கனிந்த அன்பும் இணைந்த நேரமும் கலந்த பழமொழிகள்… 1.எல்லோரையும் மனம் கனிந்து வாழ்த்த வேண்டும். மனம் இசைந்து நன்றி சொல்ல வேண்டும். அன்பு இல்லையெனில் வாழ்த்தும் நன்றி உணர்வும் தோன்றமாட்டாது.

02. இணக்கமான உறவுகளே நமது செல்வம். அன்புள்ளவர்களுக்கு தடையில்லை தீங்கில்லை, ஆற்றொழுக்கு போல வாழ்க்கை வளரும்.


03. அன்புக்கான மந்திர மொழிகள் :

அ. இணக்கமான மகிழ்ச்சியான உறவுகளை என் வாழ்வில் ஈர்க்கிறேன். என்னைச் சார்ந்த எல்லோருக்கும் மகிழ்ச்சியும் நல்லெண்ணமும் மலரும் மையமாக நான் இருக்கிறேன்.

 ஆ. ஒவ்வொரு நாளும் நான் அன்புருவாகவும், மகிழ்வுருவாகவும், மன இணக்கம் கொண்டவனாகவும் மாறி வருகிறேன்.

இ. உள்ளும் புறமும் அமைதி கொண்டவனாக இருக்கிறேன். நான் நெருங்கியவுடனே இறை அருளால் தடைகள் மறைகின்றன, இடையூறுகள் விலகுகின்றன.

ஈ. எனக்கு வரும் நன்மைகளை தடுக்க எதனாலும் இயலாது. எனக்கு தீங்கிழைக்க எதனாலும் இயலாதென்பதால் நான் பயப்பட எதுவும் இல்லை.

 உ. இறையருள் எனது இடையறாக் காப்பு. இறைவன் எப்போதும் என்னை விட்டகலாத துணை. எங்கெல்லாம் நான் இருக்கிறேனோ அங்கெல்லாம் இறையும், இறையருளும் இருப்பதால் என்னைச் சார்ந்த எல்லாமே நலமாக இருக்கிறது.

04. இத்தாலியில் 1200 ம் ஆண்டில் வாழ்ந்த பிரான்சிஸ் என்பவர் வீதி வீதியாகச் சென்று மக்களுக்காக செய்த பிரச்சார வரிகள் இவை

: ஓ தெய்வ நாயக..! ஆறுதல் பெறுவதற்குப் பதில் என்னை ஆறுதல் அளிப்பவனாக ஆக்குக…
 புரிந்து கொள்ளப்படுவதற்குப் பதில் புரிந்து கொள்பவனாக என்னை ஆக்குக.. நேசிக்கப்படுவதைக் காட்டிலும் நேசிப்போனாக்குக..
 எப்போதும் கொடுக்கும்போதுதான் நாம் பெறுகிறோம்..
மன்னிப்பதில்தான் மன்னிக்கப்படுகிறோம்..
 தீய எண்ணங்களின் இறப்பில்தான் புதிய வாழ்வை பெறுகிறோம்.
தெய்வீக அமைதியை ஏற்படுத்தும் உமது கருவியாக என்னை ஆக்குக.. எங்கெல்லாம் பகைமை உள்ளதோ அங்கெல்லாம் அன்பை விதைப்போனாகுக எங்கெல்லாம் தீங்கு இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் மன்னிப்பை அளிப்பேனாகுக.
. எங்கெல்லாம் மனோதிடம் இல்லையோ அங்கெல்லாம் மனத் தெளிவை ஏற்படுத்துவேனாகுக..

05. ஒவ்வொரு மனிதனும் மற்றவர்கள் தனக்கு உதவ வேண்டும் என்று எதிர் பார்க்கிறான். அந்த எதிர்பார்ப்பு பொய்க்கும்போது மற்றவர்கள் அவனது கண்களுக்கு தீயவர்கள் ஆகிவிடுகிறார்கள். மாறாக நம்மைப் போலவே மற்றவருக்கும் தேவை இருக்கும் என்று உணர்ந்தால் தம்மிடமிருக்கும் அனைத்தையும் கொடுத்து மகிழும் எண்ணம் வரும்.

 06. அன்பைக் கொடுத்தவர்கள் தோற்றதில்லை, ஆறுதலைக் கொடுத்தவர்கள் இழந்ததில்லை, மன்னிப்பைக் கொடுத்தவர்கள் துன்புற்றதில்லை, புரிந்து கொண்டவர்கள் சண்டையிட்டதில்லை, நேசித்தவர்கள் நஷ்டப்பட்டதில்லை.

 07. இதைத் தொடர்ந்து சொன்னால் ஆறுதல், நேசம், புரிதல், மன்னிப்பு, அமைதி, அன்பு, மனத்தெளிவு, நம்பிக்கை ஆகிய வளமைகள் நம்மிடம் சேரும்.

08. நல்ல மன உணர்வுகள் என்ற வளமைகள் மலர்ந்தால் நாம் வாழும் இடம் மலர்த்தோட்டமாக மாறும்.

09. வாழ்வை அன்பு மலர்த்தோட்டமாக மாற்றுவதே நம் கடமை. சந்தர்ப்பங்களால் நாம் உருவாக்கப்படுவதில்லை.. நம்மால் சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படுகின்றன.

10. இந்த நாள் இறைவனால் படைக்கப்பட்ட நாள்.. ஆகவே இந்த நாளில் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருங்கள் என்று தாவீது மன்னன் பாடினான்.

 11. ஜான் ரஸ்கின் தனது மேசை மீது ஒரு பேப்பர் வெயிட் வைத்திருந்தார். அதில் ஒரேயொரு வாசகம் மட்டுமே எழுதப்பட்டிருந்தது அது.. இன்று மட்டும்.

12. நாம் யாருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அவரிடம் முழுமையான கவனம் செலுத்த வேண்டும், இதுவே வெற்றியை அளிக்கிறது.

13. இன்றைக்கு வாழுங்கள். இன்றைக்கு எதுவும் செய்யாமல் வரப்போகிற நாளுக்காக எனது சக்தியை சேமித்து வைத்திருக்கிறேன் என்று கூறுவது எதையும் செய்யாதிருப்பதன் அடையாளமாகும். ஏனென்றால் இன்றைய நாளைக் கோட்டைவிட்டால் நீங்கள் எதிர் பார்க்கும் நாள் வரப்போவதில்லை என்பதை உணருங்கள்.

 14. தயங்க வேண்டாம் நல்லதைச் செய்ய ஒரு தருணம்தான் உண்டு. அந்தத் தருணம் இப்போதுதான் இதோ இந்த நிமிஷத்தில்தான்.

15. நீங்கள் தொடங்க வேண்டிய காரியத்தை உடனே தொடங்கினால் இப்போது உங்களுக்கு தெரியாத காரியம் அடுத்த ஆண்டு தெரிய வரும். வேலையைத் தொடங்காமல் இருந்தால் அடுத்த ஆண்டும் தெரியாமல் இன்னொரு ஆண்டு பின்தள்ளிப் போய்விடும்.

16. இறைவனால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்தைவிட உங்கள் இதயம் பெரியது, உங்களை பயமுறுத்துகின்ற பெரிய மலைகள் உங்களைப் பொறுத்தவரை சிறிய அணுக்களே. தெய்வ சங்கல்பம் மிக ஆழமானது இந்தத் தருணம்தான் அதன் நுழை வாயில்.

 17. ஒரு மணித்துளியில் ஐந்து அல்லது பத்து நிமிடங்களைக்கூட தேவையில்லாத பகுதியாக விட்டு வைக்காதீர்கள். ஒவ்வொரு பகுதி நேரத்திலும் குறிப்பிட்ட வேலையை திட்டமிட்டு ஒழுங்குடன் செய்யுங்கள்.

18. கையில் உள்ள வேலையில் முழுக் கவனம் செலுத்துங்கள், இழந்த நேரத்தை பெறுவது சாத்தியமில்லை. கையில் இருந்து நழுவிய ஒரு விநாடியும் நழுவியதுதான் அதைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை.

19. நாம் கவனத்துடன் இருக்காவிட்டால் நம்முடைய வாய்ப்புக்களை இழந்துவிடுவோம். அவசரப்படாவிட்டால் பின்தங்கிவிடுவோம். சிறந்த நேரம் நம்மிடம் இருந்து தப்பிவிடும். பின்னர் மோசமான நேரத்தைத்தான் சந்திக்க வேண்டும்.

20. காலையில் முடிக்க வேண்டிய காரியத்தை மாலைக்குப் பின் போடாதீர்கள். சோம்பேறியாக இருந்தால் உங்களுக்கு நீங்களே பாரமாக மாறுவீர்கள்.

21. தத்துக்கிளி எல்லாவற்றையும் தொட்டுப்பார்க்கும் எதிலும் முழுமையாக ஈடுபடாது. எல்லாவற்றுக்கும் பயந்து ஒன்றில் இருந்து ஒன்றுக்குத் தாவி எதையுமே செய்யாதிருக்கும் தத்துக்கிளி போல வாழக்கூடாது. ஏனென்றால் கஷ்டங்களை கண்டு ஒதுங்குவதால் உங்களால் எதையுமே சாதிக்க இயலாது.

 22. இன்றைக்கு மட்டும் வாழுங்கள். வாழ்க்கை பூராவும் உள்ள பிரச்சனைகள் பற்றி இன்றைக்கே கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

23. உற்சாகமான தோற்றத்துடன் இருங்கள் பண்புடன் பழகுங்கள். புகழ்வதில் தாராளம் காட்டுங்கள். ஒவ்வொரு சிறிய விடயத்திலும் குற்றம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருக்காதீர்கள்.

 24. நீங்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்திலும் கண்ணியம், எளிமை, அக்கறை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

 25. எதிர்காலத்தை நினைவில் இருந்து அகற்றுங்கள், ஒவ்வொரு மணியிலும் சிறப்பாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். கையில் உள்ள வேலையில் முழுமையான கவனம் செலுத்துங்கள்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv