முள்ளிவாய்க்காலில் அமரத்துவம் எய்திய எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவது எம் அனைவரதும் கடமை!- சிவசக்தி ஆனந்தன்

வன்னியில் உயிர்நீத்த மக்ளுக்கான அஞ்சலி நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது ஆண்டாகவும் வவுனியாவில் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்துள்ளது.
இதனையொட்டி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

எமது உரிமைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களைச் சந்தித்துள்ளோம்.
இருந்தபோதிலும் இங்கு சென்றால் காப்பாற்றப்படுவோம், அங்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று இறுதி நேரத்தில் மரணத்தைத் தவிர்ப்பதற்காக ஓடி ஓடி இறுதியில் காலனிடம் தம் உயிரைப் பறிகொடுத்த எம் உறவுகள் எத்தனைபேர் என்று இன்றுவரை கணக்கிட முடியவில்லை.
மரணத்தின் விளிம்புவரை சென்று இன்று மீண்டுவந்து உயிர்வாழ்கின்ற உறவுகளாக இருந்தாலும் சரி, தமது உறவுகளை இழந்துவிட்டு இன்றுவரை உள்ளக்குமுறலுடன் வாழ்க்கையை நடத்துகின்ற எமது உறவுகளாக இருந்தாலும் சரி, தமது துயரத்தையும், மனப்பாரத்தையும், மன அழுத்தத்தையும் ஓரளவிற்காவது இறக்கி வைப்பதற்காக எதிர்வரும் 18ஆம் திகதி காலை 10மணியளவில், வவுனியா நகரசபை மண்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
துயரத்தில் இருப்பவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர். அவர்களுக்கு ஆறுதலளிப்பதற்கும், அவர்களது துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் தயாராக இருப்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் குறைந்தபட்சம் வவுனியாவில் உள்ள அனைவரும் அன்றைய தினம் தங்களது அனைத்து நிகழ்வுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் அன்புடன் அழைக்கின்றேன்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி உரை நிகழ்த்தவுள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வாருங்கள் எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவோம். உங்கள் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் என்றும் உங்கள் ந.சிவசக்தி ஆனந்தன்.
இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv