அப்பாவிகளின் குடும்பங்களை சீரழிக்கும் சொல்வதெல்லாம் உண்மை !

எதேச்சையா ஒருநாள் ரிமோட் கைதவறி கீழ விழுந்ததுல ` Z தமிழ்’ சேனலுக்கு மாறிடுச்சு. அதில் `சொல்வதெல்லாம் உண்மை’னு ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. நிர்மலா பெரியசாமி கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார். ஏற்கனவே விஜய் டிவியில் லட்சுமி அரைத்த `கதையல்ல நிஜம்’ என்ற மாவு தான் இதுவும். இப்போது நமக்கு பிரச்னை அந்த மாவு அல்ல.. அதில் வந்து சிக்கும் அப்பாவி மக்கள். அதிகமாக கள்ளத்தொடர்பு பஞ்சாயத்துகளே அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது.


 பெருவாரியாக வர்க்கரீதியாகவும் கல்வியிலும் சமூக அந்தஸ்த்திலும் கீழ் நிலையில் இருக்கும் அப்பாவி மக்களே சேனல்காரர்களின் டார்கெட். அப்படி அழைத்து வரப்படும் நபர்களுக்கு தங்களின் குடும்பத்தின் அந்தரங்க கதைகளை இப்படி பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது சரியா.. நாம் வீடியோ வடிவில் கொடுக்கும் வாக்குமூலங்கள் பல தலைமுறைகளாக நமது சந்ததிகளை அவமானத்திற்குள்ளாக்குமே என்பது குறித்த எந்த தெளிவுமற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

 மிகச்சாதாரணமாக இரு வீட்டாரும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பிரச்னையை ஒரு சேனலில் பதிவு செய்து ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் அதை இணையத்திலும் ஏற்றுகிறார்கள். இன்று விவரம் தெரியாமல் டிவியில் வாக்குமூலம் கொடுத்தவர்களின் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் இதை காண நேர்ந்தால் எவ்வளவு அவமானத்திற்குள்ளாகும். பேசினால் தீர்த்துவிடக்கூடிய பிரச்னையை டிவியில் ஒளிபரப்பி பின் எப்போதும் அந்த குடும்பம் ஒன்று சேரவே முடியாதபடி செய்துவிடுகிறார்கள்.

 அதோடு நிகழ்ச்சியில் திடீர் என்று அடிதடியெல்லாம் நடக்கிறது. விசாரித்ததில் திட்டமிட்டே அப்படியான சூழலை டிவி நிர்வாகமே உருவாக்குவதாக கேள்விப்பட்டேன். அதாவது ஸ்டூடியோவுக்குள் ஒரு தரப்பு கதை சொல்லிக்கொண்டிருக்கும். மறு தரப்புக்கு பக்கத்து அறையில் பெரிய டிவியில் அங்கு நடப்பதை ஒளிபரப்பி அவர்களுக்கு வெறியேற்றுவார்களாம். அப்புறமென்ன உள்ளரங்கில் கதை சொல்பவர்கள் மீது கோபத்தில் பாய அதை சேனல் ஆட்கள் சூட் பண்ணி குஷியாகிவிடுவார்களாம்..

 ஏன் `அவன் பொண்டாட்டிய இவன் கரெக்ட் பண்றது.. இவ புருசனை அவ கரெக்ட் பண்றது’ போன்ற சம்பவங்கள் எல்லாம் பிரபலமான நடிகர்கள் நடிகைகள் தொழிலதிபர்கள் வீட்டில் நடப்பதில்லையா என்ன.. திறமையிருந்தால் அப்படிப்பட்ட பிரபலங்கள் அல்லது பணக்காரர்களின் ஒரு குடும்பத்தை கூட்டி வந்து இப்படி சந்தி சிரிக்க வைக்க முடியுமா.. முடியாதென்றால் விபரமில்லாத அப்பாவிகளின் குடும்பத்தை இப்படி டிஆர்பி ரேட்டிங்கிற்காக சீரழிப்பது அசிங்கமாக இல்லையா..


 முதல் வேலையாக இந்தமாதிரியான நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும்..

நன்றி -Cartoonist Bala  முகநூலில் இருந்து 

3 கருத்துரைகள்:

lovelysivaraj said...

மிகச் சரியான கருத்து

sureshv said...

மிகச் சரியான கருத்து(100% true)

sureshv said...

மிகச் சரியான கருத்து

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv