கரூர் அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி உயிரிழப்பு

கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமியை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது. அவரை மீட்க நடந்த 16 மணி நேர போராட்டம் பலனளிக்கவில்லை. இந்நிலையில் சிறுமி தவறி விழ காரணமாக இருந்த ஆழ்துளை கிணற்றின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.


 நேற்று காலை தனது தந்தையுடன் வயலுக்குச் சென்ற முத்துலட்சுமி என்ற 7 வயது சிறுமி, அங்கிருந்த 700 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தார். சுமார் 12 அடி ஆழத்தில் சிக்கியிருந்த முத்துலட்சுமியை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மீட்பு நடவடிக்கைகள் தொய்வின்றி நடைபெற்றதாக மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 16 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர், இரவு சுமார் 10.45 மணிக்கு முத்துலட்சுமி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமிக்கு செயற்கை சுவாசம் அளிக்க முயற்சித்தும் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.முத்துலட்சுமி மீட்கப்பட்டும் அவர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். கரூரில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி முத்துலட்சுமிக்கு செயற்கை சுவாச முயற்சி பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.

16 மணி நேரம் நடைபெற்ற அந்த மரணப் போராட்டத்தின் நிகழ்வுகள் பின்வருமாறு:- இனங்கனூர் என்ற இடத்தில் தந்தை முத்துப்பாண்டியுடன் காலை 7 மணிக்கு வயலுக்குச் சென்ற சிறுமி,அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். 700 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் கிட்டதட்ட 12 அடி பள்ளத்தில் சிறுமி சிக்கிக்கொண்டாள். 8 மணி வரை குழந்தையின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர், சேலையை கிணற்றுக்குள் செலுத்தி குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

மேலும், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.தகவல் கிடைத்து அந்த இடத்திற்கு வந்த மீட்புப்படை வீரர்கள் 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 9 மணி முதல் மீட்புப் பணி தொடர்ந்தது. அடுத்த இரண்டு மணிநேரத்தில் அதாவது 11 மணியளவில் 6 முதல் 7 அடி வரை தோண்டப்பட்டது. பாறைகள் மிகுந்து இருந்ததால் அதன் பின் தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 11.45 மணி வரை சிறுமி நன்றாக பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

 கடைசியாக பகல் 1.45 மணிக்கு சிறுமி சோர்வுடன் பேசியுள்ளார். அதுவரை கிணற்றின் உள்ளே செலுத்தப்பட்ட சேலையையும் முத்துலட்சுமி பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். நான்கு மணி வரை தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல், மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன கருவி மூலம் சிறுமியை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை. மீண்டும் மாலை 6 மணி முதல் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

 இதையடுத்து, பக்கவாட்டில் பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் முயற்சி தொடங்கியது. இந்த முயற்சி சில மணி நேரம் நீடித்தது. இதையடுத்து, சரியாக இரவு 10. 40 மணியளவில் மயங்கிய நிலையில் முத்துலட்சுமி மீட்கப்பட்டார். ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சி பலனளிக்காத நிலையில், இரவு சுமார் 11.45 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv