11 வயதில் 4 உலக சாதனை படைத்த நெல்லை மாணவி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சங்கர் காலனியை சேர்ந்த கல்யாண குமாரசாமி,சேது ராகமாலிகா தம்பதியரின் மகள் விசாலினி (11), அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தனது 11 வயதில் 4 உலக சாதனை மற்றும் பல்வேறு சான்றிதழ்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.விசாலினி அளித்த பேட்டி;
சாதாரண மனிதனுக்கு நுண்ணறிவு திறன் (ஐகியூ லெவல்) 90லிருந்து 110 இருக்கும், மன வளர்ச்சி குன்றியோருக்கு 90க்கு குறைவாக இருக்கும், பாப் பாடகி மடோனாவுக்கு 140, மைக்ரோ சாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸுக்கு 160, தென்கொரியாவின் கிம் யூங் யங்குக்கு 210 ஐகியூ லெவல் உள்ளது. எனது ஐகியூ லெவலை டாக்டர்கள் பரிசோதித்தபோது 225 இருப்பது தெரியவந்தது. இது, கின்னஸ் சாதனையில் இடம் பெற வேண்டுமானால், எனக்கு 14 வயது நிரம்பி இருக்க வேண்டும். ஆனால், எனக்கு தற்போது 11 வயதுதான் ஆகிறது. இதனால், 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது உள்ளது.அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனம் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்காக நடத்தும் சிசிஎன்ஏ, சிசிஎன்பி போன்ற தேர்வுகளை, எனது 10 வயதில் எழுதி சாதனை படைத்துள்ளேன். இந்த தேர்வு எழுதியதன் மூலம் பாகிஸ்தான் நாட்டின் 12 வயது மாணவன் நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளேன்.பிரிட்டிஷ் கவுன்சில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஐடிபிஐ ஆஸ்திரேலியா ஆகியவை இணைந்து, உலக அளவில் நடத்தும் ஐஇஎல்டிஸ் தேர்வை 11 வயதில் எழுதி சாதனை படைத்துள்ளேன். இதன் மூலம் பாகிஸ்தான் நாட்டின் 12 வயது மாணவியின் சாதனையை முறியடித்துள்ளேன். இதற்காக, பாகிஸ்தான் நாடு என்னை கவுரவப்படுத்தியது.
சர்வதேச அளவில் நடத்தப்படும் தேர்வுகளை எழுதி பல சான்றிதழ்களை பெற்றுள்ளேன்.மேலும், பல்வேறு இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சென்று பிஇ, பிடெக் மாணவர்களுக்கு, நெட்வொர்க் சம்பந்தமாக பாடம் நடத்தி வருகிறேன். பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் சர்வதேச கருத்தரங்குகளுக்கு சிறப்பு விருந்தினராக சென்று உரையாற்றி வருகிறேன். குவைத் பல்கலைக்கழகத்துக்கு செல்ல உள்ளேன், என்றார்.


படிப்பதற்கு வசதி இல்லை:
விசாலினியின் தாய் சேது ராகமாலிகா கூறுகையில், ‘எனது மகளுக்கு ஐகியூ லெவல் அதிகமாக இருந்ததால், அவளை கவனிப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. இதற்காக வானொலியில் நான் பார்த்த அறிவிப்பாளர் வேலையை ராஜினாமா செய்தேன். எனது மகள் தினமும் ஒரு சான்றிதழுடன் வரும்போது சந்தோஷமாக உள்ளது. ஆனால், அவளை படிக்க வைப்பதற்கு போதிய வசதி இல்லை. சர்வதேச அளவிலும், உலக அளவிலும் தேர்வுகளை எழுத ஓராண்டுக்கு 4.5 லட்சம் வரை செலவு ஆகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும். இதனால், அவளது திறமை இன்னும் அதிகரிக்கும். நமது நாட்டுக்கும் பெருமை சேர்ப்பாள்’ என்றனர்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv