செவ்வாயில் கியூரியாஸிட்டி தரையிறங்கி ஓராண்டு

செவ்வாய்க் கிரகத்தில் கியூரியாஸிட்டி ஆளில்லா ஆராய்ச்சி வண்டி தரையிறங்கி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. செவ்வாயில் விஞ்ஞானிகள் முன்கூட்டியே கணித்துவைத்த இடத்துக்கு வெறும் ஒரு மைல் தள்ளி இந்த ஆராய்ச்சி வாகனம் தரையிறங்கியது. பூமியிலிருந்து 57 கோடி கிலோ கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் இந்த அளவுக்கு துல்லியமாக தரையிறக்க முடிந்தென்பதே ஒரு பெரிய சாதனைதான்.

155 கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு பள்ளத்தில் கியூரியாசிட்டி இறங்கியது. இந்த பள்ளத்தை ஒட்டி ஐந்து கிலோமீட்டர் உயரமுடைய ஒரு மலையும் உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் படுகை போன்ற நில அமைப்பு இருப்பது ஒரு காலத்தில் இங்கே கணிசமான அளவில் நீர் ஓடியதைக் குறிப்புணர்த்துகிறது.

 ஒரு காலத்தில் நுண்ணியிர்கள் வாழ்வதற்குப் பொருத்தமான சுற்றுச்சூழல் செவ்வாயில் இருந்திருக்குமா என்று கண்டறியலாம் என எதிர்பார்த்து இந்த இடத்தில் கியுரியாஸிட்டி தரையிறக்கப்பட்டது. வாகனம் தரையிறங்கிய நேரத்தில் கிளம்பிய புழுதியை வைத்தே சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. அந்தப் புழுதியில் ஒட்டிய கூழாங்கற்களாலான பாறைத் துண்டுகள் இருந்தன. அந்த கூழாங்கற்கலை பின்னர் நெருக்கமாக ஆராய்ந்தபோது அவை நீரோட்டத்தால் முனைகள் மழுங்கி வழவழப்பாக இருந்தது தெரியவந்தது.

பூமியில் ஆற்றங்கரைகளில் காணப்படுகின்ற கூழாங்கற்கள் போலவே இவையும் இருந்தன. கியூரியாஸிட்டி செவ்வாயின் மேற்பரப்பில் உலவிய இந்த ஓராண்டுகாலத்தில் மேலும் பல விஷயங்கள் நமக்குத் தெரியவந்துள்ளன. ஒரு காலத்தில் செவ்வாயின் மேற்பரப்பில் மட்டும் நீர் ஓடியிருக்கவில்லை நிலத்தடி நீர் ஓட்டமும் இருந்துள்ளது என கியூரியாசிட்டி சேகரித்த பாறைகள் காட்டுகின்றன.

 நீர் ஓடியது என்றாலே உயிர்கள் இருந்தன என்று கூறுவதாக அர்த்தம் இல்லை. உயிர்கள் இருந்தன என்பதை உறுதிசெய்ய வேண்டுமானால், அமினோ ஆசிட்கள் போன்ற உயிரணுக் கட்டமைப்புகளில் சுவடு அங்கே கண்டறியப்பட வேண்டும். ஆனால் அப்படியான எதனையும் கியூரியாஸிட்டி இதுவரை கண்டறியவில்லை. இந்த வாகனம் மெதுவாக மலையில் ஏறி மேலதிக ஆராய்ச்சிகளை செய்யும்போது பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv