"உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படம் பற்றிய ஒரு பார்வை:

திரைப்படங்கள் என்பன ஒரு பொழுது போக்குக்குரியவை என்ற வட்டத்தைத் தாண்டி அவை ஒரு செய்தியை ஒரு சம்பவத்தை மனித வாழ்வின் அன்றாட நிகழ்வின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வினை மனித மனங்களில் இருக்கின்ற குணாம்சங்களினால் எழுகின்ற பிரச்சினைகளின் தாக்கங்களை மக்களுக்குள் கொண்டு செல்லுகின்ற ஊடகமாக இன்று பெரும் வளர்ச்சியடைந்துவிட்டது.
உலக சினிமாக்கள் உலக மக்களிடையே உலக மாந்தர்களின் வரலாற்றைச் சொல்லுகின்ற மனித இனம் கடந்து வந்த சரித்திரங்களைச் சொல்லுகின்ற சக்திமிகு ஊடகமாக கவனிப்படுகின்றது. சினிமா என்பது ஒரு ஆவணங்களைத் தொகுத்து வைத்திருக்கும் ஒரு பெட்டகம் என்றுகூடச் சொல்லலாம்.
தமிழகத்தின் தமிழ்த் திரைப்படங்கில் பெரும்பாலானவை தமிழர்களுக்கு இதுவரை ஒரு பொழுது போக்கு அம்சமாக கனவுலகில் மிதக்க வைக்கின்ற ஒரு தளமாகவிருக்கின்ற நிலையில் அண்மையில் வெளிவந்த "உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படம் இலங்கைத் தமிழர்களின் பெரும் பெரும் துயரங்களின் ஒரு துளிப் பதிவை உலகத் தமிழர்களின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கின்றது.
தனிமனித வல்லமைக்கும் அவனுடைய உடல் வலுவிற்கும் ஏற்புடையதல்லாத ஒரு மனிதனை கதாநாயகனாக கற்பித்து அவன் ஒருவனே ஆகாயத்தில் பறந்து பறந்து ஒரே நேரத்தில் கொடுமை செய்யும் பலரை அடித்து வீழ்த்துவதும் வில்லன்கள் இரும்புச்சட்டத்தால் அடித்தாலும் எந்தப் பாதிப்புமே ஏற்படாத அமானுசய கதாநாயகர்களை வெளிக்காட்டி வருகின்ற கற்பனையை தமிழகத் திரைப்படங்களில் மட்டுமே பார்க்க முடியும்.
அமானுசயமான கதாநாயகர்களையும் அழகழகான பெண்களை மட்டுமே திரைப்படங்களாக கொடுத்து வந்த திரையுலகில ; ஒரு உண்மைiயான சம்பவமான இலங்கையில் மட்டடக்களப்பில் ஒரு 13 வயதுச் சிறுமி ஒருத்தி இலங்கை இராணுவத்தினரால் குழுவாக பாலியல் கொடுமை புரியும் கதையைக் கொண்ட உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழகத் திரையரங்குகளிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டிருக்கின்றது.
தமிழகத் திரைப்படங்களை குறை சொல்வது எனது நோக்கமல்ல. ஆனால் உண்மைச் சம்பவங்களை உரத்துச் சொல்லுகின்ற உண்மைகளை தமிழர்கள் எவ்வளவு உள்வாங்குகிறார்கள் என்பதை ஒரு முறை சிந்திக்க வேண்டியுள்ளது.
இராணுவத்தினரால் குழுவாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் புனிதவதி என்ற பெயர் கொண்ட 13 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்து வரும் கருவைக் கலைப்பதற்காக எவ்விதமான விசா அனுமதியும் இல்லாமல் மட்டக்களப்பில் இருக்கும் தாய்மாமனின் உதவி மூலம் தாயுடன் தமிழகத்திற்கு வந்து சேரும் புனிதவதி சந்திக்கும் துயரங்களைச் சொல்வதே இத்திரைப்படம்.
இதை வெறும் திரைப்படமாகப் பார்க்க முடியவில்லை. திரையரங்கிற்குள் இத்திரைப்படத்தைப் பார்த்த அனைவருமே கண்கலங்கியதை என்னால் பார்க்க முடிந்தது. மாமியார் கொடுமை கணவன் கொடுமை நாத்தனார் கொடுமை எனச் சினிமாவிலும் சின்னத்திரை நாடகங்களிலும் வரும் காட்சிகளைப் பார்த்து "ஐயோ இதென்ன கொடுமை" என விசும்பி அழும் மாந்தரில் இந்தச் சிறுமியின் கதை சொல்லும் உண்மைகளை இலங்கைத் தமிழர்கள் அனுபவித்தார்கள் என்பதற்கு இப்படம் ஒரு குறியீடு.
தேடல் வேட்டை என்ற சூழ்நிலைக்குள் அழுகையும் கண்ணீருமான சூழ்நிலைக்குள் தன்னோடு கொண்டது உடல் உறவுதான் என்பதை அறியாத ஒரு சிறுமி தான் கருவுற்றிருப்பதையே அறியாது ஒரு அவலத்தைச் சுமந்து நிற்கின்ற காட்சிகள் இது போன்ற கொடுமைகளை தாங்கி வெளி உலகிற்கே தெரியாது மௌனமாக அழுது கொண்டிருக்கின்ற பல சிறுமிகளை பார்ப்போரின் முன் நிறுத்தியுள்ளது.
இத்திரைப்படத்தில் இராணுவத்தினர் தமது காம இச்சையைத் தீர்ப்தற்காக சென்ற இடங்களில் எய்ட்ஸ் நோயையும் கொண்டுள்ளார்கள் என்பதை பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் புனிதவதி எய்ட்ஸ் நோய்குள்ளாகும் உண்மையை சொல்லுகின்ற உத்தியை இயக்குனர் புகழேந்தி கையாண்டிருக்கின்றார்.
நீநிகா சத்தியராஜ் நாசர் லக்ஸ்மி இராமகிருஸ்ணன் சங்கீதா சீமான் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றார்கள்.மட்டக்களப்பிலிருந்து களவாக சென்னைக்கு வரும் புனிதவதியும் அவரின் தாயாரும் சத்தியராஜ் சங்கீதா தம்பதிகள் வீட்டில் தங்கி கருக்கலைப்புக்கான முயற்சிகளில் மருத்துவரின் உதவியை நாடுவது புனிதவதிக்கு எய்ட்ஸ் இருப்பதை விசேச மருத்துவரான நாசர் கண்டுபிடிப்பது சங்கீதாவின் தாயை புனிதவதி ஆச்சி என்றழைப்பது ஆச்சி ஒரு சிறுமி என்றும் அறியாமல் அவள் எச்சூழ்நிலையில் கருவுற்றாள் என்பதை அறியாமல் மிக மோசமாக அவளை வேதனப்படுத்துவதும் அதன் உள்ளர்த்தத்தை அறியாத சிறுமி மிக இயல்பாக இருப்பதும் அரவாணிகளின் உதவி என கதை தெளிவாக பினனப்பட்டிருக்கின்றது.
பயங்கரவாதம் எனச் சொல்பவர்களால் சொல்லப்படுகின்றதை அது பயங்கரவாதம் அல்ல என இயக்குனரால் சொல்லப்படுகின்ற காட்சிதான் போராளி கரும்புலியாக உருமாறும் காட்சியாகும். போராளியாக நடிக்கும் நடிகைகளிடம் போராளித்தன்மையைக் கண்டுகொள்ள முடியவில்லை.வலிந்து புகுத்தப்பட்ட காட்சிகளாகப் போராளிப் பெண்களும் கரும்புலிப் காட்சியும் கதையோடு ஒட்டாமலிருக்கின்றது.அவற்றைத் தவிர்திருக்க வேண்டும்.
அதே போன்று தமிழகத்தின் பரீட்சைக் காலத்தினால் மட்டக்களப்பில் பரீட்சை நடைபெறும் காலத்தை புனிதவதி நினைவில் மீட்டுக் கொள்ளும் காட்சியில் பள்ளிக்கூடத்தில் மணி அடித்ததும் பரீட்சைத் தாள்களை விசிறியடித்து மாணவர்கள் ஆரவாரத்துடன் பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறுவது என வடிவமைக்கப்பட்ட காட்சி பரீட்சைத்தாள்களை பரீட்சை கண்காணிப்பளரிடம் கொடுக்காமல் போன காட்சி பரீட்சையையே கேலிக்கூத்தாக்கிய காட்சியாக அமைந்துவிட்டது.
இது வழமையான திரைப்படங்களில் வருகின்ற நினைவுக்கனவுக்காட்சியாக அமைந்துவிட்டது. "இருப்பாய் தமிழா நெருப்பாய்" என்ற பாடலும் கதைக்குச் சம்பந்தமில்லாமல் புகுத்தப்பட்ட காட்சியாக அமைந்துவிட்டது.பிரதான கதையென்பது புனிதவதி இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்குள்ளானது என்பதே அதை நோக்கியே கதையை நகர்த்துவதில் அசிரத்தை காணப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் எல்லைக்குள் களவாக வந்த புனிதவதிக்கு தங்குமிடம் கொடுத்தது தவறு என்ற இந்திய தமிழக சட்டத்திற்கு முன் குற்றம் என்பதையும் தமிழக காவல்துறையினருக்கு அறிவிக்காமல் விட்டமை குற்றம் என்பதையும் இத்திரைப்படம் சொல்லியதிலிருந்து தயாரிப்பாளர் இயக்குனர் இந்தியச்சட்டத்தை மதித்துள்ளமையைக் காணக்கூடியதாகவிருக்கின்றது.
கொடுமை கண்டு கொதித்தெழடா தமிழா என்பவை வெறும் சவாடல் வார்த்தைகள்தான் என்பதை தமிழகத் திரைப்படங்கள் பலமுறை மெய்ப்பித்து வருகின்றன.இலங்கைத் தமிழர் அனுபவித்த கொடுமையை சினிமாத்துறையினர் கண்டுகொள்வதில்லை என்பதை "உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படத்திற்கு தமிழ்த்திரைப்படத்துறையினர் இப்படத்தினை "கண்டு கொள்ளாமை" என்பதிலிருந்தே அறிய முடிகின்றது.
தமிழ் உணர்வினை வெளிநாடுகளில் வணிகமயப்படுத்தும் தந்திரத்தை ஊடகங்கள் அறிந்து வைத்திருக்கின்றன. தமிழக பத்திரிகை ஊடகங்கள் இத்திரைப்படம்பற்றி வாயே திறக்காமலிருந்தது என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது. தமிழகத்தில் திரைப்படங்கள் எவரால் தயாரிக்கப்படுகின்றன என்ற பார்வை ஆழமாகவே அவர்களிடம் வேரூன்றியுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.
மொத்தத்தில் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் இலங்கைத்தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான உண்மையின் பதிவின் ஒரு துளி. உச்சிதனை முகர்ந்தால் ஒரு ஆவணம்.
-ஏலையா-
செய்தி.com

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv