அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு ஓர் அன்பு மடல்

அமைச்சர் ஆறுமுகன் அவர்களுக்கு அன்பு வணக்கம். தங்கள் பேரனார் செளமியமூர்த்தி தொண்ட மானின் அரசியல் சாணக்கியத்தை நினைத்துப் பார்க்கின்றோம். இனவாதத்தை மையமாக வைத்து ஆட்சி செய்யும் இலங்கை மண்ணில் மலையகத் தமிழ் மக்கள் இந்தளவுக்கேனும் தலைநிமிரக் கூடிய நிலைமை தொண்டமானின் அரசியல் ராஜதந்திரத்தால் ஏற்பட்டது எனலாம். யார் ஆட்சிக்கு வந்தாலும் அதில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு மலை யகத் தமிழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மெல்ல மெல்ல உயர்த்துவதில் சாதனை படைத்தவர் அவர்.


மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களின் குடியுரிமை முதல் வாழ்வியம்,வேலைக்கான ஊதியம், கல்வி என்ற அத்தனையும் பிரச்சினை நிறைந்ததாகவே இருந்தன-இருக்கின்றன. இது தவிர ஒரு காலத்தில் மலையகத் தமிழ்ப் பிள்ளைகளை வீட்டுப் பணிக்கமர்த்தி அவர்களை வஞ்சித்த பாவப்பழிகள் எங்களையும் சூழும் வகையில் நாமும் அவர்களை தமிழினப் பற்றோடு நோக்காமல், வீட்டுப் பணி என்ற அடிப் படையில் நடந்து கொண்டோம். மிகக் கொடூரமான இந்நிலைமைகள் தற்போது இல்லையென்ற திருப்தியோடு மலையகத் தமிழ் மக்கள் இப்போது கல்வியில், பிறமொழி அறிவில், சீவனோபாய வருமானத்தில் மேன்மையடைந்து வருகின்றனர் என்ற செய்தி ஆறு தல் தரக்கூடியதாக உள்ளது.

இருந்தும் மலையகத் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் இன்னமும் தொடர் குடிசைகளாக இருக்கின்ற துன்பத்திற்கும் முடிபு கட்ட வேண் டிய அவசிய தேவை உண்டு. இதற்கு மேலாக இலங்கை மண்ணில் தமிழ் மக்களின் இருப்பு என்ற விடயத்திலும் மலையகத் தமிழ் மக்களின் பொறுப்பும் பங்கும் பணியும் மிக முக்கியமானவை. நிலைமை இதுவாக இருக்கும்போது தமி ழகத்தில் உள்ள விடுதி ஒன்றில் நீங்கள் குடித்து விட்டு ரகளை செய்ததாக செய்தியறிந்து அதிர்ந்து போனோம்.

பொறுப்புவாய்ந்த ஓர் அமைச்சர், அதுவும் அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்து வப்படுத்துகின்ற அமைச்சர் மதுபோதையில் ஊரறிய, நாடறிய, உலகறிய கும்மாளம் போடுவது மலையக மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடியது மட்டுமன்றி மலையகத் தமிழ் மக்களின் குருதியை இன்னமும் உறிஞ்சிக் குடிக்கின்ற மது பாவனையை அந்தப் பகுதியில் இருந்து ஒழிப்பதற்கும் சவாலாக இருக்கும். எனவே, செளமியமூர்த்தி தொண்டமானின் பேரன் என்ற ஒரே தகைமையுடன் அரசியலில் நுழைந்த நீங்கள், தொண்டமானை விட ஒரு படி மேல் சென்று மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். ஆனால்,நீங்களோ மதுபோதையில்...

எப்படி? மலையக தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வு, அரசியல் ஸ்திரம். நினைக்கவே வேதனையாக இருக்கிறது. மதுவை மறந்து மக்கள் சேவையைச் செய்யுங்கள் அதுபோதும்.
-வலம்புரி 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv