சங்கீதா கிரீஷ் விவகாரம் தொடக்கமல்ல.. பொறுப்பிழந்து போகும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் தொடர்ச்சி...

வன்னிப் பெரு நிலப்பரப்பின், நந்திக்கடல்கரையில், 2009 மே மாதம் ஈழத் தமிழ்மக்களுக்கான தேசிய விடுதலைப் போராட்டம், பயங்கரவாதப் போராட்டமெனச் சித்தரிக்கப்பட்டு,
பல்வேறு நாடுகளின் கூட்டோடு அழித்தொழிக்கப்பட்டபோது, போராடி மறைந்த போராளிகள் பலரும், தங்கள் உறுதியான நம்பிக்கையாகப் புலம்பெயர் உறவுகளை இறுதியாகச் சொல்லி இறந்து போனார்கள்.களத்தில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த சிறிலங்கா அரசுக்கும், அதன் அடிப்பொடி நாடுகளுக்கும், அடுத்த தலையிடியாகவும், பேரச்சமாகவும் இருந்தது புலம்பெயர் தமிழர் சமூகம். போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களையும், போர்க் குற்றங்களையும், சர்வதேச நாடுகளில் காணப்படக் கூடிய மனித உரிமை கோட்பாடுபாடுகளின் அடிப்படையில், நீதிமுன் நிறுத்தக் கூடிய நிலைக் களத்தில் இருந்த இச் சமூகத்தின் பல்வேறு நாட்டுப் பரம்பல், இளைய தலைமுறையின் மொழியாளுமை, வதியும் நாடுகளில் பெற்றிருக்கக் கூடிய குடியியல் உரிமை, என்பனவற்றின் ஒட்டுமொத்தத் திரட்சியே அவ்வாறு அச்சம் கொள்வதற்கான காரணங்களாய் அமைந்தன.

போர் முடிவுக்கு வந்த சில நாட்களில், புலம்பெயர் சமூகம் குறித்த அச்சம் காரணமாக, புலம்பெயர் தமிழர்கள் குறித்த காட்டமான கருத்துக்களை ஆரம்பத்தில் முன் வைத்த சிறிலங்கா அரசு, இந்தச் சமூகத்தின் செயற்திறனைச் சிதைக்கும் வேலைத்திட்டங்களைப் பல்வேறு வழிகளிலும் கவனமாகவும், நுட்பமாகவும், புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் திட்டமிட்டு நகர்த்தியது. ஆனால் சிறிலங்கா அரசும், அதற்கு உதவும் நாடுகளும் எதிர்பார்த்ததிலும் பார்க்க இலகுவாகவே இந்தச் சமூகம் சிதறத் தொடங்கியிருக்கிறது.

நூற்றுக்கும் அதிகமான நாடுகளில், சிறப்பான வலையமைப்புடன் செயற்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளிநாட்டுக் கட்டமைப்புகளுக்குள் தோன்றிய உள்முரண்கள், புலம்பெயர் சமூகத்தின் மொத்த பலத்தையும் சிறிது சிறிதாகச் சிதறடித்து வருகிறது என்பதனை, ஈழவிடுதலையை நேசித்த மக்கள் எவரும் தீராவலியோடு புரிந்து கொள்ள முடியும். புலிகள் அமைப்பு இறுக்கமாக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகள் சில அதிருப்திக்களுக்கு உள்ளானவையாக இருந்த போதும், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒட்டு மொத்த பலம் என்பது பொது எதிரிக்கு எதிராக வலிமை மிகு சக்தியாக இருந்தது என்பது மறுக்க முடியாததது.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புக்குள், எழுந்த உள்முரண்கள், பிரபாகரனின் இருப்பு, மறைவு குறித்த எதிர்விவாதங்களில் முகிழ்விட்டது. பின் அது தலைமைத்துவ ஆளுமைகள் தொடர்பில் வளர்ந்தது. சர்வதேசச் செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதனின் கைதுக்குப் பின் அது பல்வேறு சந்தேகங்களையும் கருத்து முரண்பாடுகளையும் தோற்றுவித்தது. இதனைச் சிறிலங்கா அரசும் கவனமாக அவதானித்துக் கச்சிதமாகக் காய்நகர்த்தி வருகிறது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் செயற்திறனைச் சிதைக்கவும், நிதி மூலங்கள் குறித்து அறிந்து கொள்ளவும், கைப்பற்றவும், புலிகளின் பல்வேறு மட்டத்திலான முன்னாள் பொறுப்பாளர்களை வைத்தே, குழப்ப நிலைகளை உருவாக்கியது. இந்தச் செயற்திட்டத்தின் படி, புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஆகக் குறைந்தது மூன்று பிரிவுகளா தற்போது செயற்படுவதை அவற்றின் செயற்பாடுகளே வெளிப்படுத்தி நிற்கின்றன.

இவ்வாறான பிளவு நிலையால், புலம் பெயர் தமிழ் சமூகச் சக்தி பல துண்டங்களாகக் கூறு போடப்பட்டுக் கிடக்கிறது. இவை ஒவ்வொன்றுக்கும் பின்னால் இருப்பவர்கள், தாங்கள் தான் உண்மையான தலைமைத்துவக் கூறுகள் என்பதனை வெளிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளுக்குஒவ்வொரு பிரிவினரும், தமது கட்டுப்பாட்டினுள் இருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொருவரும் தமது நடவடிக்கைகளின் நியாயங்களை வெளிப்படுத்துவதாகக் கூறும் அதேவேளையில், எதிர்தரப்பினரை தூற்றியும், துரோகி என அடையாளப்படுத்தியும் வருகின்றனர். இந்த உள்முரண்பாட்டு மோதலில், இந்த நூற்றாண்டின் எளிமையும் பலமும் பொருந்திய ஊடகம் என ஆய்வாளர்களால் சுட்டப்படுகின்ற இணைய ஊடகவெளியும் வீணடிக்கப்பட்டே வருகிறது எனலாம்.

போரின் வடுக்களையும், மனித உரிமை மீறல்களையும், ஆவணப்படுத்தி முறையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அவற்றை அனைத்துலக மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி, ஒருங்கிணைக்க வேண்டிய தேவையினையும், மறந்து குழப்ப நிலைகளின் தோற்றுவாயாக மாறி நிற்கின்றன இந்த ஊடககங்கள்.

கருத்துக்களின் மோதல் என்பது தெளிவுகளை ஏற்படுத்தவே என்பதைத் தாண்டி, குழப்பங்களைத் தோற்றுவிக்கும் சூழலே தற்போது உருவாகியுள்ளது. அரசியல் நகர்வுகளின் நுட்பங்கள் தெரியாத, சராசரியான மக்கள் பெரும் குழப்பநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். யார் சொல்வது உண்மை என்பது புரியாத நிலை. இன்று புலம் பெயர் தமிழ் சமூகம் இவ்வாறான ஒரு குழப்ப நிலையிலே காணப்படுகிறது.

அவ்வாறான ஒரு குழப்ப நிலையிலேயே தென்னிந்தியப் பின்னணிப்பாடகர் கிரீஷ், மற்றும் நடிகை சங்கீதா ஆகியோர் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசினார்கள். இச் சந்திப்புக்கு சென்றிருந்த நமது செய்தியாளரால் அதனைத் தெளிவாக அவதானிக்க முடிந்ததாகக் குறிப்பிட்டார்.

அச் சந்திப்பில் கிரீஷ் குறிப்பிடது போன்று, இது ஒரு நீண்டு தொடரும் மோதல். இதன் பாதிப்புக்கள் புலம் பெயர் தமிழ் சமூகத்தையும் தாண்டி, தமிழகம் வரை ஏற்கனவே விரிந்திருக்கிறது. அது அரசியல் தலைவர்கள் மட்டத்திலேயே இதுவரை இருந்து வந்தது. ஆனால் தற்போது அதையும் தாண்டி, கலைஞர்கள் வரை சென்றிருப்பது விருப்பதிற்குரியது அல்ல.

2000 ம் ஆண்டின் தொடக்கத்தினை 'மிலேனியம்' என உலகம் உற்சாகமாகக் கொண்டாடத் தொடங்கிய போது, விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்கள் சுவிற்சர்லாந்தில் புத்தாண்டுக் கலைநிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி வந்தன. இந்நிகழ்ச்சிகளில் புலம்பெயர் சமூகத்தின் இளைய தலைமுறையினரது கலை நிகழ்ச்சிகள் பெருமளவிலும், தமிழகத்திலிருந்து சிறப்பாக அழைக்கப்படும் கலைஞர்களின் சிறப்பு நிகழ்சிகளும், உரைகளும் இடம்பெறும்.

சென்ற ஆண்டு இந்த நிகழ்ச்சி இருவேறு குழுக்களால் நடத்தப்பட்டது. இதில் ஒரு அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில், கிரீஷ் சங்கீதா கலந்து கொண்டனர். மற்றைய அமைப்பின் நிகழ்ச்சியில் சீமான், சிம்பு கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அது இறுதி நேரத்தில் தடைப்பட்டது. சென்ற முறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் தொடர்பில் ஏற்பட்ட நட்பினடிப்படையில், இம்முறை நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள கிரீஷ், சங்கீதா அழைக்கப்பட்ட போது சம்மதித்துள்ளனர். ஆனால் அந்த அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்ற மிரட்டல்களே தற்போது அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவற்றில் சரி எது பிழை எது என்பதைச் சொல்வதல்ல, அரசியற் காரணங்களுக்கு அப்பால் அபாயகரமான திசை நோக்கி இந்த உள்முரண்கள் நீண்டு செல்வதைச் சுட்டுவது ஒன்றே இப் பத்தியின் நோக்கம்.

தென்னிந்தியச் சினிமா உலகம், இலங்கைத் தமிழ் சினிமாவிற்கோ அல்லது புலம்பெயர்ந்த தமிழ் கலைஞர்களுக்கோ ஒட்டுமொத்தமான நன்மை எதனையும் செய்து விடப்போவதில்லை. ஆனாலும் அன்றிலிருந்து இன்றுவரை, அந்த சினிமா உலகம் சார்ந்த பலர், தங்கள் வகைக்கேற்ப ஈழத்தமிழ் சமூகத்துக்கு உதவி வந்திருக்கின்றார்கள். அவ்வாறான நோக்குள்ள கலைஞர்கள் சிலரே இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு இசைந்து வருகின்றார்கள். ஈழக் கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றார்கள். இது வளரும் ஈழத்து இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கான ஒரு நல்ல அறிமுகத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துவது மறுப்பதற்கில்லை.

சங்கீதா கிரீஷ் விவகாரம் தற்போது வெளிப்பட்டிருக்கும் சூழ்நிலையில், இவ்வாறான புரிந்துணர்வு நிலைகளில் பாதிப்புக்கள் ஏற்படும். இவ்வாறான கலைஞர்களுக்கு ஏற்படும் சிரமங்கள், மனக் கஷ்டங்கள், எதிர்காலத்தில் இணைவுச் செயற்பாட்டில் இணைந்து வரக் கூடிய கலைஞர்களை யோசிக்கவும், தவிர்க்கவும் செய்யும்.

அரசியல் ஆளுமை உள் முரண் போட்டிகளால் நியாயமற்ற வகையில் நல்லுறவுகள் சிதைக்கப்படுவது ஒட்டுமொத்த புலம்பெயர் சமூகத்தையும் எதிர்காலத்தில் தனிமைப்படுத்திவிடும். தாயகம் துறந்திருக்கும் புலம் பெயர் தமிழ் சமூகத்துக்கு இது ஆரோக்கியமானதாக அமையாது.

இந்த விவகாரம் உண்மையில் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கு பாதகமானதாக இருந்தால் அது நேர்மையாக வெளிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் பேச்சுவார்த்தைகளில் சமரசம் காணப்பட வேண்டும். அவ்வாறில்லாத எதிர்வினைகள், புலம் பெயர் தமிழ் சமூகத்தின் பொறுப்புமிகு செயற்பாடுகளைப் பலவீனமாக்கிவிடும். எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும்.

- 4தமிழ்மீடியாவிற்காக: வேல்மாறன் மற்றும் நாகன்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv