புரியப்படாத எம் தெய்வங்கள் நம் தந்தையர்கள்! குகதாசன்

உலகம் இரண்டு முரணான விசைகளிடையே நகர்கிறது. வடமுனை - தென்முனை, முதலாளித்துவம் - சமவுடமை, இன்பம் - துன்பம், விருப்பு – வெறுப்பு, வெற்றி – தோல்வி, இரவு – பகல், ஒளி - இருள் , வெப்பம் - குளிர், சிவன் - சக்தி, ஆண் - பெண், தாய் - தந்தையர். 
வாழ்க்கை என்ற நாணயத்திற்கு என்றுமே இரண்டு பக்கங்கள் அதனிடையே நடக்கும் போராட்டமே வாழ்க்கை.

உலகில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் என்றுமே ஓயாத போராட்டம் என்கிறான் கீதையில் கன்னண்.
இதையே கண்ணதாசன் நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டிற்கும் நடுவே இறைவனின் சிரிப்பு என்றிருக்க வேண்டும்.
பாலூட்டுபவள் மாதா – அறிவூட்டுபவர் பிதா – ஞானத்தை உணர்த்துபவர் குரு – ஈற்றில் முத்தி அமைதியைத் தருவது தெய்வம்.
மாதா பிதா குரு தெய்வம் என்பவற்றுள் , கருவறையிலேயே உணர்ந்து கொள்ளப்படுபவள் தாய் - ஆனால் பொதுவாக நாற்பது வயதின் பின்னரே புரிந்து கொள்ளப்படக் கூடியவர் தந்தை .
அறுபதைத் தாண்டினாலும் பலருக்கு அறியப்படாதவன் இறைவன்
மாதாவை உணர கண் போதும், பிதாவை உணர சுய அனுபவ அறிவுக் கண் திறக்க வேண்டும், குருவை புரிய ஆன்மீக ஞானம் வேண்டும் தெய்வத்தை அறியவோ உயர் ஞானப் பக்குவம் வேண்டும்.
ஏனென்றால், தாயின் அன்பும் பரிவும் பணிவிடையும் நேரடியானவை, தெளிவானவை. கண்டிப்பாக இருக்க வேண்டிய தந்தையின் பணிகளே மறைமுகமானவை.
உள்ளத்தில் உருகியபடி உதட்டினால் அதட்டுபவர் தந்தை, அன்னையின் பேச்சிலேயே வெளிப்படும் அன்பும் பரிவும், தந்தையின் ஏச்சிலே இருக்க முடியுமா? தந்தையரை ஒருவன் தந்தையாகும் போதே உணர ஆரம்பிக்கிறான்.
ஒவ்வொரு குழந்தையும் எங்கள் அப்பா ஒரு பெரிய ஆள் - அம்மாவால் முடியாத காரியங்களையெல்லாம் அப்பா செய்துவிடுவாரென ஒரு ஏழு வயதுவரை மட்டுமே நம்புகிறது.
அதன் பின்னரே தந்தையாலும் இயலாத காரியங்களை உலகில் உள்ளன என்பதை உணர்ந்து கொள்கிறது.
அதற்குப் பின்னர் தந்தையின் வேகமும் முயற்சியும் கூடப் போதுமானதல்ல என்று கூட சிலர் கணித்திருக்கலாம்.
ஆனால் நாற்பதைக் கடந்தவுடன், அனேகமாக அனைவருமே தந்தையர்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்து மீண்டும் நேசிக்க ஆரம்பிக்கிறார்கள்.
பால் நினைந்தூட்டும் தாயிலும் என்பதை நம்ப, ஏற்றுக் கொள்ள ஒரு சொந்த அனுபவ அறிவு தேவை.
தாயின் வேலைப்பழுவை நாம் தினமும் காண்கிறோம்.
தந்தையின் வேலைத் தளப் பழுவை நாம் காணமுடிவதில்லை. தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. மந்திரமின்றி கோயிலேது? தெய்வமேது?
தந்தை தாய்க்கு அடுத்துத் தான் என்பதில் சந்தேகமேயில்லை ஆனால் இன்றைய உலகில் தந்தையரைப் பற்றிய புரிதல் “ரொம்பக்” குறைவாகவேயுள்ளது. அதை விட, இந்த அதியுயர் தொழில்நுட்ப உலகு தெய்வத்தின் இருக்கையை ஏற்பதேயில்லை.
ஆம், புரிதலிற்கரிதான எம் தெய்வங்கள் நம் தந்தையர் குறிப்பாக வெளிநாடுகளில் வேலையின் நிமித்தம் தந்தையர் கடினமான உழைப்பையும் விரும்பி ஏற்றுச் செய்கிறார்கள்.
அந்தப் பத்து மாதப் பணிகளிற்காக தந்தையர்கள் வாழ்நாள் பூராகவும் தொடர்ந்து படும்பாட்டை, விட்டுக் கொடுப்பை நாம் அனைவருமே அறிவோம்.
இன்றைய வர்த்தக மய உலகிலே ஒரு ஆண் தந்தையாகும் வரை தான் தனக்காக வரழ்கிறான். அதன் பின் அவனது முடிவுள் தேவைகள் யாவும் குடும்பநிலையை வைத்தே முடிவு செய்யப்படுகின்றன.
குறிப்பாக நம் தமிழ்ப் பெற்றார் எங்கு வாழ்ந்தாலும் பிள்ளைகளிற்காகவே வாழ்கிறார்கள்.
இறைவனை அறியவும் அடையவும் பலருக்கு பல பிறவிகள் தேவைப்படுகின்றன. அவ்வாறே, மாதா பிதா குரு தெய்வம் என்ற புரிதலிற்கான ஏறுவரிசை ஒழுங்கில் தந்தையைப் புரிவதற்கு ஒரு வித அனுபவ அறிவு தேவை. அந்த அனுபவத்திற்கோ காலம் தேவை. அறிவோ, ஞானமோ இருப்பின் அதற்கேற்ப காலம் குறுகும்.
இதோ தந்தையர் தினம் வருகிறது.
இதோ உங்கள் தெய்வம் முன்னாலே!
நாங்கள் நம் தந்தையர்களை உயிர் உள்ள போதே போற்றுவோம் வாழ்த்துவோம் பாராட்டுவோம்.
உங்கள் புரிதலே நீங்கள் தந்தையரிற்கு உவந்தளிக்கும் பூச்செண்டாகும்.
தெய்வம் பேசாது – பேசினாலும் புரியாது. அதைக் கேட்கவே முடிவதில்லையே. வெற்றுக் கண்ணிற்கு அது தோன்றுவதுமில்லையே!
அறிவுக் கண்ணால் தந்தையைக் காணலாம். ஞானக் கண்ணால் இறையை உணரலாம்.
தன் உயிரையும் உடலையும் தியாகம் செய்பவள் தாய்.
தன் வாழ்வையே பிள்ளைகளிற்காக வடிவமைத்துக் கொள்பவர் தந்தை.
ஏற்கமுடியவில்லையா? பொறுத்திருங்கள் நீங்கள் தந்தையாகும் வரை
அதுவரை “ஹப்பி பாதேர்ஸ் டே” என தப்பாது கூறிடுவோம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv