'மிகவும் மோசமான நிலையில் வடக்கு கிழக்கு பெண்கள்'

உள்நாட்டுப் போரின் பின்னான காலப்பகுதியில் இலங்கையில் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்குகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண்கள் மிகவும் மோசமான பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக சர்வதேச நெருக்கடிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இண்டர்நேஷனல் கிரைசஸ் குரூப்( ஐ சி ஜி) என்னும் அமைப்பு கூறியுள்ளது.

இன்றும் பல விதமான காரணங்களால் வடக்கு கிழக்கைச் சேர்ந்த பெண்கள் வன்செயல் குறித்த அச்சங்களை எதிர்நோக்குவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் மிகவும் பிந்தங்கிய நிலையில் இருப்பதாகவும், அவர்களது நடமாடுவதற்கான ஆற்றல் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
இராணுவ பிரசன்னம்
பெரிதும் இராணுவ மயப்படுத்தப்பட்ட மற்றும் அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப்பட்ட நிலையில், வடக்கு கிழக்கில், பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட இராணுவத்தின் மத்தியில் வாழும் தமிழ் பெண்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு உணர்வு, உதவிகளுக்கான வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்றும், தமது வாழ்க்கை குறித்த கட்டுப்பாடு எதுவும் அவர்களது கையில் இல்லை என்றும், அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவும் அங்கு கிடையாது என்றும் ஐ சி ஜி விமர்சித்துள்ளது.
பெண்களின் பாதுகாப்பு விடயங்கள், அதிகரித்த அச்சங்கள் ஆகியவற்றை அரசாங்கம் பெரும்பாலும் நிராகரிப்பதாக அது கூறுகிறது.
இந்த முன்னாள் போர் வலயத்தில் உள்ள பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் சாவால்கள் தொடர்பில் சாதகமாக நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச சமூகமும் தவறி விட்டது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அத்துடன் அந்தப் பெண்களின் பிரச்சினைகளை களைவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட, உடனடி நடவடிக்கைகள் தேவை என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பெண்களின் உடல் ரீதியான பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவை குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது அச்சங்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக இராணுவ முகாம்களையும், சோதனைச் சாவடிகளையும் மூடுவதன் மூலமும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்கள் இடங்களை திரும்ப வழங்குவதன் மூலமும், இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.
அதிகாரப் பகிர்வு
வடக்கு கிழக்கில் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கும், உள்ளூராட்சி சபைகளுக்கு பகிரப்படுதல் மூலம் அவை பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
பொலிஸ் படைகளில் தமிழ் பேசும் அதிகாரிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.
சர்வதேச அமைப்புக்கள் இலங்கைக்கான தமது உதவிகளின் போது பெண்கள் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் ஐ சி ஜி கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தவை உட்பட இலங்கை நிகழ்வுகள் குறித்த தமது கண்டுபிடிப்புக்கள் குறித்து ஐநாவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது கேட்டிருக்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv