ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?

பாலினுள்ளே நெய் மறைந்திருப்பதைப் போல், எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்து மறைந்திருக்கிறான். கடைந்த தயிரில் வெண்ணெய் திரண்டு வருவது போல, ஞானிகள் உள்ளத்திலும், திருக்கோயிலிலும் இறைவன் விளங்கிக் காட்சி அளிக்கிறான்.


மற்ற இடங்களில் இறைவனை நினைத்துத் தியானிப்பதாலும், துதிப்பதனாலும், வழிபடுவதினாலும், வினைகள் வெதும்புகின்றன. கோயிலில் இறைவனை வழிபட்டால், வினைகள் வெந்து, எரிந்து, கருகி, நீறாகி விடுகின்றன.


கொடிய வெயிலில் ஒரு துணியை வைத்தால், அத்துணி வெதும்புமேயன்றி, வெந்த சாம்பலாகாது. சூரியகாந்தக் கண்ணாடியை (லென்ஸ்) வெயிலில் வைத்து, அதன் கீழே குவிந்து வரும் சூடான கதிரில் துணியை வைத்தால், அது கருகிச் சாம்பலாகி விடுகிறது. நேர் வெயிலுக்கு இல்லாத ஆற்றல், சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வரும் வெயிலுக்கு உண்டு.

பரந்து விரிந்திருக்கின்ற கதிரவனுடைய கதிர்களின் வெப்பத்தை ஒன்றுபடுத்தி, தன் கீழேயுள்ள இடத்திற்குச் சூரியகாந்தி கண்ணாடி பாய்ச்சுகிறது. பிற இடங்களில் இறைவனை வழிபடுவது நமது பாவங்களை எரிக்க, சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைப்பது போலாகும். ஆகையால் மற்ற எல்லா இடங்களிலும் வழிபட்டாலும், திருக்கோயிலில் வழிபாடு செய்வது இன்றியமையாததாகும்.

“மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே”

என்பது சிவஞானபோதம்.

நமது திருக்கோயில்களில் உள்ள திரு உருவங்கள், தேவர்களாலும், முனிவர்களாலும், நால்வர்கள், ஆழ்வார்கள் போன்றவர்களால் நிறுவப்பட்டு, துதிக்கப்பட்ட காரணத்தால் மேன்மை பெற்று, வழிபடுவோருடைய வல்வினைகளை அகற்றி வரங்களை அளிக்கின்றன. இத்தகைய தனிச்சிறப்பைப் பெற ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதே மிக உயர்ந்ததாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv