நீருக்காக ஓர் உலகப்போர்!

தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் உலகில் உயிரினங்களின் அழிவுக்கும் உருவாக்கத்துக்கும் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இக் கொள்கையின் அடிப்படையிலேயே மனிதன் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். வலியது உயிர்பிழைக்கும் ஆனால் எத்தகைய ஆற்றல் மிக்க ஜீவராசியும் உயிரின் ஆதாரமான நீர் இன்றி உயிர் வாழ்வதென்பது சாத்தியமாகாது என்பது நிதர்சனமானது. அவ்வாறானதொரு நிலையிலேயே இன்று நாம் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் வாழப்போகின்றோம்.


 ஆனால் இன்று நீரின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை உலக மக்களிடையே பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இன்று உலகில் தங்கம், வைரம், வைடூரியம் என மதிப்புமிக்க பல பொருட்களாகக் கருதி அவற்றையெல்லாம் சேமிக்கின்றோம். இருப்பினும் இந்த சேமிப்புக்கள் ஒரு போதும் எமது அடுத்த சந்ததியினைக் காப்பாற்றப்போவதில்லை. 2100இல் உலக தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அப்படி இருக்கும் இப்படி இருக்கும் எனக் கனவு காணும் நாம் 2100 க்கு பின்னர் நீர் இருக்குமா என்று ஒருபோதும் சிந்திப்பதில்லை. பதிலாக நீரை சிந்தவிட்டுக்கொண்டிருக்கின்றோம். 2100ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிக விலைமிக்க பொருளாக நீர் அமைந்துவிட்டாலும் ஆச்சரியமில்லை.

 அந்தளவுக்கு குடி நீரின் அளவு வெகுவாகக் குறைந்து வருவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் ஒரு சில விடயங்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து விடயங்களுக்கும் மாற்றீட்டினை மனிதனால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது மறுக்கவோ மறைக்வோ முடியாத உண்மை. ஆனால் இயற்கையின் சித்தம் எதுவாக இருந்தபோதிலும் மனிதன் அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கண்டுபிடிப்புக்களின் உச்சத்தில் மனிதன் இருக்கிறான் என நாம் தற்பெருமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

உண்மையில் இயற்கையின் கண்டுபிடிப்புக்களுடன் எமது கண்டுபிடிப்புக்கள் ஒன்றும் ஒருபோதும் உயர்ந்து விட வில்லை என்ற உண்மையை மானிடக் கண்டுபிடிப்புக்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்டுபிடிப்புக்கள் அவசியமில்லை என ஒரு போதும் கூறிவிட முடியாது. இயற்கைக்கு சவால் விடும் கண்டுபிடிப்புக்களே அவசியமில்லை. ஆனால் மனித வர்க்கத்தின் கண்டுபிடிப்புக்கள் ஒவ்வொன்றும் இயற்கைக்கு சவால் விட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. ஏனெனில் இது வரையில் இல்லாத அளவுக்கு தற்போது இயற்கை மனித குலத்துக்கு மாறு செய்கின்றது. காரணம் நாம் இயற்கைக்கு எதிராக விதைத்தது தினைகளை அல்ல வினைகளைத்தான் என்பது எண்ணிப் பார்க்கும் போதே புரிகிறது. நாம் செய்த வினைகளின் விளைவில் ஒன்றுதான் பூமியில் மனிதன் வாழ மிக முக்கிய காரணிகளில் ஒன்றான நீர் எம்மை விட்டு செல்ல முனைகிறது.

 புவி எனும் கிரகத்தைத் தவிர்த்து உயிரினங்கள் வாழ இதுவரையில் மனித குலம் வேறு எந்தக் கிரகத்தினையும் கண்டு பிடிக்கவில்லை. எனவே ஜீவராசிகள் பயன்படுத்தத்தக்க நீர் இந்தப் பூமியில் இல்லாது போனால் ஜீவராசிகளின் நிலை என்ன? தக்கன பிழைத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. காரணம் உயிரினங்களின் ஆதாரமே நீர் தான். நீரின்றி அமையாது உலகெனில் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு. என்ற வள்ளுவரின் வரிகளும் எமக்கு எடுத்தியம்புவது உயிர்களின் அடிப்படை நீர் என்பதனையே. உடலில் மட்டுமல்ல உலகிலும் மூன்றிலிரண்டு பங்கு நீர்தான் காணப்படுகிறது.

 பூமியில் மொத்தம் 71 சதவீதம் நீரின் பகுதியாகும். இதில் 97.5 சத வீதம் சமுத்திரங்களில் காணப்படுகிறது. எஞ்சிய 2.5 சத வீதமான நீரே நிலத்தடி நீராகவுள்ளது. இதிலும் பனிப்பாறைகள், பனித்தரைகளிலிருந்து மிச்சமான 0.26 வீதமான நீரையே உலகிலுள்ள சுமார் 7 பில்லியன் மக்களும் பயன்படுத்துகின்றனர். தற்போது வாழும் சனத்தொகையில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றித் தவிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2025ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகை 8 பில்லியன்கள் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்போதைய நிலைமையை சிந்தித்துப் பாருங்கள்.

இது வீடுகளுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் பொருத்தமாக இருக்கும். 2006ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கையில் 'அனைவருக்கும் போதுமான நீர் உள்ளது' எனத்தெரிவித்திருந்தது. ஆனாலும் தவறான நிர்வாகம், அரசியல் பின்னணியே தனி நபருக்கான நீரின் அளவை மட்டுபடுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையில் உண்மையாக இருக்கலாம். இந்தியா என பெயர் வரக் காரணமாக இருந்த சிந்து நதியே இன்று பாகிஸ்தானில் தானே பாய்ந்து கொண்டிருக்கிறது. இந் நதி காஷ்மீர் ஊடாகவும் செல்கின்றது.காஷ்மீரில் ஓடும் முக்கிய 6 நதிகளில் 3 நதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதி 3 நதிகளுக்காக இரு நாடுகளும் முட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. இதே போல ஆபிரிக்காவின் பல நாட்டு வயல்களுக்குச் செழிப்பும், மனிதருக்கு உயிரும் ஊட்டுவதுடன், எகிப்தின் நாகரிக வளர்ச்சிக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதுணையும் புரிந்த உலகின் அதி நீளமான நைல் நதிக்காகவும் குறித்த நாடுகளிடையே பிணக்குகள் காணப்படுகின்றன.

 சிங்கப்பூர், மலேசியா இடையே, டைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளால் துருக்கிக்கும் சிரியாவுக்குமிடையே என பல நாடுகளிடையே இன்று நீரினால் பிரச்சினைகள் பல முற்றிக்கொண்டு வருகின்றன.அரசியல் ஆசைகளுக்காகவும் தனிமனிதர்களின் ஆசைகளுக்கு நிலங்களைக் கூறு போட்ட நாம் நீரினைக் கூறு போட முனைவதால் எத்தனை உயிர்கள் மாய்க்கப்படுகின்றன. தனிமனிதர்களுக்கான ஜீவனை வழங்கும் ஜீவ நதிகள் பல இருந்தும் பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். இம்மாதிரியான செயற்பாடுகளினால் நீரின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் இன்று வளரும் நாடுகளில் 80 சதவீதமானோர் நீர் சார்ந்த நோயிகளினால் பலியாகின்றனர்.

இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் எனத் தெரிவிக்கப்படுகிறது. காரணங்களை அறிந்த பின்பும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் முன்வராவிட்டால் மனிதர்களுக்கு ஆறறிவு என மார்தட்டிக் கொள்வதில் அர்த்தம் இல்லை.எம்மை நோக்கி வந்து மட்டுமல்ல விலகிச் சென்றும் அழிக்கும் வல்லமை கொண்ட நீரினை எம்மை விட்டு விலகிச்செல்லாமல் இருக்க இனியாவது வழி சமைப்போம் இன்றே. உலகம் மனிதனுக்கானதல்ல. உலகில் ஓர் அங்கமே மனிதன் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டியதொன்று.

 உலகை நம்பி வாழும் ஒட்டுண்ணிகளில் நாமும் ஒன்று என்பதால் நாம் உலகுக்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவம் இல்லாமல் இருக்கலாமே. இனி நாம் எதிர்கால சந்ததிகளுக்காகப் பாதுக்காக்க வேண்டியது பெற்றோல், மூங்கில், இயற்கை இறப்பர் என்று எவற்றையெல்லாமோ வகைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் எதிர்கால சந்ததிக்காக விட்டுச்செல்ல மட்டுமல்ல எதிர்கால சந்ததியையே விட்டுவைக்க நாம் பாதுகாக்க வேண்டியது நீர் என்பதனை நினைவில் வைத்து இன்று முதல் எமது கண்முன்னே குழாய் வழியாகச் சிந்தும் நீரினை அடைப்பது முதல் எமது நீருக்கான சேமிப்புக்களை ஆரம்பிப்போம்.

 இனியும் வேண்டாம் ஓர் உலகப்போர். காரணம் ஏற்படப்போவது அணுகுண்டால் அல்ல அதனை விட ஆபத்தை விளைவிக்கக் கூடிய நீரினால் என்பதனால்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv