சுரேஷ் பிறேமச்சந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பு (அறிக்கை)

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் தற்சமயம் ஜெனீவாவில் நடைபெற்றுவருகிறது. இந்த ஜெனீவா மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாமையை இட்டு மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் உருவாகியுள்ளன.

 இந்த விமர்சனங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஓர் அங்கமான தமிழரசுக்கட்சி தனது நியாயங்களை வலியுறுத்தி வருகிறது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியபோது பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவன் என்ற வகையில் சில விடயங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டியது எனது கடமை என நான் கருதுகிறேன்.
மாசி மாதத்தின் முதல் வாரத்தில் நடந்த பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஜெனீவா மாநாட்டில் பங்குபற்ற வேண்டும் என்பதே பல பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது. இந் நிலையில் மீண்டும் ஓர் கூட்டத்தைக் கூடி ஆய்வு செய்யாமல், மாசி 25 ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா மாநாட்டில் கலந்துகொள்ளாது என திரு.சம்பந்தன் கையெழுத்திட்டு ஓர் அறிக்கை வெளியிட்டார். அறிக்கை வெளியிடுகின்ற சமயம் நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களான திரு.செல்வம்அடைக்கலநாதன், திரு.மாவை சேனாதிராசா ஆகியோர் இந்தியாவிலும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளிலும் இருந்தோம். அறிக்கை எழுதிய பின்னர் திரு.சுமந்திரன் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அதனை வாசித்தார்.
அவ் அறிக்கையானது ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மைக் கருத்துக்கு முரண்பட்டதாக இருந்ததால், உடனடியாக வெளியிடவேண்டாம் எனவும், எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து மீண்டும் ஒரு முறை அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். திரு.செல்வம் அடைக்கலநாதனை தொடர்பு கொண்டபோது, அவர் இவ்வறிக்கை சம்பந்தமாக எதனையும் அறிந்திருக்கவில்லை என்பதால், என்னுடன் திரு.சுமந்திரன் பேசிய விடயங்களை அவருக்கு எடுத்துரைத்தேன். திரு.செல்வம்அடைக்கலநாதன் உடனடியாக திரு.சுமந்திரனைத் தொடர்புகொண்டு பத்திரிகை அறிக்கை வெளியிடவேண்டாம் எனவும், நாங்கள் கலந்து பேசி ஓர் முடிவெடுக்கும்வரை பொறுமையாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டதாக என்னிடம் கூறினார். திருச்சியில் இருந்த திரு.மாவைசேனாதிராசாவுக்கு இது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதை பின்னர் அவர் மூலம் தெரிந்து கொண்டேன்.
ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இத் தகவல் திரு.சுமந்திரன் மூலம் தொலைபேசியூடாக தெரிவிக்கப்பட்டது. இறுதியில் பத்திரிகை அறிக்கை வெளியிடவேண்டாம் என்ற எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மாசி 25ஆம் திகதி அவ் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு தாம் விரும்பியவாறான ஓர் அறிக்கையை வெளியிட்டதானது கட்சிக்குள் இருக்கும் ஜனநாயக விரோதப் போக்கை வெளிக்காட்டுவதுடன், இவர்கள் அறிக்கை வெளியிட வேண்டியதன் அவசரத்தையும் வெளிக்காட்டிநிற்கின்றது.
இப் பத்திரிகை அறிக்கையில், ஜெனீவா மாநாட்டில் நாங்கள் கலந்துகொண்டால் வன்முறை, கலவரங்கள் போன்றவை உருவாகலாம் என்பதால் அதனைத் தவிர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், திரு.சுமந்திரன் பி.பி.சிக்கு கூறிய பொழுது சர்வதேச சமூகத்தின் ஆலோசனையின் பிரகாரமே நாம் அதில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறினார். அதற்குப் பின்னர் ஒவ்வொருவரும் ஜெனீவா போகாமைக்காக தாம் கண்டுபித்த காரணங்களைக் கூறத் தொடங்கினர்.
'எமக்கு அழைப்பு வரவில்லை' என ஒருவர் கூறினார். 'இந்தியா, அமெரிக்காவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் யாராவது ஒருவரின் தயவுடன் போய் ளுனைந டiநெ இல் இருந்து பேசுவது எமக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கு இழுக்காகாதா? என்றார் இன்னுமொருவர். 'அங்கு போய் சாதிக்க ஒன்றுமில்லை, இங்கிருந்தே 47 நாடுகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். இன்னும் பல விடயங்களை செய்ய உள்ளோம்' என மற்றுமொருவர் கூறினார்.
இதுதான் காரணமென திட்டவட்டமான காரணத்தை இவர்கள் கூறவில்லை. தமது எண்ணத்துக்கு என்ன தோன்றுகின்றதோ அத்தனையும் உளறுப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு ஜெனீவாவைப் பற்றி தெரியுமா? அங்கு நடக்கும் மனித உரிமைகள் கூட்டத் தொடர், அது நடைபெறும் முறை பற்றித் தெரியுமா? ஓரிருவருக்குத் தெரிந்திருக்கலாம். ஏனையோர் என்ன சொன்னாலும் நம்புவார்கள் என்ற சிந்தனை. எனவேதான் விரும்பிய விதத்தில் விரும்பியது போல பேசுகிறார்கள்.
இவர்கள் கூறுவது போன்றே சர்வதேச சமூகத்தின் ஆலோசனைக்கிணங்க கூட்டமைப்பு ஜெனீவாவிற்கு போகவில்லை என்றே வைத்துக் கொள்வோம். நாம் போகவில்லை என்பதை அவசரப்பட்டு, ஜெனீவாக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட முன்னர் ஏன் ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதுவரை இதற்கான வலுவான காரணம் கூறப்படவில்லை. இவ்வறிக்கையால் யார் இலாபமடைந்தார்கள்? தமிழ் மக்களா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா? அல்லது அரசாங்கமா?
இவ்வறிக்கையை அதி உச்சபட்சம் அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அமைச்சர்கள் பலரும் இதனை வரவேற்றார்கள். ஜெனீவாவில் இருந்த மகிந்த சமரசிங்கவும் இதனை வரவேற்றார். கூட்டமைப்பின் முடிவை ஏனைய எதிர்க்கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டது. திருவாளர்கள் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரது செய்திகளுக்கு அரச ஊடகங்களில் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசுடன் இணங்கிப் போகின்றது என்ற ஓர் தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டது.
அதே சமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பட்ட கருத்துக்கள் ஏற்படத் தொடங்கின. ஊடகங்களிலும் முரண்பட்ட செய்திகள் வரத் தொடங்கின. தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேல் வைத்திருந்த நம்பிக்கை மோசமாக பலவீனப்பட்டது. அறிக்கை வெளியிடுமுன்பு கூட்ட முடியாத கூட்டமைப்பு எம்பிக்களின் கூட்டம் முரண்பாடுகள் தோற்றம் பெற்றபின் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் வற்புறுத்தலால் கூட்டப்பட்டது. ஆனால் அக் கூட்டத்திலும் சர்வதேச சமூகத்தின் ஆலோசனைக்கிணங்க அங்கு போவதில்லை என்றே திரு.சம்பந்தன் அவர்களால் வற்புறுத்தப்பட்டது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒற்றுமையுடன் முன்னகர்த்திச் செல்ல வேண்டுமாயின் இம்முடிவினை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
ஆனால் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பணியாற்றி வந்த புலம்பெயர் தமிழ் மக்கள் எமது பிரசன்னம் தேவை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திய வண்ணம் இருந்தார்கள். அக்கோரிக்கைகள் யாவும் புறந்தள்ளப்பட்டன.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் சம்பந்தமாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பாகவும் சில விளக்கங்களைக் கூறவேண்டியுள்ளது.
ஜெனீவாவின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் வருடத்தில் மார்ச், யூன், செப்ரம்பர் என 3 முறை கூடுவதுண்டு. இதில் அரசாங்கங்களும், பதிவு செய்யப்பட்ட மனித உரிமை அமைப்புக்களும், ஏனைய தொண்டு நிறுவனங்களும் கலந்து கொள்வதுதான் சம்பிரதாயபூர்வமானது. இங்கு பல்வேறுபட்ட நாடுகளுடைய, இனங்களுடைய, மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் போன்ற பல பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. தீர்மானங்களைப் பொறுத்து இவை நிறைவேற்றப்பட வேண்டுமாக இருந்தால், வாக்குரிமை பெற்ற அரைவாசிக்கு மேற்பட்ட நாடுகள் அத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
இத் தீர்மானங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு பல்வேறுபட்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அரசுகள், பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு இது இலகுவானது. ஆனால், அரசியல் கட்சி ஒன்றைப் பொறுத்தவரையில் அவர்கள் ஏதாவது ஒரு தொண்டுநிறுவனம் ஒன்றின் ஊடாகவே சென்று இப்பிரச்சாரத்தினை மேற்கொள்ள முடியும். ஐ.நா. மனித உரிமைகள் கட்டிடத் தொகுதிக்குள்ளும், வெளியிலும் இப்பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியும். எமக்காதரவான நாடொன்றின் ஊடாக ஏனைய நாடுகளை ஒருங்கிணைத்து எமது கருத்துக்களைக் கூறமுடியும். தனிப்பட்ட நாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து எமது கருத்துக்களைக் கூறமுடியும்.
ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. எமக்கு அழைப்பில்லை, ஆகவே போகவில்லை என்பது அர்த்தமற்ற விளக்கம். எமக்கு தேவை இருந்தால் அதற்கான வழி முறைகளைப் பாவித்து அங்கு சென்று, எமக்கான பிரச்சாரப் பணிகளை நாம் மேற்கொள்ள முடியும். இதற்கு யாரிடமும் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.
அதேபோன்று எமது இச் செயற்பாடானது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான ஓர் விடயமுமல்ல. நாம் ஓர் அரசின் மனித உரிமை மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக நியாயம் கேட்கப் போகின்றோமே தவிர, இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக பேசுவதற்கு நாம் அங்கு போகவில்லை. எனவே ஜெனீவா போனால் அது இறையாண்மைக்கு எதிரானது, அதனால் பதவி போய்விடும் என்று கற்பனை பண்ணுவதும் அர்த்தமில்லாதது. ஜே.வி.பி வன்முறை உச்ச கட்டத்தில் இருந்த 1988, 89காலப் பகுதிகளில் இப்போதைய ஜனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், அமைச்சர்; வாசுதேவ நாணயக்கார அவர்களும் சிங்கள மக்களின் மனித உரிமைகளை காப்பாற்றக் கோரி இதே ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டனர். அன்று அவர்கள் அரசைச் சார்ந்தவர்கள் அல்ல. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் கூட்டமைப்பு. அதனால்தான் மக்கள் எம்மை அமோகமாக வெற்றி கொள்ள வைத்தனர். அப்படி நாம் வெற்றி பெற்றதால்தான் நாம் அமெரிக்காவாலும், இந்தியாவாலும் அங்கீகரிக்கப்பட்டோம். நாம் அங்கீகரிக்கப்பட்டு விட்டோம். எமது அந்தஸ்து உயர்ந்துவிட்டது. ஆகவே நாம் வீதிகளில் நின்றோ அல்லது திண்ணைகளில் நின்றோ பிரச்சாரம் செய்ய முடியாதென்று யாராவது கூறினால் அதுவும் ஓர் பிழையான வாதமே. எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும்வரை நாம் சாத்தியமான வழிமுறைகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி எமது தரப்பு நியாயங்களை எடுத்துச் செல்லவேண்டும்.
நான் இந்த நீண்ட அறிக்கையை வெளியிடுவதன் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கோ அல்லது மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கோ அல்ல. மாறாக எந்த மக்களால் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோமோ அந்த மக்கள் உண்மைகளைப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே. அவ்வாறு உண்மைகளைப் புரிந்து கொள்ளும்போது மாத்திரம்தான், மக்கள் ஏனையோரைத் தடம்மாறாது சரியான பாதையில் பயணிக்க வைக்க உதவலாம்.


க.சுரேஸ்பிறேமச்சந்திரன்,
நாடாளுமன்ற உறுப்பினர்,
பேச்சாளர்,
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv