கொலைவெறி... கொலைவெறி... டீ... - இது இளைஞர்களின் பாக்கெட்டை குறி பார்க்கும் இலாபவெறி ...!


இந்த கொலைவெறி தமிழின் மீதா... 
அல்லது தமிழ் சினிமாவின் மீதா ...?


               கடந்த பத்து நாட்களாக வீடு, அலுவலகம், கடைவீதி, பீச் - இப்படி எங்கு போனாலும் ''கொலைவெறி... கொலைவெறி... டீ...'' என்கிற பாடல் தொலைகாட்சி, எப்.எம் ரேடியோ, மொபைல் ரிங் - டோன், வலைத்தளம்  எல்லாவற்றிலும் அலறிக்கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் அந்த பாடல் எதோ காதை கூசுகிற மாதிரி இருந்ததால் அலட்சியம் செய்துவிட்டேன்.
.. ஆனால் இளைஞர்கள் வெளியே பேசுவதையும், வலைத்தளத்தில் எழுதுவதையும் உற்று பார்க்கும்போது  தான் ஆச்சரியமாக இருந்தது.
                         அந்த பாட்டை நடிகர் தனுஷ் பாடியிருக்கார். தனுஷ் நடிகை சுருதிஹாசனுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படமாம்  அது. படத்தின் பெயர் ''மூன்று'' தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்க அனிரூத் என்ற இளைஞர் இசையமைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.   இந்த செய்திகளை  எல்லாம் இப்போது தான் தெரிந்துகொண்டேன். ஆனால் இந்த படத்தின் விளம்பரம் செலவில்லாமல் எந்த அளவிற்கு மக்களை சென்றடந்திருக்கிறது பாருங்கள். வலைத்தளத்தில் லட்சக்கணக்கானோர் பார்த்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் ''லைக்'' பண்ணியிருக்கிறார்கள். 
               அப்பப்பா.... என்ன கொலைவெறிங்க அது... யாரு மேல அவ்வளவு கொலைவெறின்னு தெரியல... பொதுவாவே தனுஷ் படம்மென்றால்  பார்க்கிறதுக்கே  யோசிக்கணும்... ஏன்னா... அவர் படத்துல நல்லநல்ல கருத்துக்களெல்லாம் சொல்லுவாரு... நண்பர்களோடு சேர்ந்து ''தண்ணி'' அடிப்பாரு... ''தம்'' அடிப்பாரு.. அப்பாவை மரியாதையில்லாம பேசுவாரு.... அப்பா பாக்கெட்டில் இருந்தே காசு திருடுவாரு... இது போல்  நல்லநல்ல விஷயங்கள் தான் அவர் படத்துல அதிகமா இருக்கும். இது தான் இந்த காலத்து ஹீரோக்களின் தரம்... ''நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே'' என்று இளைஞர்களுக்கும்  குழந்தைகளுக்கும்  சினிமா ஹீரோ அறியுரை சொன்னக் காலமெல்லாம்  போய்விட்டது.  
                இதுவரையில் தனுஷ் ஹீரோ கதாப்பாத்திரங்களைத் தான் கொலைசெய்து வந்தார். இப்போது முதல்முறையாக ஒரு பாட்டையே கொலை  செய்து இருக்கிறார். பாட்டை மட்டுமா... தமிழ், ஆங்கிலம், இசை இப்படி எல்லாவற்றையும் அல்லவா தீர்த்துக்கட்டியிருக்கிறார். யாரு மேல இந்த கொலைவெறி... எத்தனை காலமா இந்த கொலைவெறி... தானே எழுதி.. தானே பாடியிருக்கிறார்....தமிழையும் ஆங்கிலத்தையும் கடித்துக் குதறி கொலை செய்து இருக்கிறார். பெண்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார். யார் மீது கோபம்...? பெண்களின் மீதா..?  தான் நடித்த படங்களெல்லாம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்பதால் தன் இரசிகர்களின் மீது கோபமா... அதனால் அவர்கள் மீது ஏற்பட்ட கொலைவெறியா..? இதை இன்றைய இளைஞர்கள் கண்டித்திருப்பர்களா...?
               இதே சினிமா உலகத்தை நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கிறேன். நாற்பது ஆண்டிகளுக்கு முன்பு வந்த இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய ''கல்யாணப்பரிசு'' திரைப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் எழுதியவர் ''மக்கள் கவிஞன்'' பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவார். இயக்குனர் ஸ்ரீதர் கவிஞரிடம் படத்தின் கதைகளையும் சூழ்நிலைகளையும் சொல்லி பாடல்களை கேட்டார். அப்போது இயக்குனர் ஒரு பாடலில் ''முத்தம்'' என்ற வார்த்தை வரவேண்டும் என்று கவிஞரிடம் கோரியிருக்கிறார். அதை கேட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கோபமுற்று எழுந்து சென்றுவிட்டார்.  ஒட்டுமொத்த திரைப்படத்தின் பாடல்களை  எழுதும் வாய்ப்பையே தூக்கி எறிந்துவிட்டார்.   அதைக்கண்ட இயக்குனர் கவிஞரின் பின்னாலேயே சென்று சமாதானம் செய்து, உங்கள் இஷ்டப்படியே எழுதுங்கள் என்று இயக்குனர் சொன்னார். அதற்கு பட்டுக்கோட்டையார் பதிலளிக்கும் போது, '' முத்தம் என்பது கெட்டவார்த்தை ( அந்த காலத்தில் ) அதை எல்லாம் பாடலில் எழுதினால், பாடலைக்  கேட்கும் இளைஞர்களும், குழந்தைகளும் கெட்டுப்போய்விடுவார்கள். அதனால் தான் எழுதமாட்டேன் என்று சொன்னேன்'' என்று சொல்லி இருக்கிறார்.  
                      இயக்குனரின் சமாதானத்திற்குப் பிறகு தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை எழுதினார். எப்படி எழுதினார் தெரியுமா...?  இயக்குனரையும் திருப்திப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் கல்யாணப்பரிசு திரைப்படத்தில் தீபாவளி பற்றிய பாடலில் '' உன்னைக்கண்டு நான் ஆட... என்னைக்கண்டு நீ ஆட...'' என்றப பாடலில் ''கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாகத் தாடா..'' என்று முத்தம் என்ற வார்த்தையை மறைத்து அற்புதமாய் எழுதியிருப்பார். அன்றைக்கு பட்டுக்கோட்ட கல்யாணசுந்தரம் போன்றவர்கள் காசுக்காக எழுதாமல், சமூகத்திற்காக எழுதினார்கள்.
               ஆனால் இன்றோ... சமூகத்தைப்பற்றி... இளைஞர்களைப் பற்றி... குழந்தைகளைப் பற்றி அக்கறை இல்லாத... சிந்தனை இல்லாத கவிஞர்களும்   நடிகர்களும் தான் இன்றைக்கும் இருக்கிறார்கள். சமூக அக்கறையில்லாமல் காசுக்காக எழுதக்கூடிய கவிஞர்கள்  தான் இன்றைக்கு இருக்கிறார்கள்.
            இதைத்  தான் இந்த ''கொலைவெறி'' பாடலும் காட்டுகிறது... படம் வெற்றிபெறுவதற்கு இப்போதே இளைஞர்களை இப்போதே உசுப்பேற்றிவிடும் செயல் தான் இது. இந்த செயல் என்பது, இளைஞர்களின் பாக்கெட்டையும் பர்சையும் குறிவைத்து, இலாபவெறி பிடித்து செய்யும் செயலாகும். சமூகத்தைப்பற்றி அக்கறையில்லாமல் இலாபம் ஒன்றே குறிக்கோளுடன் செய்யப்படும் செயல் என்பதை இன்றைய இளைஞர்கள் உணரவேண்டும். இப்படிப்பட்ட ''கொலைவெறி'' பிடித்து.. ''இலாபவெறி'' பிடித்து வரும் பாடல்களையும் திரைப்படங்களையும்  தூக்கிஎரியவேண்டும்.

ஆயுத எழுத்து


தனுசின் கொலைவெறி கேட்டு இதயம் கல்லாக்கிப் போனவர்களின் இதயத்துக்கு இதமாக இந்தப்பாடல் உதவும் என்று நம்புகின்றேன். தயவுசெய்து யாரேனும் தனுசுக்கு இந்தப்பாட்டை காட்டுங்களேன்! கொலைவெறியின் இழிநிலையை அவர் அப்போதுதான் புரிந்து கொள்வார்!


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv