உயிர் கொலைக்கு உரிமை கோரும் தமிழக மருத்துவர் போராட்டம்


கடந்த சில நாட்களாக அரசு, மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் என எந்த வேறுபாடும் இன்றி ஒட்டு மொத்த மருத்துவர்களும் பணிப்புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்
இதனால் அரசு மருத்துவ மனைகளில் ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் மருத்துவர்களின் இந்த போராட்டம் பொது வெளியியில் மருத்துவ உலகினர் மீது கடும் எரிச்சலை உருவாக்கியிருக்கிறது. மருத்துவர்களின் இந்த போராட்டத்திற்கு என்ன காரணம்?
 சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி அரசு இஎஸ் ஐ மருத்துவமனையில் மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் சேதுலட்சுமி, மகேஷ் என்பரால் படுகொலை செய்யப்பட்டார்.அரசு மருத்துவரான சேதுலெட்சுமி கொல்லப்பட்டது அரசு மருத்துவமனையில் வைத்தல்ல அவரது தனியார் மருத்துவமனையில் வைத்து காரணம் சிம்பிள்தான்.
 மகேஷ் என்ப்வர் தனது ஆறு மாத கர்ப்பிணி மனைவியான நித்யாவை வயிற்றுவலி காரணமாக சேதுலெட்சுமி நடத்திவரும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவரை பரிசோதித்த டாக்டர் சேதுலெட்சுமி உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். மகேஷும் கடன் வாங்கி பணத்தைக் கட்டியிருக்கிறார். அறுவை சிகிச்சை நடந்த பின்னர் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து விட்டதாகவும் அறுவை சிகிச்சை செய்ததால் அவருக்கு மேலதிக சிகிச்சை தேவைப்படுவதாகவும் மகேஷிடம் கூறியிருக்கிறார் சேதுலெட்சுமி.
முறையான படிப்பறிவற்ற மகேஷ் மனைவியின் உயிரைக் காப்பாற்றும் படி சேதுலட்சுமியிடம் கெஞ்சியிருக்கிறார். ஆனால் மருத்துவரோ மேலதிகமாக பணம் கொண்டு வந்து கொடுத்தால் உயர் சிகிச்சைக்கு அனுப்புவதாகக் கூறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நித்தியாவை அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறார்.
மகேஷ் பணத்துக்காக அலைந்து பணம் கொண்டு வந்து கட்டி மனைவியை மீட்டு வேறு மருத்துவமனைக்குச் சென்ற போது நித்தியா பரிதாபகமரமான முறையில் உயிரிழந்துள்ளார். தன் மனைவி வயிற்றில் இருந்த குழந்தையை பறிகொடுத்த மகேஷ் சேது லெட்சுமியிடம் வந்து கேட்ட போது மகேஷுக்கு முறையான பதிலோ உரிய ஆறுதலோ கிடைக்கவில்லை.
இங்கே மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது சேது லெட்சுமி ஒரு மயக்க மருந்து நிபுணர் மட்டுமே ஆனால் அவரோ சட்டத்திற்கு புறம்பாக நித்தியாவுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். 
 விரக்தியடைந்த மகேஷ் தன் நண்பர்களுடன் சேர்ந்து சேதுலெட்சுமியை அவரது தனியார் மருத்துவமனையில் வைத்து கோரமான முறையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்.

மகேஷ் செய்தது நேரடியான கொலை. சேது லெட்சுமி செய்தது மறைமுகமான மருத்துவக் கொலை. இரண்டுமே தண்டனைக்குரிய குற்றங்கள். தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் தொடர்பாக காவல்துறையும் நீதித்துறையும் காட்டும் மௌனத்தின் தொடர்ச்சியே மகேஷின் உணர்ச்சிவசப்பட்ட இந்த படுகொலை. சேது லெட்சுமி ஒரு உயிரை வைத்து பேரம் பேசி ஒரு கொலையைச் செய்துள்ளார். பதிலுக்கு மகேஷ் சட்டத்தை நம்பாமல் தானே சேதுலெட்சுமிக்கு முடிவுரை எழுதி விட்டார்.
நோயாளிகள் மீது கருணையற்ற ஒரு பார்வையைக் கொண்டிருக்கும் லாப வெறியும் நோயையும், மருத்துவத்தையும் ஒரு வர்த்தகச் சூதாட்டமாக நடத்திவரும் ஒரு காலச்சுழலுக்குள்ளும் நாம் வாழ்கிறோம். சமீபத்தில் கொல்கொத்தா தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் நோயாளிகளிடம் இருந்து வசூலிப்பதை மட்டுமே பிரதானமாக கொண்டு இயங்கிய அந்த மருத்துவமனை தன் மருத்துவமனையில் பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் பொறுத்தவில்லை என்றும். சின்ன தீவிபத்து ஏற்பட்ட போது அதை பொருட்படுத்தாமல் விட்ட உண்மைகளும் கசிந்து வருகின்றன.
தமிழகத்தில் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையை உங்களுக்கு நினைவிருக்கும் ஏழைகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்கிறோம் என்று சொல்லி காலாவதியான மருந்துகளைக் கொண்டு கண் பரிசோதனை செய்து 30க்கும் மேற்பட்ட ஏழைகளின் கண்பார்வையை பறித்தது அந்த ஜோசப் கண் மருத்துவமனை.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஏழைகளிடமிருந்து கிட்னி திருடப்பட்ட விவாகரம் பூதாகரமாக பேசப்பட்டது. அந்த கிட்னி திருட்டுக்குப் பின்னால் பேசப்பட்டவை தமிழகத்தின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகள். இன்று அந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் மண் மூடி புதைக்கப்பட்டு விட்டன.
திருச்சியில் ஜோசப் கண் மருத்துவமனை எவ்வித தடையில்லாமல் இப்போதும் கடை விரித்திருக்கிறது,. இப்போதும் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏழைகளின் கிட்னிகளை திருடிச் செல்கிறார்கள் மருத்துவத் திருடர்கள். மணப்பாறையில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் தன் மகனை வைத்து ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார் ஒரு மருத்துவர். இப்படி ஒன்றா இரண்டா? தமிழகம் முழுக்க தனியார் மருத்துவமனைகளின் லாப வெறிக்கு பலியாகும் பலியான ஏழைகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும்.
வசதியுள்ளவர்கள் பெரிய தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் நிலையில் வறுமை நிலையில் உள்ளவர்கள் இன்னமும் நம்பியிருப்பது அரசு மருத்துவமனைகளை. ஆனால் அந்த அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் அரசு ஊழியத்தை தவறாக பயன்படுத்தி தாங்கள் தனியாக நடத்தும் கிளினிக்கைத்தான் வளப்படுத்திக் கொள்கிறார்களே தவிர ஏழைகளுக்குச் சேவை செய்வதில்லை. அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் பெரும்பலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை தங்கள் மருத்துவமனைக்கு கவர்ந்திழுக்கும் சட்டத்திற்கு புறம்பான வேலைகளையும் இவர்கள் செய்கிறார்கள். அறத்தைக் கொன்று விட்டு சேவைத் தொழிலான மருத்துவத் தொழிலுக்கு வரும் பெரும்பலான மருத்துவர்களே மகேஷ் போன்ற சமூகக் குற்றவாளிகளை உருவாக்குறார்கள். ஏதோ ஒரு வகையில் கையில் கத்தி வைத்திருந்த சேதுலெட்சுமி என்ற லாப நோக்கம் கொண்ட மருத்துவர்தான் ரத்த வெறி கொண்ட மகேஷ்களை உருவாக்குறார்கள். 
 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பல பத்தாயிரம் அரசு ஊழியர்கள் அதிமுக அரசால் சஸ்பெண்ட் செய்ய்ப்பட்டார்கள்.  தமிழகம் முழுக்க அரசு ஊழியர்கள் சிலர் அந்த நடவடிக்கையில் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்டார்கள்.
ஆனால் அன்றைக்கு அரசு ஊழியர்களின் போராட்டத்தை தன் வசப்படுத்திய திமுக ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அரசு ஊழியர்களுக்கு எதிராக பொது வெளியில் உருவாகியிருந்த சிந்தனைகளை திரட்டி பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு எதிராக நிறுத்தியது அதிமுக.
அன்றைக்கு ஆசிரியர்களின் கோரிக்கை ஊதிய உயர்வுதான். அரசு ஊழியர்களான அவர்கள் அரசு பள்ளிக்கூடங்களிலோ அரசு உதவி பெரும் பள்ளிக்கூடங்களிலோ ஆசிரியர்களாக பணி செய்பவர்கள். இது போக டியூசன் என்று சொல்லும் மாலை நேர கல்வி வகுப்புகளை வேண்டுமென்றால் நடத்துவார்களே தவிர தனியாக ஒரு பள்ளிக்கூடங்களை இந்த ஆசிரியர்கள் நடத்துவதில்லை. ஆனாலும் அரசு ஊழியர்களின் பொறுப்பற்ற போக்கும் சேவைப் பிரிவினர் என்ற உணர்வில்லாமல் நடந்து கொள்ளும் பொறுப்பற்ற போக்குமே அரசு ஊழியர்கள் மீதான பொது மக்களின் இந்த கசப்புக்கு காரணம். ஆசிரியர்கள் மீதான கசப்பை விட மருத்துவர்கள் மீதான கசப்பு மிக அதிகம். காரணம் அரசு ஊழியர்களாக இருக்கும் ஒவ்வொரு மருத்துவருமே தனியாக ஒரு மருத்துவமனையையும் நடத்துகிறார். தவிரவும் அரசு ஊழியம் தவிற வெளியில் சென்று சிறப்பு அறுவை சிகிச்சைகளைச் செய்தும் லட்சம் லட்சமாக பணம் செய்கின்றனர்.
நடந்து முடிந்து விட்ட இந்த கொடிய கொலைகளில் மகேஷின் வாக்குமூலங்கள் முக்கியமானவை, அவர் ஏன் கொன்றார் என்பதோடு மகேஷின் மனைவி நித்தியா எந்த மாதிரி நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் என்ன? சேதுலெட்சுமி எவ்வளவு தொகை பேரம் பேசினார். உண்மையில் அறுவை சிகிச்சை அறையில் என்ன நடந்தது. போலீசார் ஏன் இதில் மௌனமாக இருந்துள்ளனர். என எல்லா தரப்பு உண்மைகளும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். இதில் மேலும் நித்தியாக்களை மருத்துவக் கொலைகளில் இருந்து காப்பாற்றியாக வேண்டும். இதற்கு வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதோடு மக்கள் நல மருத்துவத்தை அரசு நடமுறைப்படுத்த வேண்டும் இதுவே இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு.
 வசந்தன்

2 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv