நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்களுக்கு பிரிட்டனில் பயோமெட்ரிக் உரிமம்

பிரிட்டனில் நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு உயிரியல் அடையாளங்களை உறுதிப்படுத்தும்  பயோமெட்ரிக் குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அந்நாட்டரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனின் குடியேற்ற விதிமுறைகளில் புதிய திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி அந்நாட்டில் நிரந்தரமாக வாழும் உரிமை பெற்றிருப்பவர்கள் பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம்
எனப்படும் புதிய அட்டையைப் பெற விண்ணப்பிக்கவேண்டும்.
சட்டவிரோதக் குடியேற்றத்தைக் தடுப்பதற்காக இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டனில் குடியேறிய வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அந்நாட்டு குடியுரிமையைப் பெறுவதற்குப் பதிலாக நிரந்தரமாக வாழும் உரிமையை மட்டும் பெற்றுக்கொண்டனர். அத்துடன் தமது சொந்த நாட்டு குடியுரிமையையும் வைத்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் புதிய விதிமுறைகள் பொருந்தும்.
பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம் என்பது ஒரு மின்னணு அடையாள அட்டையைப் போன்றதாகும். சம்பந்தப்பட்டவரின் பெயர் ,பிறந்தநாள், பிறந்தஇடம் உள்ளிட்ட சுயவிபரங்களுடன் கைரேகை, முகப்பதிவு ஆகியவை அதில் அடங்கியிருக்கும்.
குடியேற்ற நிலை,பிரிட்டனில் அவர் பெற்றிருக்கும் உரிமைகள் போன்றவை பற்றிய விபரங்களையும் இந்த  அட்டையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பல ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் குடியேறிய பெரும்பாலான பிறநாட்டவர்களும் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.
அனுமதியில்லாமல் பிரிட்டனில் பணிபுரிந்து வரும் பிற நாட்டவர்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டால் இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை  உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv