எங்கே செல்கிறது எமது இளைஞர் சமுதாயம்????


அன்புக்குரிய தமிழ் இளைஞர்களுக்கு வணக்கம்! 30 ஆண்டுகள் போர் நடந்த பூமியிது. போர் என்பதன் அடுத்த பக்கம் விடுதலைப் போராட்டம் என்பதாக இருக்கும்.
அந்தப் போராட்டத்தின் முடிவு, உயிரிழப்பு, சொத்தழிவு, வேதனை, சோதனை என்பதாக முடிந்து போனது என்றே நினைத்துக் கொண்டோம்.
ஆனால் போரின் முடிவு தமிழ் இனத்தின் ஆணிவேரை உக்க வைத்து கிளை, இலை, பூ, காய் கனி என எல்லாவற்றையும் உதிர வைத்து விடப்போகின்றது என்பதை இப்போது உணரும் போது, இதை எழுதும் காகிதாதிகளும் நனைந்து கொள்கின்றன.

எங்களை நாங்கள் அறிய முன்னதாக விடுதலைப் போராட்டத்தை நடத்தி முடித்து விட்டோமா? அல்லது விடுதலைப் போராட்ட காலத்தில் எங்கள் இளம் சமூகத்தின் மீதான கட்டுப்பாடுகள் ஓர் அடக்குமுறையின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டு விட்டனவா? அல்லது எங்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பின் மத்தியில் வாழ்வுக்கான விருப்பை முழுமையாக இழந்து விட்டோமா? எதுவுமே புரியவில்லை.

அன்புக்குரிய தமிழ் இளைஞர்களே, உங்களின் பொறுப்பற்ற போக்கு, எங்கள் மாணவர் கைளில் ஹெரோயினைக் கையளித்துள்ளது. உங்களின் அக்கறையற்ற தன்மை, பாலியல் வியாதிகளை பரப்பி வருகிறது. 


நீங்களோ! மதுபானசாலைகளில் குந்தியிருந்து குடித்து பகுத்தறிவைத் தொலைத்து பாழாகிப் போகாதீர்கள். வெளிநாடுகளில் உள்ள எங்கள் உறவுகள் உங்களை நினைத்து உறக்கமின்றி வியர்வை சிந்தி தங்கள் உழைப்பை இங்கு அனுப்ப, நீங்களோ குடித்த சாராயப் போத்தலை வீதியில் போட்டுடைத்து விட்டுப் போவதென்றால் எப்படி எம்மினம் விடிவு பெறுவது?

உன் தந்தை, உன் தம்பியை ஊரெல்லாம் கொண்டு திரிந்து ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய வைத்து கல்லூரியில் சேர்த்துவிட்டு காப்பாற்றுவான் என்று காத்திருக்க, அவனோ ஹெரோயினுடன் அலைந்துதிரிகிறான்.

என்ன செய்வது? எங்கள் இனம் இப்படியில்லை என்று சொல்ல இனி எந்த இளைஞர்கள் எழுந்து வரப் போகிறார்கள். எங்கள் அரசியல்வாதிகள் தேர்தலுக்காய் அடுப்பு மூட்டுகிறார்கள். 


பொது அமைப்புகள் தங்கள் இருப்புக்காக அறிக்கை விடுகின்றன. பல்கலைக்கழக மாணவர்களோ மதுக்கடையில் பைலா போடுகிறார்கள்.பெற்று வளர்த்த தமிழ் அன்னை குந்தியிருந்து கண்ணீர் விடுகிறாள். ஓ இறைவா! நீயுமா ஊக்கம் கொடுக்கிறாய்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv