வெளிநாட்டு மாணவர்களுக்கான கடும் வீசா விதிமுறைகள் பிரிட்டனில் நேற்று முதல் அமுல்

ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிரிட்டனில் கல்வி கற்பது தொடர்பான கடுமையான வீசா விதிமுறைகள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் பிரித்தானியாவில் அமுலுக்கு வந்துள்ளன.
இனிமேல் பிரிட்டனில் கல்வி கற்கும் மாணவர்கள் தமது கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர் அங்கு தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பினால், அரச அங்கீகாரம் பெற்ற தொழில்கொள்வோரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதுடன் வருடாந்தம் ஆகக் குறைந்தது 20,000 ஸ்ரேலிங் பவுண்ஸ் பெறக்கூடிய தொழிலையும் கொண்டிருக்க வேண்டுமென்ற புதிய சட்ட விதி அமுலுக்கு வந்துள்ளது.

அத்துடன், அதிகளவுக்கு தொழில்தேர்ச்சி பெற்ற வேலையாட்களின் வருடாந்த தொகையையும் இருவருடங்களுக்கு முடக்குவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. 2014 வரை 20,700 சிறப்பு தொழில்தேர்ச்சி பெற்ற வேலையாட்கள் மட்டுமே அங்கு இருக்க முடியும்.
இதேவேளை, ஸ்திரமற்ற தன்மையை இந்த புதிய விதிமுறைகள் ஏற்படுத்துமென வர்த்தகத் துறையினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்கால வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக திட்டமிடுவதற்கும் இது நெருக்கடியை ஏற்படுத்துமென விசனம் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பிரிட்டனில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் தமது கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர் இரு வருடங்கள் வரை தங்கியிருந்து தொழில்பார்க்க முடியும். ஆனால், இந்த முறைமையானது
துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.
பொருளாதார குடியேற்றவாசிகள் மாணவர் வீசாக்களைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், இந்த கடுமையான சட்டவிதிகள் பிரிட்டனுக்கு மாணவர்கள் வருவதைத் தடுத்து விடுமென்று பல்கலைக்கழகங்கள் கவலை தெரிவிக்கின்றன. பொருளாதாரத்தையும் பாதிக்குமென அவை கூறுகின்றன.
வருடாந்தம் 9 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸை வெளிநாட்டு மாணவர்கள் மூலம் வருமானமாகப் பல்கலைக்கழங்கள் பெற்றுக்கொள்கின்றன. இதில் 6 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் கட்டணங்களாக மட்டும் பெற்றுக்கொள்ளப்படுகிறது.
பிரிட்டனுக்கு வரும் அதிகளவு மாணவர்கள் வேலை செய்யவே வருகிறார்கள். படிப்பதிலும் பார்க்க வேலை செய்வதற்கே அவர்கள் வருகின்றனர். இந்தத் துஷ்பிரயோகம் முடிவுக்கு வரவேண்டுமென கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த குடிவரவுத் துறை அமைச்சர் டாமியன் கிறீன் கூறியுள்ளார்.
ஏப்ரல் 6 முதல் அதிகளவுக்கு தெரிவு செய்யப்படும் முறைமையே நடைமுறைப்படுத்தப்படுமென உள்துறை அமைச்சு அறிவித்திருந்தது. பிரிட்டனில் தங்கியிருந்து தொழில்நோக்கங்களுக்காக அதிகளவுக்கு திறமைவாய்ந்த சர்வதேச பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமென உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்று தொழில்கொள்வோரின் அங்கீகாரத்துடன் வேலையொன்றைப் பெற்றுக்கொண்டவருக்கு மட்டுமே பிரிட்டனின் எல்லை முகவரமைப்பு அங்கீகாரம் வழங்கும்.
அத்துடன் சம்பளம் 20 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கவேண்டும். இதன் அடிப்படையிலேயே பிரிட்டனில் தொடர்ந்து தங்கியிருந்து தொழில் செய்ய முடியும். இதன் மூலம் பிரிட்டனின் பொருளாதரத்திற்கு அனுகூலம் ஏற்படும் என்று உள்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை துரிதமாகக் குறைப்பதென கன்சர்வேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்தது. இதனை நிறைவேற்றுவதற்காகவே ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத குடியேற்றவாசிகளின் தொகையைக் குறைக்கும் பொருட்டு புதிய விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv