கல்லையும் உருக வைக்கும் பட்டினத்தார் தாயன்புத் தமிழ்..


இறைவனைக் கண்டறியும் கரும்பொன்று கடற்கரையில் விளையும்…
தமிழால் கருங்கல்லையே நடுக்கடலில் மிதக்க வைத்தவர் நமது நாவுக்கரசர், அவருக்குப் பின் கல்லைவிட கெட்டியான மனித மனதை தாயன்புத் தமிழால் உருக வைத்தவர் நம் பட்டினத்தார்.
தமிழ் என்றால் காதிலே தேன் வந்து பாயும் என்பார் பாரதியார்… ஆனால் தான் பாடிய தமிழால் தீயின் நாக்குகள் பற்றிப் பிடிக்க முடியாத வாழை மட்டையையே பற்ற வைத்தவர் பட்டினத்தார்..

இதயம் என்ற இரும்பை தமிழால் உருக்கி, உப்பாய்க் கிடந்த கரும்புக்குள் தேன் தமிழ் அறிவால் இனிப்பைக் கண்டு பிடித்து, உன்னதம் பெற்ற பட்டினத்தார் 14ம் – 15ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்.
இன்று உலகத்தில் உள்ள எல்லாத் தன்னம்பிக்கையாளரும், ” மாற்றம் ஒன்றே நிரந்தரம்..! ” என்று கூறுகிறார்கள். இருப்பினும் அதைச் செய்ய யாருமே முன்வருவதில்லை. ஆனால் மாற்றமொன்றே நிரந்தரம் என்பதை ஒரே நொடியில் “யூரேண்” எடுத்து மாற்றிக் காட்டிய முதல் பெரும் மனிதன் பட்டினத்தாரே.
சம்மந்தராகட்டும், மணிவாசகராகட்டும், அப்பராகட்டும் அனைவரும் மாற்றத்திற்காக காத்திருந்தார்களே. ஆனால் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காமல் ஒரே நொடியில் வாழ்வில் மாற்றத்தை செய்து காட்டிய தமிழ் பெரும் துறவியே பட்டினத்தார்.
பிள்ளையை படி படி என்று துன்புறுத்துகிறாய்..
மற்றவனின் பிள்ளையோடு ஒப்பிட்டு பார்த்து தினம் தினம் துயர் செய்கிறாய்..
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையில் அலைகிறாய்..
ஒரு காது ஓட்டை உடைந்த ஊசியைக்கூட இறக்கும்போது உன்னால் எடுத்து செல்ல முடியாதே என்ன செய்யப்போகிறாய்…?
இறைவன் மருதவாணன் என்ற பெயரில் மகனாகப் பிறந்து, அவர் முன் வைத்த கேள்விகள் இவை..
சும்மா கேட்கவில்லை..
பொன்னையும், மணியையும், நவரத்தினங்களையும் கோடி கோடியாக உழைத்துவந்து அவர் காலடியில் கொட்டிவிட்டு, கேட்டான். அந்த நொடியே பட்டினத்தாரின் தலைக்குள் ஆயிரம் வெடி குண்டுகளை எரிமலையாக வெடித்து சிதறின..
அவ்வளவுதான் அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு, நிர்வாண உடலோடு பரதேசியாக வீதிக்கு இறங்கினார்.. பலர் மண்ணையும், பொன்னையும், பெண்ணையும் அனுபவித்து களைத்த பின்னர் துறவியாவார்கள்… ஆனால் பட்டினத்தார் களைக்க முன்பே துறவியாகி வாழ்வில் அதிர்ச்சி மாற்றம் செய்தவர்.
மனைவி, மகன், தாய், சகோதரி என்ற நான்கு பாத்திரங்களையும் கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் என்ற நான்கு பெரும் கணித அடையளங்கள் போல பாவித்து, வாழ்க்கைக் கணக்கை விளக்கிய வணிகர்.
பூஜ்ஜியத்தில் இருந்து ஒன்பதுவரை மட்டுமே உள்ள பத்து இலக்கங்களை அடிப்படையாகக் கொண்ட நமது கணிதத்தாலும், செல்வக் கணக்குகளாலும் கணக்கே இல்லாத கடவுளைக் கண்டறிய முடியாதெனக் கணக்கிட்டு காட்டி, நமது இயலாமையை அந்த கச்சி ஏகம்பனுக்கு கீழ்ப்படிவுடன் எடுத்துச் சொன்னவர்.
பணத்தைக் கூட்டிச் செல் என்று கணவனை விரட்டும் பெண் கூட்டல் அடையாளமாக இருக்கிறாள். கண்ணால் மருட்டி, இரு முலையால் மயக்கி, புண்ணாங் குழியிடை தள்ளி என் அறிவை மயக்கினாள். நான் உறக்கத்தில் இருக்கும்போது இன்னொருவனுடன் உறவு கொண்டுவிட்டு வந்து இரகசியமாய் உறங்கினாள் என்று பெண்ணின் மீது கடும் விமர்சனத்தை வைக்கிறார்.
இது சரியா.. பெண்களை நாம் இப்படி இழிவு படுத்தலாமா.. பட்டினத்தாரின் பார்வை மீது நமக்கு மெல்லிய வெறுப்பு ஏற்படுகிறது. எல்லாம் தனக்கு வேண்டுமென்று கூட்டல் அடையாளமாக பெண்கள் பேராசை கொள்ளும் போதுதான் அவர் இந்த விமர்சனத்தை வைக்கிறார் என்பதை அவர் பாடல்களை தொடர்ந்து படித்தால் நமது தவறைப் புரிந்து கொள்ளலாம்.
மன்னனான பத்திரகிரியை ஏமாற்றி அவன் மனைவி இன்னொருவனுடன் உறவு கொண்டபோது இந்தக் கருத்தை சொன்னார்.. பெண்ணால் ஏமார்ந்த பத்திரகிரி பரதேசியாக மாற இக்கருத்து அந்த நேரம் தேவைப்பட்டது.
ஆனால் பெண் தாயாக மாறும்போது அவள் பெருக்கல் அடையாளமாக அன்பைப் பெருக்குகிறாள் என்று கண்ணீர் மல்கப் பாடி, பெண்மைக்கு பெருமை சேர்த்தார். தன் தாய் இறந்து கிடந்தபோது உருசியாய் உணவளித்த உன் வாய்க்கு அரிசியோ நான் இடுவேன் ஆத்தா என்று அழுது கதறுகிறார்..
முந்தித் தவமிருந்து, தொந்தி சரிய முந்நூறு நாள் சுமந்து, அந்தி பகலாய் ஆதரித்த ஆத்தா உனக்கோ நான் தீயிடுவேன் என்று அவர் அழுது பாடிய பாடல்களைக் கேட்டால் கல்லும் உருகும்.. வாழைத்தண்டும் தீப்பிடிக்கும்.. பெருக்கல் அடையாளம் போல அன்பு பெருகிப் பிரவாகிக்கும்…
பட்டினத்தார் துறவியாக போனபோது அவருடைய தாய் அவர் வயிற்றில் ஒரு சீலைத் துண்டைக் கட்டுகிறார்.. இந்தச் சீலைத்துண்டு என்று அவிழ்கிறதோ அன்று நான் இறந்துவிட்டேன் என்று அர்த்தம் என்று கூறி அனுப்புகிறாள்.
பரதேசியாக அலைந்த பட்டினத்தாரின் வயிற்றில் இருந்த சீலை ஒரு நாள் அவிழ்கிறது. தன்னை வயிற்றில் கட்டி சுமந்தவள் இறந்துவிட்டாள் என்பது வயிற்றில் கட்டிய சீலை அவிழ்ந்தபோது தெரிகிறது.
காடு மலைகளை தாண்டி கதறியபடி ஓடி வருகிறார்.
தாயின் உடலில் இருந்த விறகையெல்லாம் எடுத்து வீசுகிறார்.. குளிர்ந்த வாழை மட்டையில் தாயின் உடலை கிடத்தி, முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே, அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே.. நானுமிட்ட தீ மூழ்க மூழ்கவே என்று பாடுகிறார்…
அந்தத் தமிழ் கேட்டு, சுடலையில் கிடந்த வாழை மட்டை தீப்பிடித்து எரிகிறது.. அன்பு பெருக்கெடுத்து கண்களில் ஆறாய் ஓடுகிறது..
கற்பூரம் தானாக பற்றும், கரிக்கட்டியானால் ஊதி ஊதி பற்ற வைக்க வேண்டும் ஆனால் வாழைத்தண்டோ பற்றவே பற்றாது என்பார்கள். கற்பூரம் புத்தியுள்ள மாணவன், கரிக்கட்டி இடைநிலை மாணவன், வாழைத்தண்டு முட்டாள் மாணவன் என்பது நமது ஆசிரியர் கூறும் உதாரணம்.
ஆனால் சரியான தமிழில் பாடினால் வாழை மட்டையையே தீப்பிடித்து எரியும் என்று சொன்னவர் பட்டினத்தார். முதலில் தமிழை சரியாக கற்றுவிட்டு ஆசிரிய தொழிலுக்கு வந்தால் பச்சை மட்டையும் பற்றி எரியும் என்று ஆசிரிய உலகுக்கு எடுத்துரைக்கும் அருந்தமிழ் கல்விக் கொள்கை அவர் பாடல்.
மகன் சொன்ன காதற்ற ஊசியின் தத்துவத்தால் எல்லாவற்றையும் கழித்துவிட்டு கழித்தல் அடையாளத்தை துறவாக்கிய பட்டினத்தாரைப் பார்த்த தமக்கை கோபமடைகிறாள். தமது குடும்பம் சந்தி சிரிக்கிறது என்று தப்பாகக் கணக்கு போடுகிறாள்.
ஒரு நாள் அவள் மனம் மாறுகிறது.. அப்பத்தில் நஞ்சைத் தடவி அவருக்கு பிச்சையாக கொடுக்கிறாள்..
தன் வினை தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்றபடி ஓட்டில் தூக்கி வீசுகிறார். வீடு தீப்பற்றி எரிகிறது..
காரும், வீடும் வாங்கி, காசும் பணமும் வங்கியில் போட்டு, சகோதரங்களை நஞ்சு மனத்துடன் கொல்ல வரும் சகோதரங்களை வீட்டோடு சேர்த்துக் கொழுத்துகிறது அவருடைய தமிழ்.. உடன் பிறப்பை வெறும் போலிக் கௌரவத்திற்காக உலகிலிருந்தே பிரிக்க முயலும் சுயநலமிக்க ஓர் அக்காளை பிரித்தல் அடையாளமாகக் காண்கிறார்.
ஊருஞ்சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல.. தேசத்திலே யாரும் சதமல்ல என்று எல்லா செல்லாக்காசுகளையும் வீசியெறிந்த வீரத்தமிழனாக அவர் வீதியில் நின்றார்.
இப்படி நின்ற அவரை அரச அதிகாரம் மிரட்டுகிறது. மரண தண்டனை விதிப்போம் என்ற மிரட்டலில் மக்களை அஞ்ச வைத்து ஆட்சி நடத்தும் கூட்டம் விழித்துக் கொள்கிறது. அவரை திருடன் பட்டம் கட்டி கழு மரத்தில் ஏற்ற உத்தரவிடுகிறது.
கழு மரத்தின் முன் நின்று, அவர் பாடிய தமிழில் கழுமரமே பற்றி எரிந்து சாம்பலாகிறது.. ஆயுதங்களை ஏந்தி, கொலை மிரட்டலில் அதிகாரம் செலுத்தும் கூட்டத்தை கூண்டோடு எரிக்க தமிழ் தயங்காது என்று துணிவுடன் சொன்னார்.
இனி..
அவருடைய கருத்தியல் சொல்லும் அடிப்படையை விளங்கி அதை உலக விஞ்ஞானத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும்.
பொருளதாரத்தை அடிப்படையாக கொண்ட இந்த வாழ்வின் பத்து இலக்கங்களையும், நான்கு அடையாளங்களையும், ஆண் பெண் என்ற இரு பால்களையும் வைத்துக் கொண்டு நாம் அகந்தையடைய எதுவும் இல்லை…
இறைவா கச்சி ஏகம்பா.. உனது பெருமைக்கு முன் எதுவுமே சதமல்ல என்ற கருத்தை வான் வெளிக்கு அனுப்பியபோது அண்ட வெளியில் இருந்து ஒரு றேடியோ சிக்னல் அவருக்குக் கிடைக்கிறது..
கடற்கரையோரத்தில் உள்ள உப்புக் கரும்பில் ஒரு கரும்பு இனிப்பாக பிறக்கும் அதைக் கண்டு பிடித்தால் மோட்சமடையலாம்.. என்று அது கூறுகிறது..
சுடலைக் கரும்பு இனிக்குமா என்று தினசரி கடித்து வந்த பட்டினத்தார்..
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்..
என்று படிப்பறிவில்லாத பட்டினத்தார் பிரபஞ்ச உண்மையை தமிழில் பாடுமளவுக்கு ஞானம் பெறுகிறார்.. இங்கே பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்ற வரிகளே முக்கியமானவை. இந்தப் பிரபஞ்சம் விரிந்து பெருத்து பின் சிறுத்து நாடகமாடுகிறது என்பதை ஐன்ஸ்டைன் இருபதாம் நூற்றாண்டில் நிறுவுகிறார்..
அந்த ஐன்ஸ்டைன் இயற்கையே இறைவன் என்கிறார்… இயற்கையே இனிப்பு என்கிறார்..
இதே கருத்தை 14ம் நூற்றாண்டில் சொன்னபோது பட்டினத்தாருடைய அறிவு இனித்த கரும்பாக இருக்கும் இறைவனை கண்டு பிடிக்கிறது.
இனி நாஸா விண்வெளிக் கழகத்திற்கு சிறிது சென்று வருவோம்.. ஏனென்றால் பட்டினத்தார் பெருமையைப் புரிய அது அவசியம்.
என்.பி.சி தொலைக்காட்சியில் மாற்றுக் கிரகங்களில் நம்மைவிட சிவிலைஸ் பண்ணப்பட்ட உயிரினங்கள் உள்ளன என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடாத்தியவர் உலகப் புகழ் பெற்ற நாஸா விஞ்ஞானி காள் சாகன்.
அவர் இறப்பதற்கு முன்னர் பிரபஞ்ச வெளியை ஆட்சி செய்யும் பரம் பொருளுக்கும், நம்மைவிட ஆற்றலுள்ள மாற்றுக் கிரகவாசிகளுக்கும் புவியை பற்றிய தகவலை வடிவமைந்து றேடியோ சிக்னலாக அனுப்பிவிட்டு மறைந்தார்.
ஒவ்வொரு நாளும் அண்ட வெளியில் இருந்து ஏராளம் சமிக்ஞைகள் நமக்கு கிடைத்தபடியே உள்ளன. அவற்றின் பொருளை நம்மால் விளங்க முடியவில்லை. ஆனால் நம்மைவிட ஆற்றலுள்ளவர்களின் தகவல் அது என்பதை அவர் உணர்ந்தார்.
நாம் மாற்றுக்கிரக அறிவாளிகளை வெல்லுமளவுக்கு ஆற்றல் கொண்டவர்களல்ல.. நாம் பல்வேறு குறைபாடுகள் கொண்டவர்கள்.. ஒரே நொடியில் நம்மை அவர்கள் வெற்றி கொண்டுவிடுவார்கள். ஆகவே நமது ஆணவத்தை அடக்கி, இயலாமையைச் சொல்லி, அவர்களிடம் அன்பால் சரணாகதி அடைவதே சிறந்த வழி என்றார் காள் சாகன்.
0 – 9 வரையுள்ள இலக்கங்களை கொண்ட நமது இலக்க முறைமையைவிட ஆற்றலுள்ள முறைமை ஒன்று இருக்குமானால் நமது அணுசக்தி ஆற்றலே ஸ்தம்பிதமடைந்துவிடும்.
கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் என்ற நான்கு அடையாளங்களுக்குட்பட்ட நமது கணித்தை வைத்து வீரம் பேச எதுவும் இல்லை..
ஆணும் பெண்ணும் மட்டும் உள்ள இரு பிரிவுகளைவிட வேறு ஆற்றலுள்ள பிரிவுகள் நம்மிடம் பிறவி ரீதியாக இல்லையே..
இப்படி எண்ணியபோது காள் சாகனை புற்றுநோய் வந்து தழுவிக்கொள்கிறது.. மரணிக்க முன்னர் அவர் பேனா எழுதுகிறது..
முடி சார்ந்த மன்னரும், மற்றுமுள்ளோரும் முடிவிலொரு பிடி சாம்பலாய் வெந்து மாள்வதல்லால் வேறில்லை என்ற பட்டினத்தார் கருத்தே அதில் வரிகளாக உருள்கிறது.. பட்டினத்தார் வாழ்வில் சொன்னதையே அவரும் றேடியோ சிக்னலாக வடிவமைத்தார்.
அந்த வடிவத்தில்…
ஆண், பெண் தோற்றம், 0 – 9 வரையான இலக்கங்கள், நான்கு அடையாள் சேர்த்து அந்த சிக்னலை வடிவமைத்தார். மாற்றுக்கிரகங்களால் நாம் அழிவடையாதிருப்பதற்காக இந்த வரைபடம் அமெரிக்காவிலிருந்து அண்ட வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதே தகவல்களைத்தான் பட்டினத்தார் தன் தமிழ் பாடல்களால் அண்டவெளிக்கு அனுப்பினார், காற்றில் கலந்து தூதுவிட்டார்.. கடற்கரை கரும்பிலும் இனிப்பான கரும்பொன்று விளைகிறது.. அதை உண்டால் இறுதி இன்பம் பெறலாம் என்ற செய்தியை பிரதியுபகாரமாக பெற்றுக் கொண்டார்.
இறைவன் எல்லாச் சிக்கல்களுக்கும் தன் தீர்வை றேடியோ சமிக்ஞைகளாக தினசரி அனுப்புகிறார்… என்ற இரகசியம் பட்டினத்தாரின் கரும்பு இனித்த கதையில் இருக்கிறது..
காசு, பணம், போட்டி, பொறாமை என்று போலி வாழ்க்கை வாழும் நம் அவசர வாழ்வால் அதைப் புரிய முடியவில்லை..
ஒரு பொழுது இந்தப் பட்டினத்தாரை சிந்தியுங்கள்..0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv