நிறைய சாராயக்கடைகளும் கொஞ்சமா டாய்லெட்டும்.. பின்னே வெட்கம் கெட்ட அரசும்.. !

சென்னையின் சன  நெருக்கடியான பகுதி அது. அங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குள் வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் பெண் விற்பனை பிரதிநிதி (sales girl) ஒருவர் ஒரு மதியவேளையில் நுழைந்திருக்கிறார். பகலெல்லாம் வெயிலில் சுற்றியதால் ஏற்பட்ட சோர்வோடு சிறுநீர் கழிக்கும் உபாதையும் ஏற்பட்டிருக்கிறது. அவசரத்திற்கு ஒதுங்க அந்த பகுதியில் பொதுகழிப்பறைகள் எதுவும் கிடையாது. இரண்டு வீட்டுக் கதவை தட்டி விசயத்தை சொல்ல.. சேல்ஸ் கேர்ள் என்பதால் கதவை மூடிவிட்டார்கள்.


 அந்த பெண்ணுக்கு அவசரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் லிஃப்ட்டுக்குள் சென்று சிறுநீர் கழித்துவிட்டார். அந்த பெண்ணின் அதிர்ஷ்டம்.. அப்போது யாரும் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கவில்லை. ஆனால் அவர் லிஃப்ட்டை விட்டு வெளியேறி வாசலை நெருங்கும்போது ஒருவர் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கிறார். உள்ளே சிறுநீர் தேங்கி நின்றதைப் பார்த்ததும், அந்தப் பெண்ணை சத்தம்போட்டு கூப்பிட்டிருக்கிறார். ஆனால் பயந்துபோன அந்த பெண் ஓடிவிட்டார். அதன்பிறகு ஆட்களை வரவைத்து அதை சுத்தம் செய்திருக்கிறார்கள்.  இதை அந்த குடியிருப்பில் வசிக்கும் நண்பர் ஒருவர் என்னை சந்தித்தபோது ஆத்திரமாக விவரித்தார்.

 அதைக்கேட்டபோது உண்மையில் எனக்கு அந்த பெண் மீது கோபம் வரவில்லை. பரிதாபம் தான் வந்தது. கூடவே கொஞ்சம் அவமானமாக உணர்ந்தேன். என் கோபமெல்லாம் அரசாங்கத்தின் மீது தான். ஒரு பெண் சிறுநீரை அடக்க முடியாமல் வேறு வழியின்றி நடப்பது நடக்கட்டும் என்று லிஃப்ட்டில் சிறுநீர் கழிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் எத்தனை துன்பமானது. அந்த கணம் அந்த பெண் எத்தனை அவமானகரமாக உணர்ந்திருப்பார். சென்னையில் சன நெருக்கடியான பகுதிகளுக்குள் சுற்றும்போதெல்லாம் யோசித்திருக்கிறேன்..

வியாபாரிகள் குறிப்பாக பெண்கள் அவசரம்னா எங்கப் போவாங்க.. ? பத்தடிக்கு ஒரு  சாராயக்கடையை திறந்து வைத்திருக்கும் அரசாங்கம், ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் கூட பொதுகழிப்பறைகளை திறந்து வைக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அது படுபாடாவதியாக இருக்கும். உள்ளே சென்றுவிட்டு வெளியே வரும்போது நீங்கள் பால்வினை நோயோடுதான் வருவீர்கள். அதற்கும் ஒருவன் மனசாட்சியில்லாம மூன்று ரூபாய் கட்டணம் வேறு வசூலிப்பான். ஆண்களுக்கு அவசரம் என்றால் பொது இடம் என்று கூட பார்க்காமல் எங்காவது ஒரு சுவரில் படம் வரைவார்கள். அதை பெரிய அவமானமாக இந்த சமூகம் கருதுவதில்லை.

ஆனால் பெண்களின் நிலை? மேலோட்டமாக பார்த்தால் அந்த பெண் செய்தது தவறுதான். ஆனால் அடக்க முடியாமல் அவசரமாக சிறுநீர் கழிக்க டாய்லெட்டை பயன்படுத்தக்கொள்ள அனுமதிக் கேட்ட பெண்ணுக்கு அனுமதி மறுத்த மத்திய தர மனநிலை எவ்வளவு மோசமானது. மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான கழிப்பறைகளை திறப்பதை விட்டுவிட்டு, முக்குக்கு முக்கு சாராயக்கடையை திறந்து வைத்து சாராய வியாபாரம் செய்து அதை சாதனையாக பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் தான் இதில் முதல் குற்றவாளி.

கழிவறை எவ்வளவு முக்கியமான பிரச்னை என்பது குறித்த தெளிவு அரசுகளுக்கு இல்லை. மும்பையில் தாராவியில் சென்று பார்த்தீர்களானால் ஒரு டாய்லெட் அறைக்கு வெளியே பத்துபேர் ஒரே நேரத்தில் வரிசையில் நிற்பார்கள். கதவாக சாக்குதான் இருக்கும். அதே மும்பையில் பணக்கொழுப்பெடுத்த அம்பானியின் பொண்டாட்டிக்கு 9 ஆயிரம் கோடியில் நவீன வீடும் டாய்லெட்டும். இன்னொரு பக்கம் கடவுளுக்கு கோவில் கட்டப்போறோம்னு ஒரு கும்பல் போர் நடத்துது.. முதல்ல மக்களுக்கு டாய்லெட் கட்டிக்கொடுங்கடா.. அப்புறம் கடவுளுக்கு கோவில் கட்டலாம்.. எப்போதாவது செல்லும் இறைவழிப்பாட்டுக் கூடங்களுக்கு இந்த நாட்டில் பஞ்சமில்லை. அத்தியாவசியமான கழிவறைகளுக்கு இடமில்லை.. சாராயவியாபாரம் செய்யும் அரசுகளுக்கு அறிவுமில்லை.. வெட்கமுமில்லை..கார்டூனிஸ்ட் பாலா

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv