பறிக்கப்பபடும் கற்புகளும் மறைக்கப்படும் உண்மைகளும்


இன்று பரவலாக பலராலும் சொல்லப்படுகின்ற விடயம் வடக்கு, கிழக்கில் சமூக சீர்கேடு இடம்பெறுகின்றது என்பதாகும். குறிப்பாக பாலியல் ரீதியான அசிங்கங்கள் அரங்கேறுவதை பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். 

இவ்வாறு சமூக சீர்கேடு இடம்பெறுகின்றது என்று சொல்பவர்கள் மறு புறத்திலே இவ்வாறான சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதற்கான காரணங்களையும், சமூக சீர்கேடுகளை தடுப்பதற்குரிய வழிவகைகளைப்பற்றியும் ஆராய வேண்டும். வடக்கு, கிழக்கிலே பரவலாக சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதென்பது உண்மைதான். இவ்வாறான சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதற்கான காரணங்கள் என்ன? இவ்வாறான சமூக சீர்கேடுகளை எவ்வாறு குறைக்கலாம் என்பதனை ஆரய இருக்கின்றது இக்கட்டுரை.


இன்று வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்களிலே பல அசிங்கங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான அசிங்கங்கள் எதனால் அரங்கேறுகின்றன என்பதனை நாம் நன்கு ஆராயவேண்டியிருக்கின்றது. கடந்த முப்பது வருத்திற்கு மேலாக நாட்டிலே இடம்பெற்ற கொடுர யுத்தத்தின் பிரதிபலிப்பாகவும் யுத்தம் விட்டுச் சென்ற எச்சங்களில் ஒன்றாகவும் இச் சீர்கேடுகள் இடம்பெறும் மறு புறத்திலே எமது தழிழினமும், தமிழர் கலாசார பரம்பரியங்களும், தன்மானமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இன்று ஊடகங்கள் வாயிலாகவும், செவிவழியாகவும் தினம், தினம் இவ்வாறான சமூக சீர்கேடுகளை அறிந்து வருகின்றோம். சரி இவ்வாறான சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதற்கான காரணங்கள் என்ன? யுத்தம் எனும் கோரப்பிடியால் சிக்குண்டு சின்னாபின்னமாக்கப்பட்ட, திட்டமிட்டு அழிக்கப்பட்ட எமது பிரதேசத்தில் விதைக்கப்பட்ட எச்சங்களே இந்த சமூக சீர்கேடுகள்.

யுத்த்தின் காரணமாக எமது தேசம், மக்கள் மாத்திரமல்ல எமது கற்புகளும் சூறையாடப்பட்டன எமது சகோதரிகளின் தன்மானமும் கற்பும் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. திரை மறைவில் எமது தமிழினம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக எமது பெண்களின் கற்புகள் விலைக்கு வாங்கப்படுகின்றன. நாட்டில் இடம்பெற்ற கொடுர யுத்தத்தில் இலட்சக்கணக்கான விதவைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் இளம் விதவைகள். இவர்களில் பலர் இரண்டு பிள்ளைகளின் தாயாகவும் குடும்ப சுமையை சுமக்கின்ற குடும்ப தலைவியாகவும் இருக்கின்றனர். இவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்தவும், ஒருநேர உணவிற்குக்கூட வழியின்றி தவிக்கும் இவர்களால் தமது பிள்ளைகளை படிப்பிக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது. இவ்வாறானவர்களின் குடும்ப சூழலும் வறுமையின் பிடியில் சிக்கி இருப்பதனால் இளம் விதவைப் பெண்கள் ஏதோ ஒரு தொழிலைத் தேடவேண்டிய தேவையும் இருக்கின்றது. ஆனாலும் வறுமையின் பிடியில் வாடும் இவர்களால் ஒரு சுய தொழிலை தேட முடியாத நிலையில் பல நாள் உணவின்றி பிள்ளைகளுடன் வாடவேண்டிய நிலையில் இருக்கின்றனர். இவர்களின் இவ்வாறான நிலையை பயன்படுத்தி தமது உடல் இச்சைகளை தீர்த்துக் கொள்கின்றனர். இவ்வாறான இளம் விதவைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குகின்றேன் என்று வேலை வாய்ப்புகளை வழங்கிவிட்டு தமது உடல் இச்சைகளை தீர்த்துக் கொள்கின்றனர் பலர். பெருந்தொகை பணங்களை இவ்வாறான பெண்களுக்கு வழங்கி அவர்களை தமது இச்சைகளை தீர்த்துக் கொள்கின்றனர் பலர். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் சகோதர இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மனிதனுக்கும் உணர்ச்சிகள் என்பது இருக்கின்றது. மிகவும் இளம் வயதில் கணவனை இழந்து விதவையாக்கப்பட்ட பெண்களை தமது வலையில் சிக்க வைத்து தமது இச்சைகளை தீர்த்து வருகின்றனர் பலர். குறிப்பாக இளம் பெண்களின் கைத்தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பினை ஏற்படுத்தி பின்னர் அவர்களை வசப்படுத்திய பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒருசில சகோதர இனத்தவர்கள் இவர்களை வைத்து பாலியல் வியாபாரம் செய்கின்ற நிலையும் அரங்கேறியிருக்கின்றது. அண்மையில் மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடத்தில் இருக்கின்ற ஒரு தொலைபேசி திருத்தும் கடையில் இவ்வாறான பாலியல் வியாபாரம் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு கடை சீல் வைக்கப்பட்டது. இக்கடை உரிமையாளரின் அரசியல் அதிகாரம், அரசியல் பின்னணியினால் மூடி மறைக்கப்பட்டது. இவ்வாறு பல விடயங்கள் அம்பலத்துக்கு வந்தபோதும் அவை மூடி மறைக்கப்பட்டன.

தமிழர் பிரதேசங்களிலே நிலை கொண்டுள்ள இராணுவத்தினரும் தமது உடல் இச்சைகளை தீர்த்துக் கொள்வதற்காக தமிழ் பெண்களை பயன்படுத்துகின்றனர். இவை தொடர்பில் யாரும் வாய் திறப்பதில்லை. இவர்களால் விதவைகள் மாத்திரமல்ல அனைத்து பெண்களும் பயன்படுத்தப்படுகின்றனர். ஒரு பெண்ணுக்கு ஏதோ ஒரு வகையில் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் இக்காரணத்தை வைத்து அப்பெண்ணை பயன்படுத்திய சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. தமது கணவன் அல்லது மகனின் உயிரைக் காப்பாற்ற தமது உடலை பயன்படுத்த இராணுவத்திற்கு கொடுத்த பெண்களும் திரைமறைவில் இல்லாமல் இல்லை. ஒருவரை கொலை செய்யப்போகின்றோம் அவரை காப்பாற்ற வேண்டும் என்றால் எங்களுடன் வா என்று அழைக்கும் இராணுவத்தினருக்கு பதில் சொல்ல முடியாமல் கற்பை அடகு வைக்கும் பெண்கள் இருக்கின்றனர்.

பல இராணுவத்தினர் ஏதோ ஒரு வகையில் திட்டமிட்டு எமது தமிழ் இளம் பெண்களை வசப்படுத்தி சீரழித்து வருகின்றனர். இவ்வாறான சமூக சீர்கேடுகளுக்கெல்லாம் காரணம் புலிகள் இல்லாமையே என்று பலரும் பெருமூச்சு விட்டுக் கொள்ளும் இதே நேரம். இவ்வாறான சமூக சீர்கேடுகளை எப்படி குறைக்கலாம் என்பதனைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விதவைகளையும் அவர்களது குடும்பத்தினைப்பற்றியும் நாம் சிந்திக்க வேண்டிய தேவையிருக்கின்றது. இவ்வாறு கஸ்ரப்படுகின்ற விதவைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துகின்றபோது குறிப்பிட்டளவு பாலியல் ரீதியான சமூக சீர்கேட்டினை குறைக்க முடியும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv