நல்ல காலத்திற்காக உன் கைகளை மதித்து உழைத்துக் கொண்டிரு

வாழ்க்கையில் நீங்கள் பெறும் வெற்றி எவ்வளவு படித்தீர்கள் என்பதில் அல்ல அதில் எவ்வளவை நினைவில் வைத்தீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது..


01. பணக்காரனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, வேலை செய்யாமல் காலம் தள்ள எண்ணினால் வாழ்க்கை வீணாகிப் போகும், சீக்கிரமே கல்லறைப் பயணமும் ஆரம்பித்துவிடும்.

02. ஒருவர் பெறும் வெற்றி அவருடைய உழைப்பினால் கிடைப்பதேயல்லாமல் அதிர்ஷ்டத்தினால் கிடைப்பதல்ல. முயற்சியுங்கள் பயப்படாதீர்கள் ஏனென்றால் நமது மூளையால் நாம் நினைப்பதைவிட பல மடங்கு அதிகமான பாரத்தைச் சுமக்க முடியும்.

 03. நண்பனே நல்ல காலம் வருமென்று காத்திருக்காதே நல்ல காலத்திற்காக உன் கைகளை மதித்து உழைத்துக் கொண்டிரு, உழைப்புத்தான் அதிர்ஷ்டம், அதுதான் நல்ல காலம் மறந்துவிடாதே.

 04. செய்கின்ற வேலைக்கு தகுதியுடையவராக இருங்கள், அதை தேவைக்கு அதிகமாக செய்யாதீர்கள், அதில் ஒரு வெற்றி உணர்வையும் அனுபவியுங்கள் இவையே மகிழ்ச்சிக்கான மூன்று விடயங்கள்.

 05. தான் எத்தனை தடவைகள் டிக்.. டிக்.. என்று அடிக்கப்போகிறேன் என்று கணக்கிட்டதால் பயமடைந்த ஒரு கடிகாரம் ஓட முடியாமல் நின்று போனது. பின் அதே கடிகாரம் ஒரு தடவைக்கு ஒருக்கால் டிக் என்ற ஓசை எழுப்பினால் போதும் என்று கருதி அந்த நேரத்தை மட்டும் நினைத்தபடி இயங்கியது. அது நினைத்ததை விட பல ஆண்டுகள் கவலையின்றி ஓடி முடித்தது. ஆம் கடிகாரம் போல டிக் கென்ற ஓசை தரும் இந்த நொடியை மட்டும் நினைத்து செயற்படுங்கள்.

 06. இந்த நிமிடத்து வேலையை மட்டும் நாம் ஒழுங்காகச் செய்தால், கவலை, சலிப்பு, களைப்பு எதுவும் இல்லாமல் மகிழ்வுடன் செய்யலாம்.

07. எதிர் காலத்தை மனத்தில் இருந்து விலக்கிவிடுங்கள், இந்த மணி நேரத்தில் உங்களுடைய வேலை எதுவோ அதை மகிழ்வுடன் செய்யுங்கள். கையில் உள்ள வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

08. தூரத்தில் மங்கலாக இருப்பதில் கவனம் செலுத்தாதீர்கள் அருகில் தெளிவாக இருப்பதை மட்டும் செய்யுங்கள். இப்படிச் செய்தால் ஐந்து வருடங்களில் உங்கள் வருமானத்தை மேலும் இரண்டு மடங்கு அதிகரிக்கலாம்.

09. இந்த நிமிடத்தில் முயற்சியும், மகிழ்ச்சியும்தான் முக்கியமாகிறது. எதைச் செய்கிறீர்களோ அதில் முழு மனதுடன் ஈடுபடுங்கள். முயற்சிகளையும், முடிவுகளையும் ஒத்திப் போடுகின்ற பழக்கத்திற்கு ஆளாகாதீர்கள்.

10. லாரி ஒன்று தீப்பிடித்துவிட்டது, அதன் சாரதி தீயணைப்பு படைக்கு போன் செய்தான் அவர்கள் வருவதற்குள் லாரி எரிந்துவிட்டது. அதன் பிறகுதான் தெரிந்தது லாரியில் 400 தீயணைக்கும் கருவிகள் இருந்தது. அதில் ஒரு கருவி இருப்பதை அறிந்திருந்தாலே லாரியைக் காப்பாற்றி இருக்கலாம்..! இதுபோலத்தான் தனக்குள் இருப்பது தெரியாது பயணிக்கும் மனிதன் வாழ்க்கை விபத்தில் சிக்கும்போது மீள வழி தெரியாமல் கலங்கி நிற்கிறான்.

11. வேலையை சிறப்பாக செய்வதற்கு புதிய வழிகளை கண்டு பிடித்துக் கொண்டே இருங்கள். மேலும் சிறப்பாக செய்ய முயற்சித்துக் கொண்டே இருங்கள். எதுவானாலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் உறுதியும்தான் உங்களுக்குக் கை கொடுக்கும்.

12. திருப்தி கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் அதை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நாம் மற்றவர்களுக்கு திருப்தி வரும்படி உழைத்தால்தான் பதிலுக்கு மற்றவர்களும் நமக்குத் திருப்தி வரும்படி உழைப்பார்கள்.

13. உங்கள் வண்டியில் பலமான குதிரையைப் பூட்டுங்கள். உங்களுடைய நோக்கங்களை நட்சத்திரங்களுடன் இணையுங்கள். இலக்கை நோக்கிப் புறப்படுங்கள். உங்கள் இலட்சியங்களை கீழ் நிலையில் வைத்திருந்தால் வாழ்க்கையில் ஏமாற்றம்தவிர வேறெதுவும் கிடைக்காது.

 14. உங்களிடமிருந்து அதிகமாக எதிர்பாருங்கள், அப்படி எதிர்பார்த்தால் நிச்சயம் ஏமாற மாட்டீர்கள்.

15. தவிர்க்க முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள். நிர்ப்பந்தத்தால் ஒரு வேலையை செய்கிறோம் அதில் மாற்றம் சாத்தியம் இல்லை என்கிறபோது அதற்காக கவலைப்படுவதில் அர்த்தமில்லை.

16. வேலைத் திறமை நிபுணராக உங்களை நீங்களே ஆக்கிக் கொள்ளுங்கள், நீங்கள் செய்கின்ற வேலை உங்களுக்கு சுவாரஸ்யமாக இல்லாவிட்டாலும் சுவாரஸ்யமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

 17. செய்கின்ற வேலை எதுவாக இருந்தாலும் உற்சாகத்துடன் பாடிக்கொண்டே செய்பவன் குறைந்த நேரத்தில் அதை செய்கிறான். செய்யும் வேலையை சிறப்பாகவும் செய்கிறான், நீண்ட நேரம் உழைக்கவும் அவனால் முடிகிறது.

 18. உங்கள் வேலையை முன்கூட்டியே திட்டமிட்டு சிறப்பாக சிந்தியுங்கள். எப்படி செய்ய வேண்டுமோ அதைவிட சிறப்பாக செய்யுங்கள். அப்படிச் செய்தால் அடுத்த முறை அதைச் செய்யும்போது குழந்தை விளையாட்டு போல ஆகிவிடும்.

19. ஒவ்வொரு முறையும் முன்பு செய்ததைவிட சிறப்பாக செய்யுங்கள். மற்றவர்கள் செய்வதைவிட சிறப்பாக செய்யுங்கள். இது ஏதோ பழைய வாசகம் போல தெரியலாம், ஆனால் உலகம் இப்படித்தான் உருவாகி இருக்கிறது.

20. எந்தக் கடினமான வேலையாக இருந்தாலும் நீங்கள் விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். மற்றவர்கள் செய்யாத, செய்ய விரும்பாத, செய்ய முடியாத வேலையை நீங்கள் ஏற்றுச் செய்யுங்கள்.

 21. வெளிப்படையாகப் பேசுங்கள், துணிவுடன் இருங்கள், தொடர்ந்து கடுமையாக உழையுங்கள், உங்கள் இலட்சியத்தை மனதில் சித்திரம் போல உருவாக்கி முன் கூட்டியே திட்டமிடுங்கள், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

 22. புத்தகங்கள் தொலைதூர பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் நண்பர்கள். புத்தகங்களின் தோழமை உள்ளவன் புதிய புதிய பொக்கிஷங்களை கண்டு பிடிக்கிறான்.

23. புத்தகத்தை திறக்கும்போது நல்ல விஷயங்களும், விவேகமான விஷயங்களும் அதனுடைய பக்கங்களில் இருந்து ஊற்றெடுக்கின்றன. உடலுக்கு போஷாக்கு கிடைப்பதைப் போல சிந்தனைக்கு போஷாக்கு தருவதே புத்தகங்கள்.

24. ஒரு சிந்தனை இன்னொரு சிந்தனைக்கு உணவாக மாறும், ஆகவே நல்ல முறையில் சிந்திக்கப் பழகுங்கள். மற்றவரை அழிக்க சிந்தித்தால் அது கடைசியில் உங்களை அழிப்பதற்கான சிந்தனைக்கு உணவாகி மற்றவரைவிட விரைவாக நீங்களே அழிய நேரலாம்.

25. புத்தகத்தைப் படிக்கின்றபோது அதில் உள்ள செல்வத்தைப் பெற்று உங்களிடமுள்ள செல்வத்தை உயர்த்திக் கொள்கிறீர்கள். புத்தகங்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டுமேயல்லாது ஆணையிடக் கூடாது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv