சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடனேயே தமிழ் கூட்டமைப்பு பேச வேண்டும்!- சிவில் சமூகம் கோரிக்கை


தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடனேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூகம் மீண்டும் கோரியுள்ளது.
வவுனியாவில் இன்று காலை 10.20 மணியளவில் தமிழ் சிவில் சமூகம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற, கலந்துரையாடலில் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் செய்யவில்லை என பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்து தமிழ் சிவில் சமூகத்தினர் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று வவுனியா, றம்பைக்குளம் சென்.அன்ரனிஸ் தேவாலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் தலைமையில் இடம்பெற்றது.


இதில் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது, தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை கொள்கையுடனேயே அரசாங்கத்துடன் கூட்டமைப்பினர் பேச வேண்டும். அத்துடன், கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகளுடன், அதாவது இக் கொள்கைக்கு ஆதரவான அனைத்து கட்சிகளுடனும் இணைந்து பேசி சரியானதொரு தீர்வை தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு பெற்றுத்தர வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள சிவில் சமுகம், அதற்காக தாம் பக்க பலமாக நின்று ஒத்துழைப்போம் எனவும் கூறியுள்ளது.
அதற்கு பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,
தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் அரசுடன் கூட்டமைப்பு பேச வேண்டும் என்று சிவில் சமுகம் கோரியுள்ளது. நாங்கள் எந்த பதாதைகளையும் தூக்கிக்கொண்டு பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லவில்லை.
ஆனால் எம் தமிழ் மக்களுக்குத் தேவையான நீதியான, நியாயமான, சுதந்திரமான, பொருளாதார, சமூக, கலாசார, பண்பாட்டுடன் கூடிய தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளோம். இதற்கு ஏனைய கட்சிகளுடனும், சமூகத்தினருடனும் இணைந்து பேசிக் கலந்துரையாடத் தயாரகவும் உள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்பினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பெரியதொரு கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும முன்வைக்கப்பட்டது.
இரு தரப்பின் கூற்றுகளின்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பான ஐயப்பாடுகள் தமிழ் சிவில் சமூகத்திற்கு தீர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(2ம் இணைப்பு)
13 வது திருத்தச் சட்டத்தை நிராகரிப்பதாக கூறினாலும் தற்போது “தந்திரோபாய” காரணங்களுக்காக 13 வது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை கூட்டமைப்பின் சுமந்திரன் எம்பியும் தலைவர் சம்பந்தன் அவர்களும் தமிழ் சிவில் சமூகத்தினரிடம் வலியுறுத்த முற்பட்டனர்.
13வது திருத்தத்தினை எந்தக் கட்டத்திலும் எந்தத் தேவைக்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரது அரசியல் தீர்வு தொடர்பில் பயன்படுத்தக் கூடாது என சிவில் சமூகம் வலியுறுத்தியுள்ளது. ஏனென்றால் தந்திரோபாய காரணங்கள் என்று ஆரம்பித்தாலும் இறுதியில் 13 ஆம் திருத்த கட்டமைப்பிற்குள் தமிழரை முடக்கும் திட்டமாகவே இது அமையும் என்றும் சிவில் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடிப்படைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்தாலும் அக்கூட்டத்தில் உரையாற்றிய ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்கூட தேசம் சுயநிர்ணயம் என்பதை தமிழரது அரசியலின் அடிப்படை என்பதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்ட கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறன் அவர்கள் “தேசியம் சுயநிர்ணயம் ஆகியன வெற்று எண்ணக்கருக்கள் என்றும் அவை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் காரணத்தினால் அவற்றைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை” என்றும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாது விட்டமை வடக்கு கிழக்கு பிரிந்திருந்தமையினாலேயே என்பதனை ஏற்றுக் கொண்ட சம்பந்தன் வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக அறிவித்தல் வெளியான பின்னர் சகல தரப்பினருடனும் கலந்தாலோசித்து சரியான முடிவை எடுப்பதாக தெரிவித்தார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் தற்போது மட்டுமல்ல எப்போதைக்குமே போகக் கூடாதுஎன்ற நிலைப்பாட்டை சிவில் சமூகம் வலியுறுத்தியபோது அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு “இப்போது” போக மாட்டோம் என்றே பதிலளித்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் வலிமையான அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்த இதுவரை ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை என்ற சிவில் சமூகத்தினரின் கேள்விக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தப் பதிலையும் வழங்கவில்லை.
சிவசக்திஆனந்தன் எம்பி அவர்கள் உரையாற்றும்போது கNஐந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் கொண்டுவருவதற்கு சிவில் சமூகம் முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் சிவில் சமூகத்தினருடைய பார்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv