மாலைதீவில் நடந்ததுதான் என்ன? (சிறப்புக் கட்டுரை)

குறைந்தளவிலான மக்களைக் கொண்ட இந்து சமுத்திரத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்படும் ஒரு தீவாக விளங்கும் 'மாலை" தீவில் நடந்தது தான்என்ன? அன்று செவ்வாய்க்கிழமை! ஜனாதிபதி மொஹமட் நஷீட் எதிர்பார்த்திராத நாள் என்று கூடக் கூறலாம். திடீரென நாடளாவிய ரீதியில் வெடித்த பாரிய ஆர்ப்பாட்டம். 


முஹமட் நஷீட் பதவிவிலக வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தின் பிரதான கருப்பொருளாக இருந்தது. இந்நிலையில் செய்வதறியாது , சொல்வதறியாது தடுமாறிய ஜனாதிபதி முஹம்மது நஷீட் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரது பதவி விலக்கல் ஒரு திட்டமிட்ட சதியா? அல்லது சர்வதேசங்களின் மறைமுக அழுத்தமா என்ற கேள்வி எழும்புகின்றது. 


ஆம்! அமைதியாக இருந்த இந்த மாலைதீவில் உண்மையில் நடந்தது தான் என்ன என்று அறிந்து கொள்வதற்கு பலரும் பெரும் ஆவலாக இருக்கின்றார்கள். ஆம் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம். 

கிட்டத்தட்ட நான்கு இலட்சம் மக்களைக் கொண்ட இந்த சிறிய தீவுக்கு ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர் முஹம்மது நஷீட். சுமார் மூன்று தசாப்தங்களாக மாலைதீவைத் தன்பிடிக்குள் வைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூமை 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தோற்கடித்து முஹம்மது நஷீட் மக்களால் பெரும் ஆதரவுடன் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டார். 

தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட நாளிலிருந்து நாட்டின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளார். சுன்னி இஸ்லாமிய நாடான மாலைதீவில் இந்த வருட முற்பகுதியில் அறிமுகப்படுத்திய நவீன திட்டங்களின் பின்னரே இவ்வாறான வெடிப்பதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்துள்ளது என்று தெற்காசிய ஊடகங்கள் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திகளிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. 

 

இதுவும் உண்மையா? இவ்வாறு கூறப்பட்டாலும் அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்ற சிரேஷ்ட நீதிபதி அப்துல்லாஹ் முஹம்மதுவை கைது செய்வதற்குக் கட்டளையிட்டதற்கமைய இராணுவம் கைது செய்தமையும் அதனால் ஏற்பட்ட பொலிஸார் ஆதரவுடனான கலகமுமே நசீட் பதவி விலகி தனது துணை ஜனாதிபதியான டாக்டர் வாகிட் பதவியேற்க வழிவகுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

புதிய ஜனாதிபதி பதவியேற்ற மறுநாளே கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி விடுவிக்கப்பட்டதுடன், வன்முறைகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இதன் உச்சக்கட்டமாக புதன்கிழமை இரவு இடம்பெற்ற பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் பலர் காயமடைந்ததாகவும் அதில் பதவி விலகிய நசீட்டும் ஒருவரெனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
இதேவேளை இருதரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா மற்றும் அமெரிக்கா ,பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்திருக்கின்றன. இந்நிலையில் மாலைதீவு பிரச்சினைக்கு இந்தியா, சீனா ஆகிய நாடுகளும் பின்னணியில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்களில் கிடைக்கும் செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எனினும் இலங்கையைப்போன்று மாலைதீவும் முக்கிய கேந்திர மையமாக இருப்பதால் இந்திய குறியாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. 

முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீட் கொழும்பில் கல்வி பயின்றவர். அது மட்டுமன்றி பல உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மாலைதீவு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அவர் இலங்கையிலிருந்து செயற்பட்டிருக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. எனினும் இந்த விடயம் பெரும்பாலானவர்கட்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறலாம். 

ஆம்! தான் 2008 ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தைக் கடலுக்கடியில் நடத்தி சர்வதேசத்தை தன்பால் கவரச் செய்தவர் நஷீட். மக்களை பகடைக்காய்களாக்கி தான் தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டியதொரு தேவையில்லை என்றதற்கமைய தனித்தன்மை வாய்ந்த சிறந்த தலைவனாக இருந்தவர் இவர்.


மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாலே நகர் வீதிக்கு நேரடியாக வந்த அதிபர் நஷீட் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சென்று விளக்கமளிக்க முற்பட்டார். கலகக்காரர்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். இதற்கிடையில் தனது ஆதரவாளர்களுக்கும், எதிரணி ஆதரவாளர்களுக்குமிடையே இரத்தக் களரி ஏற்படுகின்ற நிலை அங்கு தோன்றியது.

அங்கிருந்து அகன்ற ஜனாதிபதி நஷீட், தான் மாலைதீவில் சட்டரீதியாக ஜனநாயக முறைப்படி பதவிக்கு வந்த நிலையிலும் மக்களைக் காயப்படுத்திக் கொண்டு அவர்களின் இரத்தத்தின் மேல் நின்று அதிகார பீடத்தில் இருக்க விரும்பவில்லை என்று தொலைக்காட்சியினூடாக கூறியதுடன் தனது சகாவிடம் பதவியையும் ஒப்படைத்தார். 

அத்துடன் தன்னைப் பதவி விலகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் பொலிஸார் தன்னை ஆயுத முனையில் அச்சுறுத்தி பதவி விலக்க கோரியதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு நஷீட்டின் மனைவி லைலா மற்றும் அவரது பிள்ளைகள் இருவர் பாதுகாப்புக் கருதி இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். இது இவ்வாறிருக்க நேற்று வியாழக்கிழமை மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி நஷீட்டுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. 

இதனை அறிந்தவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். அது மட்டுமா அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு அந்நாட்டின் தற்போதைய நிர்வாகத்திற்கு வலியுறுத்தியுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் பிந்திய தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இந்த பதற் நிலை தொடருமா? அல்லது சுமுகமான நிலை ஏற்படுமா? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் !

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv