வவுனியா சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு கைதி மரணம்

இலங்கையின் றாகம வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியாகிய மரியாம்பிள்ளை டில்ருக்ஷன் நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக அவரது தந்தையார் தெரிவித்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டில்ருக்ஷன், அந்த சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் நடத்திய ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததையடுத்து, சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 3 சிறைக்காவலர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கூட்டு இராணுவ நடவடிக்கையின் பின்னர், அநுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு தாக்குதல்களுக்கு உள்ளாகிய நிலையில் மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

பின்னர் கோமா நிலையில் றாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் மரணமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவரது மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் மகனின் சடலத்தை தமது சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் பாஸையூருக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அவரது தந்தையார் தெரிவித்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலை சம்பவத்தையடுத்து, 30 தமிழ்க் கைதிகள் தாக்குதல்களுக்கு உள்ளாகி அவர்களில் சிலர் கை கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் றாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேசன் நிமலரூபன் என்ற கைதி கடந்த மாதம் 4 ஆம் திகதி றாகம வைத்தியசாலையில் மரணமடைந்திருந்தார்.

இவரது உடலை வவுனியாவுக்குக் கொண்டு செல்வதற்கு பொலிசார் மறுப்பு தெரிவித்திருந்ததையடுத்து, உச்ச நீதிமமன்றத்தின் அனுமதி பெற்று அவரது பெற்றோர் தமது வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிக்கிரியைகளை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்துள்ள நிமலரூபன் மற்றும் டில்ருக்ஷன் ஆகியோருடன் றாகம வைத்தியாசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேறு சில தமிழ்க் கைதிகள் தொடர்ந்தும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக, அண்மையில் அங்கு விஜயம் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv