதிகமாகி வருமானம் அதிகரிக்கின்றது. வாழ்க்கைத் தரம் உயர்கின்றது. மேலும், மக்களிடம் மூடப் பழக்க வழக்கங்கள் ஒழிந்து விழிப்புணர்வு ஏற்படுகிறது. கல்வி என்பது பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்து முடிப்பதுடன் முடிந்துவிடுவது அல்ல. அது வாழ்நாள் முழுவதும் திகழ வேண்டும். கல்விக்கு முடிவே கிடையாது. அதற்காகத்தான் வாழ்நாள் முழுவதும் கல்வி என்கிற யுனிசெப் தாரகை மந்திரமும் எம்மை வந்தடைந்துள்ளன.

எனவே, இன்றைய எழுத்தறிவு தினத்தில் பள்ளி மாணவர்களின் எழுத்தாக்கத்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் தங்களது உச்சவளத்தைப் பயன்படுத்தி மாணவர்களிடம் உருவாக்க முனைதல் வேண்டும். வெறுமனே ஏட்டுச்சுரக்காய் கறிக்குவதாது என்பதை நினைவிற் கொண்டு உண்மையான எழுத்து அவனது உயிர் உள்ளவரை உதவுமாற்றலை வழங்குவதற்கு தன்னை புடம் போடுகின்ற பாடசாலைகளும், ஆசிரியர்களும் உருவாகி நாளைய சந்ததிகளை அறிவார்ந்த சமூகமாக மாற்றமடையச் செய்வதற்கு உதவுவதே நம் கடமையாக் கொள்ளவேண்டும். டாக்டர் எம்.எம்.உவைஸ் அவர்கள் எழுத்துப்பற்றி கூறிய ஒருவிடயமிது. ‘எழுதும்பொழுதும், உரையாடும் பொழுதும் ஒப்புநோக்கும் பொழுதும் எழுத்துதுறையில் சொற்களை உச்சரிப்பதில் மாத்திரமன்றி இலக்கணத்திலும் சொல்லாட்சியிலும் மக்கள் பழைமையையே பெரிதும் விரும்புகின்றனர்;.” என்று கூறுகின்றார். எதுஎப்படியோ மொழியின் செழிமை உயர்வடைய எழுத்தும் அதன் பங்கை வெளிக் கொணரவேண்டும் என்பதே இன்றைய நாளில் நாம் எடுக்கின்ற சபதமாகக் கொள்ளவேண்டும்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv