மகாவீரர் பொன்மொழிகள்

ஜீவன் கர்மங்களை உருவாக்குவதில் சுதந்திரமாகச் செயல்படுகிறது. ஆனால், அந்தக் கர்மங்கள் செயல்பட வரும் போது ஜீவன் அந்தக் கர்மங்களுக்கு அடிமையாகி விடுகிறது. உதாரணமாக, ஒருவன் மரத்தில் ஏறும் போது பிறர் உதவியின்றி தானாக ஏறிவிடுகிறான். ஆனால், அவன் தவறிக் கீழே விழும் போது பிறர் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
 கஷ்டம், கஷ்டம்! அறிவிலியான நான் நற்பாதையை அறியாத வரையில் கொடிய சம்சாரக் கட்டில் நெடுங்காலம் சுற்றி அலைந்தேன். இது என் அறியாமையாகும்.

 பித்த ஜூரம் உள்ளவனுக்கு இனிப்பும் கசப்பாக இருப்பது போன்று, தீயகாட்சி உடையவனுக்கு அறம் பிடிப்பதில்லை. ஏனென்றால், தீயகாட்சி உடையவனுடைய நோக்கம் நேர்மைக்கு எதிராக இருப்பதால் அவன் அறத்தை ஏற்பதில்லை.

 தீயகாட்சி உடையவனிடம் கோபம் முதலிய குற்றங்கள் மிகுதியாக நிறைந்திருக்கின்றன.ஆதலால், அவன் ஜீவன் - உடல் ஆகிய இரண்டையும் வேறுபாடின்றி ஒன்றாகக் கருதுகிறான். அவன் பேதைமை உள்ளவனாவான். (ஜீவன் அதாவது ஆத்மா வேறு;உடல் வேறு என்று உணர்வது விவேகியின் செயலாகும்)

 விருப்பும் வெறுப்பும் கர்மத்திற்கு ஆணி வேர். கர்மம் மோகத்தால் (ஆசையால்) உண்டாகிறது. அது பிறப்புக்கும் இறப்புக்கும் மூல காரணமாகும். பிறப்பதும் இறப்பதும் துன்பத்திற்கு அடிப்படை காரணம் என்று பெரியோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.

 வலிமையுள்ள கொடிய எதிரி செய்யாததை விருப்பு - வெறுப்பாகிய குற்றம் செய்துவிடுகிறது.

 இந்த உலகில் பிறப்பு, இறப்பு, முதுமை ஆகியவற்றால் துன்பப்படும் ஜீவனுக்கு சுகமே கிடையாது. எனவே, துன்பமில்லாத முக்தியே ஏற்றது.

 பற்றின்மையை ஏற்படுத்தும் செயல்களைச் செய்ய வேண்டும். பற்றின்மை உலக துன்பத்திலிருந்து விடுதலை பெற்றுத் தருகிறது. பற்றோ எண்ணற்ற காலம் வரை துன்பக் கடலில் உழலச் செய்கிறது.

 முக்தி பெறுவதற்குரிய வழியாக இருப்பது ஐம்புலனடக்கம். ஐம்புலன்களை அடக்குவதன் மூலம், மனதால் ஏற்படும் குற்றங்களை நாம் ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

 அறம் சிறந்த மங்கலப் பொருளாகும். கொல்லாமை, ஒழுக்கம் ஆகியவை அறத்தின் இலட்சணம் ஆகும். எவருடைய மனம் எப்போதும் அறத்தில் ஈடுபாடு கொண்டிருக்கிறதோ, அந்தத் தூயவர்களைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.

 பொருள்களில் இயற்கைப் பண்பே அறமாகும். அது பொறுமை முதலியவற்றின் அடிப்படையில் பத்து வகை பிரிவுகளைக் கொண்டது. நற்காட்சி, நல்ல ஞானம், நல்லொழுக்கம், ஜீவ தயை (கருணை) ஆகியவை சேர்ந்தது அறம் எனப்படும்.

 முற்றிலும் பொறுமை, நேர்மை, உண்மை, தூய்மை, கருணை, மாசற்ற ஒழுக்கம், தூயதவம், பற்றின்மை, ஒரு சிறிதும் ஆசைப்படாமல் இருத்தல், இடைவிடாத ஆன்ம ஈடுபாடு ஆகிய இந்தப் பத்தும் ஒரு வகையில் அறம் எனப்படும்.

 தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் ஆகியவர்களால் கொடிய துன்பங்கள் ஏற்படும் போது கோபம் கொள்ளாமல் அமைதியாகப் பொறுத்துக் கொள்வதுதான் உத்தம லட்சணம் என்ற குறைவற்ற முழுமையான பொறுமையாகும்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv