சோதனை நாளை; ஜெனிவாவில் ஹிலாரி தலைமையில் இறுதிநேரப் பரப்புரைகள் தீவிரம்

ஜெனிவாவில் இலங்கை மீதான தீர்மானம் குறித்த இறுதி நேரப் பரபரப்புகள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலாரிகிளிங்ரன் ஜெனிவாவுக்கு நேரடியாக வந்து களத்தில் குதித்துள்ளார். அவர் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு தீர்மானத்தை ஆதரிக்குமாறு கோரி ஏனைய நாட்டுப்பிரதிநிதிகளுடன் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது.தீர்மான வரைவின் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை அல்லது நாளைமறுதினம் காலை இடம்பெறும் என்று உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

வந்திறங்கினார் ஹிலாரி

தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக இந்தியப் பிரதமர் அறிவித்ததன் பின்னர், வெளி விவகாரச் செயலர் ஹிலாரி கிளிங்ரன் நேற்றுமுன்தினம் ஜெனிவாவிற்கு வந்து சேர்ந்தார். "அது முதல் இலங்கை விவகாரத்தில் மேலும் சூடு பறக்கிறது'' என்று ஜெனிவாவில் உள்ள ராஜதந்திரிகள் கூறுகின்றனர்.

தீர்மானத்துக்கு முடிந்த வரையில் அதி கூடிய நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் அமெரிக்கா தற்போது முனைப்புக் காட்டி வருகின்றது. நேற்று மாலை வரை ஹிலாரியுடன் நடத்தப்பட்ட இராஜதந்திரச் சந்திப்புக்களை அடுத்து, இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிய நாடுகளில் சிலகூட தீர்மானத்தை ஆதரிப்பதாக அமெரிக்காவுக்கு வாக்குக் கொடுத்துள்ளன என்று அறியவருகிறது.

இன்று பக்க நிகழ்வு

இதற்கிடையே, இலங்கை மீதான தீர்மானம் குறித்து இன்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பக்க நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளது. வோஷிங்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கை மீதான தீர்மானத்தை ஆதரிப்பதன் அவசியம் என்ன என்பதை இந்த நிகழ்வு வலியுறுத்தும்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவது மட்டுமன்றி, இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படுவதன் அவசியமும் இந்த நிகழ்வில் எடுத்துரைக்கப்படும்.

குறைகிறது ஆதரவு

ஆனால், தீர்மானம் நிறைவேறாமல் தடுப்பதற்கான பகீரத முயற்சிகளில் இலங்கை அரசும் அதன் அதிகாரிகளும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறார்கள். அமெரிக்க எதிர்ப்பு நிலை வாதத்தை முன்வைத்து இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு தற்போது ஆதரவு குறைந்தே வருகின்றது என்கின்றனர் இங்கிருக்கும் ராஜதந்திரிகள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv