தடயம் இல்லாமல் காணாமல் போன கப்பல்கள்! அனாதையான ஈழத் தமிழர்கள்! இன்று அகதிகள் தினம்!

2009 ம் ஆண்டு ஈழத்தில் போர் முடிந்த பின்பும் தமிழர்கள் பலரும் இலங்கையில் இருந்து தப்பித்த வண்ணமே இருந்தனர். சிலர் நேரடியாக இலங்கையில் இருந்து இந்தோனேசியா சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா சென்றனர். சிலர் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்து முகாமில் தங்கி இருந்தனர்.
அதன் பின் முகாமில் இருந்து வெளியேறி சிறிய படகில் அவுஸ்திரேலியா செல்ல தீர்மானம் செய்தனர். பல நூறு ஈழத் தமிழர்கள் அவ்வாறு தப்பித்துஅவுஸ்திரேலியாவிற்கு. அந்நாட்டு அரசு இவ்வாறு தப்பித்து வந்த அகதிகளை உள்ள கிறிஸ்மஸ் தீவில் குடியமர்த்தியது.


இந்நிலையில் அக்டோபர் 10ம் நாள் மங்களூரில் இருந்து சென்ற கப்பலில் 52 பேர்கள் பயணப்பட்டனர்.

அதில் சதீஸ்குமார் , ராசேந்திரன் அரலின்பராசா, ஜெயவீர சிங்கம் , ஜாஸ்மின், குமார் யசோதரன், பிரரூபன் ஆனந்ததீபன் உள்ளிட்டவர்கள் பயணம் செய்தனர்.

இதில் பயணம் செய்தவர் பற்றி இன்று வரை எந்த செய்தியும் வரவில்லை. இந்தக் கப்பல் என்ன ஆனது என்று தெரியவும் இல்லை. அதே காலக் கட்டத்தில் இன்னொரு கப்பலும் அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டது.

இதில் ஒரு கப்பல் அவுஸ்திரேலியா நெருங்கும் முன்பே கடலில் கவிழ்ந்துது. அப்போது கடலோரக் காவல் துறை சிலரை காப்பாற்றியது. பலரை காப்பாற்ற முடியாமல் போனது. காப்பாற்றப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவில் குடியமர்த்தப்பட்டனர்.

அதேபோல் 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி புறப்பட்ட கப்பல் காணாமல் போனது. இக்கப்பலில் பயணம் செய்த யசோத்கரன் என்பவர் பற்றி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. வேறு யார் யார் பயணம் செய்தனர் என்ற விவரம் கிடைக்கவில்லை.

2012 ஜூலை 19 தேதி வேளாங்கன்னியில் இருந்து புறப்பட்ட கப்பல் 54 பேர் பயணம் செய்தனர். தமிழ் நாட்டில் உள்ள பல முகாம்களில் இருந்து இந்தக் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். இவர்களுக்கு ஒரு முகவர் இருந்தார். அவர் தான் ஒருங்கிணைப்பு வேலைகளை செய்தார்.

அனைவரும் மேல்மருவத்தூர் எனும் ஊரில் கூடி பின்பு வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு சென்றனர். ஒவ்வொருவரும் தலா 2.5 லட்சம் ரூபாய் பணம் கட்டி இந்த கப்பலில் இடம் பிடித்தனர். பயணம் செய்தவர்கள் பெயர்கள் வருமாறு:

மணிகண்டன், முகுந்தன், யோகராணி சுஜித் குமார், விஜயகுமார், நாகலிங்கம், சுபாஷ், தாஸ், பிரதீபன், தனபாலசிங்கம், பத்மநாபன், செபாஸ்டியன் பிள்ராய், சிவலிங்கம் செல்வரத்தினம் தவராஜா சிங்கம், பீனக்ஸ் ஜெயராம் போன்றவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இவர்களை பற்றி எந்தத் தகவலும் இதுவரை இல்லை. கப்பலில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுக்கு சோமாலியா நாட்டில் இருந்து தவறிய அழைப்புகள் வந்துள்ளன. திரும்ப அழைத்தால் பதில் ஏதும் இல்லை.

2013 ஏப்ரல் 2 கொச்சினில் இருந்து புறப்பட்ட கப்பல். இதில் ராஜா N, ஜெயமோகன், சிவஜோதி, பிரேம்நாத், நவநீதராஜ் ஆகியோர்கள் பயணம் செய்தனர். இன்று வரை இந்தக் கப்பலை பற்றி எந்த தகவலும் இல்லை.

மே 1 கொச்சினில் இருந்து புறப்பட்ட கப்பலில் இதில் சதீஸ்குமார், சிவகுமாரன், கோபால கிருஷ்ணன் ஆகியோர் பயணம் செய்தனர்.

இவர்களை பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. எனினும் கப்பலில் பயணம் செய்த உறவினர்களுக்கு சோமாலியா நாட்டில் இருந்து பல தவறிய அழைப்புகள் வந்துள்ளது. திரும்ப அழைத்தால் யாரும் பேசவில்லை. சில புகைப்பட ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளதாக சொன்னவர், இக்கப்பல் மொரோக்கோ நாட்டிற்கு சென்றுள்ளதாக தகவல் அளித்தனர் உறவினர்கள்.

இப்படியாக ஈழ அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பல கப்பல்கள் காணாமல் போயுள்ளது. ஆனால் இவர்களை கண்டுபிடிக்கவும், இவர்களின் உறவினர்களுக்கு பதில் அளிக்கவும் எவரும் முன்வரவில்லை.

இலங்கை அரசும் ஈழத் தமிழர் நலனில் அக்கறை இல்லாத காரணத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்தியாவிற்கு இதில் எந்த அக்கறையும் இல்லை . காரணம் இந்தியாவில் இருந்து தப்பித்து சென்றவர்கள் இந்திய நாட்டின் சட்டத்தை மீறியே கப்பலில் சென்றுள்ளனர்.

இது சட்ட விரோத செயலாகவே பார்க்கப் படுகிறது. சில சமயங்களில் இந்திய கடலோரக் காவல் துறை இவர்களை பிடித்து சிறப்பு முகாமில் அடைத்தும் வைத்துள்ளது. மற்றபடி தமிழக அரசு இப்படியான ஈழத் தமிழர்களின் நல்வாழ்வு குறித்து பெரிய அளவு வருத்தப்படவும் இல்லை.

ஈழத் தமிழர் நல்வாழ்வு வாரியம் ஒன்று தமிழகத்தில் இருந்தாலும் , அவை முகாம் வாசிகள் பற்றி ஓரளவு கவலைப் படுமே அன்றி கப்பலில் சென்று காணாமல் போனவர் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பு உள்ளது.

அது ஈழத் தமிழர் நலனுக்காக கட்டி எழுப்பப் பட்டது என்று கூறினாலும், அவர்களும் இந்த விடயத்தில் மெத்தனப் போக்கையே கடைப் பிடிக்கின்றனர். இதுவரை காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மற்ற தமிழ் அமைப்புகளும் வலுவாக இல்லாத காரணத்தால் இது வரை இவர்களை பற்றி தகவல் சேகரிக்க யாருமே முன்வரவில்லை. செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கழகத்தில் முறையிட்டும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் உள்ள முகாம் தமிழர்களின் நிலை

இங்கிருந்து ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகிறது. முதன்மையான காரணம் ஈழத் தமிழர்கள் இங்கு 20 ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப்படுவதில்லை.

இதனால் இவர்களால் சுயதொழில் செய்ய இயலாது. வெளியில் சென்று வாடகை வீட்டிலோ அல்லது சொந்த வீடு வாங்கியோ தங்க முடியாது. இரண்டாம் தர குடிமகனாக தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் நடத்தபபடுகிறார்கள்.

அவர்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இங்கு இல்லாததால் அவர்கள் அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகளில் சென்று குடியேற முயற்சி செய்கிறார்கள்.அவுஸ்திரேலியா நாடு அவர்களுக்கு நல்ல வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. பின்பு சிலகாலம் கழித்து அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கிறது.

மேலும் அவர்கள் பிள்ளைகள் பொறியியல் மருத்துவம் படிக்க அரசே வழிவகை செய்கிறது. ஆனால் தமிழகத்திலோ அந்த வசதிகள் எல்லாம் இல்லாத காரணத்தால் அவர்கள் வெளிநாடுகளுக்கு தங்கள் உயிரை பணயம் வைத்து செல்கிறார்கள்.

மேலும் சில முகாம்களில் காவல் துறை அதிகாரிகள் பல துன்பங்களை ஈழத் தமிழர்களுக்கு கொடுகிறார்கள். அவர்களை அடிமைகளை போல் நடத்தவும் செய்கிறார்கள். இதுவும் ஈழத் தமிழர்களை வெளிநாடுகளுக்கு தப்பித்து செல்ல தூண்டுகிறது.

தேவை குடியுரிமை.

வெளிநாடுகளில் வாழும் அகதிகள் பெரும்பாலும் அந்த நாட்டின் குடியிரிமை பெற்று விடுகின்றனர். மேலும் அவர்களுக்கு ஐ நா வழங்கும் சிறப்பு கடவுச் சீட்டும் கொடுக்கப்படுகிறது. இந்த கடவுச் சீட்டை பயன்படுத்தி இந்த அகதிகள் தங்கள் சொந்த நாட்டை தவிர உலகில் எங்கும் பயணிக்கலாம்.

ஆனால் தமிழகத்தில் இருக்கும் அகதிகள் தங்கள் முகாம்களை விட்டு வெளியே வாழமுடியாத சூழல் இருக்கிறது. இவர்களுக்கும் இந்திய நாட்டின் குடியுரிமை கொடுக்கப்பட்டால் சுயமரியாதையுடன் ஈழத் தமிழர்கள் இங்கேயே வாழலாம்.

மேலும் ஐ நா வின் கடவுச் சீட்டும் கொடுக்கப்பட்டால் அவர்கள் விரும்பிய நாட்டிற்கும் சென்று வரலாம். இதை தமிழகம் மற்றும் இந்திய அரசு விரைந்து செய்தால் வெளிநாடுகளுக்கு ஈழத் தமிழர்கள் கடல் வழியாக தப்பித்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அவர்களும் சக தமிழர்களை போல் சுதந்திரமாக நம் சமூகத்தில் இணைந்து வாழலாம்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv