ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்துக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு தினமாகும். ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும், நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் "ஆடிப்பிறப்பிற்க்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே" என்ற பாடலும் தான்.



ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும்.

அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது.

 இந் நாளில் ஈழநாட்டுத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ் கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாகும்.

 ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்குபற்றும் 'ஆடிப்பெருக்கு' பண்டிகையைக் கொண்டாடுவர்.

 ஆடி விதை தேடி விதை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
ஆடி ஆவணி ஆன புரட்டாதி
காடி தோய்த்த கனபனங் காயத்தைத்
தேடித் தேடித் தினமும் புசிப்பவர்
 ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்
என்பன போன்ற பழம் பாடல்களால்

ஆடி மாதம் ஆனந்தமாகக் கொண்டாடப்பட்டு வந்ததென்பது அறியக் கிடக்கின்றது.



0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv