ஜெனீவா தீர்மானத்தின் சூத்திரங்கள்

நேற்று 22/03/2012 அன்று ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன அந்த வகையில் அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பெனின், கெமரூன், சிலி, கொஸ்டரீக்கா, செக் குடியரசு, கோத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி, லிபியா, மொரிடஸ், மெக்சிகோ, நைஜீரியா, நோர்வே, பெரு, போலந்து, மோல்டோவா, ரோமானியா, ஸ்பெயின், சுவிட்ஸர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, உருகுவே. ஆகியன வாக்களிக்க,
இலங்கை அரசாங்கத்திற்கு 15 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன .
.

பங்களாதேஷ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்குவாடோர், இந்தோனேசியா, குவைத், மாலைத்தீவு, மைவுரிடானியா, பிலிபைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா. போன்ற நாடுகள் உள்ளடங்குகின்றன.
குறிப்பிட்ட சில நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலமை வகித்திருந்தன அந்த வகையில்: அங்கோலா, போர்சுவானா, பேர்கினா பசோ, ஜிபூடி, ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா, செனகல் போன்ற 8 இதில் உள்ளடங்குகின்றது.
.
இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதன் பிண்ணணியில் பல்வேறு நோக்கர்கள் அதுபற்றி அலச ஆரம்பித்துள்ளார்கள். இந்த அலசல்கள் ஒவ்வொன்றும் அவர்கள் சார்ந்த பூகோள, அரசியல் நலன்களை மையமாக வைத்து கொடுக்கப்படுகின்றன. ஆனால் அதனுள்ளும் சில உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.
.
சிறிலங்கா சீனா மீது முற்றாக சாய்ந்திருந்து அமெரிக்காவை புறந்தள்ளுவதால் அமெரிக்கா சிறிலங்காவிற்கு பாடம் ஒன்றை கற்பிக்கவே இந்த தீர்மானத்தை கொண்டுவந்துள்ளதாக ஒரு சாரார் கூறுகின்றார்கள்?
அப்படியென்றால் அமெரிக்கா 2009 ஆம் ஆண்டும் ஒரு தீர்மானம் ஒன்றை போர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை கொண்டுவர முயற்சித்ததே அது ஏன்? என ஒரு கேள்வி எழுகின்றது. ஆனால் அப்போது அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை சபையில் உறுப்பினராக இருக்கவில்லை. அமெரிக்கா கொண்டுவரவிருந்த தீர்மானமும் 2009 இல் புறக்கணிக்கப்பட்டு சிறிலங்கா அதில் வெற்றி பெற்றதும் நினைவிருக்கலாம்.
.
2009 நகர்வும் 2012 நகர்வும் - தோல்வியும் வெற்றியும்
.
2009 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் அமெரிக்க ஆதரவு நாடுகளால் கொண்டுவரப்படவிருந்த சிறிலங்கா மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானம் தோற்றதற்கும் தற்போது அதே போலவே ஒரு தீர்மானம் வெற்றியடைந்ததற்கும் காரணம் என்ன? அப்போது அமெரிக்கா நேரடியாக நடவடிக்கையில் இறங்க முடியாது இருந்தது காரணம் அவர்கள் ஜெனீவாவில் உறுப்புரிமை பெற்று இருக்கவில்லை. ஆனால் இந்தமுறை அமெரிக்கா உறுப்புரிமை பெற்றிருப்பதனால் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது என அமெரிக்க சார்பு கருத்துக்கள் கூறுகின்றன.
.
இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம்?
.
ஆனால் அப்பொதும் சரி இப்போதும் சரி அமெரிக்கா தனது கொள்கையில் உறுதியாக இருந்தது எனவும் ஆனால் இந்தியாவின் திடீர் மாற்றமே இந்த முறை தீர்மானம் ஜெனீவாவில் சிறிலங்காவிற்கு எதிரான வெற்றிபெற வழிவகுத்தது என இந்திய சார்பானவர்களின் கருத்துக்கள் கூறுகின்றன. அதாவது இந்தியா மிகப்பெரிய கொள்கை மாற்றம் ஒன்றை செய்துவிட்டதாகவே அவர்கள் வாதிடுகின்றனர். ஏனென்றால் 2009 ஆம் ஆண்டு இந்தியா சிறிலங்காவிற்கு சார்பாக முழுமையாக களத்தில் இறங்கி வேலை செய்ததுடன் ஏனைய நாடுகளையும் சிறிலங்காவிற்கு ஆதரவாக செயற்படவைத்தது என்றும் ஆனால் இந்த முறை சிறிலங்காவிற்கு எதிராக செயற்படும் நிலைப்பாட்டினை எடுத்தது என்றும் ஆகையால்தான் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது என்றும் கூறுகின்றனர்.
.
ஆனால் இந்தியாவின் (காங்கிரஸ்) கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என கூற முடியாது மாறாக ஆழும் காங்கிரஸ்கட்சியின் தொடர் தோல்விகளே அவர்களை ஆட்டம் காண வைத்தது; இதற்கு தமிழக மக்களின் போராட்டமும் முக்கிய காரணமாகும். காங்கிரஸின் இந்த தோல்விகள் 2009 தேர்தலிலும் நடந்திருந்தால் டில்லி வேறு மாதிரி முடிவுகளை எடுத்திருக்கும் எனவும் கூறமுடியும்.
ஜெனீவா தீர்மானத்தின் முக்கிய பங்குதாரர்கள் இந்தியாவும், அமெரிக்காவுமே இந்த இரு நாடுகளும் 2009 இற்கு பிற்பாடு உறவு நிலைகளில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. இந்த நெருக்கம் சீனாவிற்கு எதிரான அணுகுமுறையாக இருக்கின்றது. ஆகவே அமெரிக்க - இந்திய கூட்டுறவின் ஒரு நகர்வாகவே ஜெனீவா தீர்மானத்தின் வெற்றி பார்க்கப்படவேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
.
சிறிலங்கா அரசும்- தமிழர்களும்
.
இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளை விடுத்து இந்த தீர்மானத்தில் முக்கிய பாத்திரம் வகிப்பவர்களில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழ் மக்களும்தான் என்ற எண்ணத்துடன் பார்க்கையில்; ஜெனீவா தீர்மானம் வெற்றி பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் எதேச்சாதிகாரம், மேற்குலகிற்கு எதிரான கடும்போக்காளர்களுடனான கூட்டு, தம்மை எதுவும் செய்ய முடியாது என்ற மமதை, தமிழர்களை ஏமாற்றுவதுபோல உலக நாடுகளையும் ஏமாற்றிக்கொண்டு அவர்கள் மீதே சவாரி செய்யலாம் என்ற நம்பிக்கை ஆகியவையே காரணமாகும்.
.
சிங்கள இனவாத அரசு போர் நடைபெறும்போது அழுது, அழுது வெளி நாடுகளிடமும் இந்தியாவிடமும் உதவிகளைப்பெற்று தமிழர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டது. ஆனால் போர் முடிந்த கையோடு அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளை வேண்டா விருந்தாளிகளாக பார்த்தது. இது வழமையாக நடக்கின்றதொரு விடயமாக இருப்பதனால் அமெரிக்கா , இந்தியா சில பூட்டுக்களை மஹிந்த அரசிற்கு போட முனைந்தபோதும் அதில் தோல்வி காணவே ஜெனிவா தீர்மானம் போன்ற ஒரு திடமான நாணையக் கயிற்றையாவது போடலாம் என திட்டமிட்டு செயற்பட்டது, அதில் வெற்றியும் கண்டுள்ளது.
.
ஜெனீவா தீர்மானம் சிறிலங்காவிற்கு தோல்வியை கொடுத்ததற்கு மஹிந்த அரசாங்கத்தின் இராய தந்திர தோல்வியே என மஹிந்த அரசில் உள்ளோரும், எதிர்க்கட்சிகளும் இப்போது வெளிப்படையாகவே கருத்துக்களை கூறத்தொடங்கி விட்டார்கள். இந்த கருத்தானது மஹிந்த ஆட்சியை மாற்றுவதற்கான ஒரு பரப்புரையாகவே பார்க்க முடியும். பேரினவாத பிக்குகளும் , சிங்கள தீவிரவாத தலைவர்களும் சீனாவையே 100 விழுக்காடு நம்புபவர்கள். இந்த அடிப்படையில் தமது பேரினவாத இருப்பை காப்பாற்ற மஹிந்தரையும் தூக்கி எறியலாம் என்பது ஆட்சி மாற்றத்தினை விரும்புவோரின் நம்பிக்கை.
.
ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் முள்ளிவாய்க்காலின் பின்னரான போராட்டமும் நகர்வுகளும் சர்வதேசத்தினை மையமாக வைத்து அவர்களிடம் நீதியைப் பெறுவதற்கான ஒரு வழிமுறையாக மாறியது. நியாயத்திற்காக தொடர்ந்து போராடுவோம், அனைத்துலகத்தின் கதவுகளை தட்டுவோம் என்ற நோக்குடன் செயற்பட்டதனால் ஜெனீவா தீர்மானம் ஒரு படிமுறையாகவும், ஒரு சாதகமான வழிமுறையாகவும் பார்க்கப்படுகின்றது. உலக தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டால் இன்னும் பல மாற்றங்களை கொண்டுவரமுடியும் என்பதே ஜெனீவா தீர்மானத்தின் வெற்றி குறிப்புணர்த்துகின்றது.
.
2009 இற்கு முன்னர் தமிழர்களின் போராட்டத்தினைப் பற்றி குறை கூறுபவர்கள் அண்டை நாட்டுடனும் , சர்வதேசத்துடனுமான உறவில் தமிழர்கள் கோட்டைவிட்டுள்ளார்கள் என புலம்புவார்கள். ஆனால் இப்போது அதே புலம்பலை சிங்களவர்கள் கூறத்தொடங்கிவிட்டார்கள். அதாவது ஜெனீவா தீர்மானத்தின் தோல்வியானது மஹிந்த அரசாங்கம் அண்டை நாடான இந்தியாவுடனும், மற்றும் உலக நாடுகளுடனும் உறவை சரியாக புரிந்து செயற்படவில்லை என்பதே.
.
ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை இப்போதும்தான் அண்டை நாட்டுடன் உறவை பேணவில்லை, இராஜ தந்திரம் என்ற போர்வையின் கீழ் இந்தி மத்திய அரசினை தூக்கி பிடிக்கவும் இல்லை. மாறாக உண்மைக்காக போராடினார்கள், எதிரிகளின் காலைப் பிடிப்பதனை விட அந்த எதிரிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடினார்கள் என்றே கூறமுடியும்; எடுத்துக்காட்டாக தமிழக மக்களின் போராட்டமும், தீர்மானங்களையும் குறிப்பிடலாம்.
.
யார் எப்படியான இராய தந்திரங்களை கையாண்டாலும் அதனால் விளைகின்ற சக்தியை முறியடிக்கின்ற பெரும் சக்தி உண்மையான, நேர்மையான தியாகங்களுக்கும், விடுதலை உணர்விற்கும் அதனால் கட்டி எழுப்பப்பட்ட மக்கள் சக்திக்கும் உண்டு.
அடுத்த வாரம் தொடரும்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv