பெரியார் அணை: தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

முல்லைப் பெரியாறு அணை தேனி, கம்பம், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மலைப் பகுதியில் உற்பத்தியாகும் முல்லைப்பெரியாறு தண்ணீர் கேரள வழியாக வீணாகக் கடலில் கலந்து கொண்டிருந்தது. 

இந்தத் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திருப்பினால் 5 மாவட்டங்கள் பயன்பெறும் என்று அப்போது நாட்டை ஆண்டு வந்த ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. இதையடுத்து பென்னிகுயிக் என்ற ஆங்கில என்ஜினீயரின் திட்டப்படி முல்லைப்பெரியாறு அணை கேரள பகுதியான இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பட்டது.

இதற்காக 1.1.1886-ஆம் ஆண்டு திருவாங்கூர் மன்னருடன் ஆங்கிலேய அரசு 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த அணை கட்டும் பகுதியில் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் கேரளாவில் இருந்து வாடகைக்குப் பெறப்பட்டது.

இதற்கான தொகையை ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு இன்று வரை செலுத்தி வருகிறது. அணையில் கூடுதல் தண்ணீரை தேக்கினால் தமிழ்நாட்டுக்கு அதிக பயன் கிடைக்கும். எனவே தமிழ்நாட்டின் வளத்தைக் கெடுக்கும் நோக்கத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள அரசும், அரசியல் கட்சிகளும் வீண் புரளியை கிளம்பி வருகின்றன.

உறுதியாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணை பலகீனமாக இருப்பதாகவும், அது இடிந்தால் கேரளாவில் பல ஊர்கள் மூழ்கி விடும் என்றும் தவறான தகவல்களை அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அணை உறுதியாக இருப்பதை மேல் நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்றும் உத்தரவிட்டது.

ஆனால் கேரள அரசு இன்று வரை தீர்ப்பை மதிக்கவில்லை. அணையை இடிப்பதிலேயே குறியாக இருக்கிறது. நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கவேண்டும் என்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை முதல்-மந்திரி உம்மன்சாண்டி பிரதமரிடம் வழங்கினார். முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டுவதில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் உறுதியாக உள்ளன. கேரள அரசின் வீண்புரளிக்கு தமிழக தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் போராட்டம் நடத்தி உள்ளன. 5 மாவட்ட மக்களும் கேரள அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழக மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பதை அறிவிக்கும் வகையில் தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 11ஆந் திகதி வெளியிட்டார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் தொடங்கியது. இதில் தே.மு.தி.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் ஜெயக்குமார் முல்லைப்பெரியாறு அணை தொடர்பான அரசின் தனித்தீர்மானம் கொண்டு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா, "முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது. இந்த அணையின் மீது உள்ள உரிமையை தமிழ்நாடு விட்டுக் கொடுக்காது" என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ஜெயக்குமார் ஆகியோரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

தே.மு.தி.க., தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ம.க., புதிய தமிழகம், குடியரசு கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பிலும் பேசியவர்கள் முல்லைப்பெரியாறு அணையால் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறினர்.

நிறைவாக முல்லைப் பெரியாறு அணை மீதான உரிமை பற்றிய தனி தீர்மானத்தின் அவசியம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விரிவாகப் பேசினார்.

அதில், முல்லைபெரியாறில் 142 அடி நீர்த்தேக்க கேரள பாசன சட்டத்தில் திருத்தம் தேவை. முல்லை பெரியார் அணையில் மத்திய பொலிஸ் பாதுகாப்புப் படையை நிறுத்த கேரள அரசு மறுக்கக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. தீர்மானம் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv